பெரியார் தாத்தா நினைவுநாள் – டிசம்பர் 24 : ”எனக்கு அடையாளம் ’சந்திராயன்’! அதில் பெரியாருக்கு என்ன பங்கு?”
அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை
“ஹாய் கதிரன், இந்தியாவிலிருந்து எப்போ திரும்பின?” ஊருக்குப் போயிருந்த கதிரனை விசாரித்தான் சிங்கப்பூரின் வுட்லேண்ட்ஸ் பகுதியில் வசிக்கும் நிலவன்.
“எங்க பெரியப்பாவுக்கு நவம்பர் 14 பிறந்தநாள். அதை முடிச்சுட்டு அன்னிக்கு இரவே கிளம்பி வந்துட்டோம்” என்றான் கதிரன், இருவரும் பள்ளி நண்பர்கள்.
“ரெண்டு நாளைக்கு முன்னால கிளம்பி சிங்கப்பூர் வந்திருந்தால், உனக்கு ரொம்பப் பிடிச்சவருடைய பேச்சைக் கேட்டிருக்கலாம்.” என்று நிலவன் சொன்னதும் கதிரனுக்கு வியப்பு.
“அப்படியா?” என்றான்.
“ஆமாம், நீ அடிக்கடி சொல்வியே, சந்திராயன். அதை முதன்முதலில் இந்தியாவிலிருந்து நிலவுக்கு அனுப்பினவரான மயில்சாமி அண்ணாதுரை சிங்கப்பூர் வந்திருந்தாரு. செம்மயா பேசினாரு. எங்க அம்மா கம்ப்பெல் பண்ணாங்கன்னு தான் போனேன். பட் ஒரு மணிநேரம் நான் ஹேண்ட்போனையே எடுக்கலன்னா பார்த்துக்க!” என்றான் நிலவன்.
“ஓ… மிஸ் பண்ணிட்டேனே! என்ன டாப்பிக்ல பேசினாரு?” கதிரன் கேட்டான்.
“பெரியாரும் அறிவியலும்!”
“இஸ் இட்? இவரு இஸ்ரோல வொர்க் பண்ற ஸ்பேஸ் சயண்டிஸ்ட்! இவர் ஏன் பெரியாரைப் பற்றிப் பேசினாரு! பெரியார் அரசியல், சமூகம் இப்படி வேலை செஞ்சவர் தானே! பெரியாருக்கும் அறிவியலுக்கும் என்ன தொடர்பு?” என்று கேட்டான் கதிரன்.
“இப்படித்தானே எல்லோரும் சாதாரணமா நினைப்பாங்க! ஆனால், டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை என்ன சொன்னார் தெரியுமா? நான் சந்திராயன் அனுப்பினதுக்கே பெரியாரின் கருத்து தான் பேஸா இருந்துச்சுன்னு சொன்னாரு!” என்றான் நிலவன்,
கதிரன் வாயைப் பிளந்துவிட்டான்.
“ஆமா, நானும் இப்படித்தான் ஆச்சரியத்தோட பேச்சைக் கேட்டேன். பிபிடி-ல நிறைய ஸ்லைட்ஸ் போட்டு, பெரியாரோட பொன்மொழிகளைச் சொல்லி, அது எப்படி அறிவியலுக்கு சப்போர்ட் செய்யுது. எனக்கு எப்படி அது யூஸ் ஆச்சுன்னு சொன்னாரு!”
“ஓ!”
“உன் சாத்திரத்த விட, உன் முன்னோர விட, உன் வெங்காயம் வௌக்கமாத்த விட, உன் அறிவு பெரிது, அதை சிந்தி!’ அப்படின்னு பெரியார் சொன்னது எவ்வளவு முக்கியமானதுன்னு சொன்னாரு.
‘யாரு சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொல்லியிருந்தாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே!ன்னு பெரியார் சொன்னது சந்திராயன் சக்சஸுக்கு எவ்வளவு உதவியா இருந்துச்சுன்னு சொன்னாரு!” என்று பேச்சில் தான் கேட்டதை எடுத்துச் சொன்னான் நிலவன்.
“பெரியார் சொன்னது சரிதான். பட், இதில என்ன சயன்ஸ் இருக்கு? அதிலயும் ராக்கெட் சயன்ஸ்?” கதிரனுக்கு இன்னும் புரியவில்லை.
“கதிரன், அதை அழகா மயில்சாமி அண்ணாதுரை சொன்னாரு. ஆக்சுவலா, அவர் பேரு அண்ணாதுரை தான்! தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராவும், பெரியாரோட மாணவராவும் இருந்த அறிஞர் அண்ணாவோட பெயரைத் தான் இவருக்கு வச்சிருக்காங்களாம். மயில்சாமி அவங்க அப்பா பேராம்.
ஓகே, அண்ணாதுரை சார் என்ன சொன்னாரு தெரியுமா? அமெரிக்கா, ரஷ்யான்னு இதுக்கு முன்னாடி நிலாவுக்கு ராக்கெட் அனுப்பினவங்க எல்லாம் அங்க நீர் இருக்க வாய்ப்பில்லைன்னு திரும்பிட்டாங்க.. ஆனால், அதை எல்லாம் நம்பி, அப்படியே விட்டுடாம, யார் சொல்லியிருந்தாலும், அதைப் பற்றிக் கவலைப்படாம,. வேறு வகையில சிந்திச்சு சந்திராயனைத் திட்டமிட்டதாலதான், அது நிலாவில நீர் இருக்குன்னு கண்டுபிடிக்க முடிஞ்சது! அதுக்கு பெரியாரோட சிந்தனைதான் காரணம்னு சொன்னார், வள்ளுவர் சொன்ன ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்’ங்கிற குறளையும் சரியா எடுத்துக்காட்டினார்” நிலவனுக்கு அந்தப் பேச்சு எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தது என்பதை அவனது ஆர்வம் வெளிக்காட்டியது.
கதிரனுக்கு வியப்பும், அவர் பேச்சைத் தவறவிட்டுவிட்டோமே என்ற வருத்தமும் ஒருசேர ஏற்பட்டன.
“எனக்கு என்ன யோக்கியதை என்றால், துணிவு ஒன்றுதான்’ அப்படின்னு பெரியார் சொன்னதைச் சொல்லி, அறிவியலுக்கு துணிச்சல் தானே முக்கியம்னு ரொம்ப அழகா விளக்கம் சொன்னார். நீயும் அவர் ஸ்பீச்சைக் கேட்கணும் இல்லையா?”
“ஆமா நிலவன் மிஸ் பண்ணிட்டேன். ஆனா, இப்போ எப்படி கேட்குறது?” ஆர்வம் கதிரனைத் தொற்றிக் கொண்டது.
“அதுக்கும் சயன்ஸும், பெரியாரும் சேர்ந்து நமக்கு உதவுவாங்க. பெரியார் வலைக்காட்சியில அந்த ஸ்பீச் போட்டிருக்காங்க. நானே ரெண்டு மூணுவாட்டி அந்தப் பேச்சைக் கேட்டுட்டேன். உனக்கு கியூஆர் கோட் ஷேர் பண்றேன். நீயும் பாரு!”
“ரொம்ப நன்றி நிலவன். பெரியார் சோஷியல் சயண்டிஸ்ட்-ன்னு எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க! அவர் அறிவியலுக்கு எப்படி முக்கியமானவருன்னு நான் இப்போ தெரிஞ்சுக்கிட்டேன். அமேஸிங்ல! அவரோட 50-ஆம் நினைவு நாள் வரப்போகுதாம். இன்னும் நம்ம ஜெனரேசனுக்கும் அவரோட அய்டியாலஜி பயன்படுதே!”
“அதுதான் கதிர்! பெரியார் இன்னும் பல தலைமுறைகளுக்கு நமக்கு வழிகாட்டுவார்! அவருடைய சிந்தனை அப்படிப்பட்டது! நீயும் இந்த ஸ்பீச்சைக் கேட்டுட்டு உன் நண்பர்களுக்கு ஷேர் பண்ணு! வில் கேட்ச் யூ லேட்டர்!” என்று கைப்பேசியை அணைத்தான் நிலவன்.