சின்னக்கதை – இந்தப் பழம் இனிக்கும்
நண்பர்களான நரிகள் இரண்டும் சேர்ந்தே இரைதேடச் செல்லும். அப்படி ஒரு நாள் சென்றபோது, சில நாள்களாக நமக்குச் சரியான உணவே கிடைப்பதில்லை அப்படியே கிடைத்தாலும் உணவைச் சாப்பிட்டதும் தண்ணீருக்காக நீண்ட தூரம் அலைய வேண்டியுள்ளது. என்ன செய்வது என்று தங்களுக்குள் பேசிக் கொண்டே நடந்தன.
அப்போது பின்னால் வந்த நரியும் இதே கவலையில், தன் இன நண்பர்கள் பேசிச் செல்வதைக் கேட்டுக் கொண்டே வந்தது.
சரியாகச் சொன்னீர் கள் நண்பர்களே, இதே கவலையில் தான் நானும் உங்களைப் போல மனதினுள் சிந்தித்து வருகிறேன். நீங்கள் பேசிக்கொண்டு செல்கிறீர்கள் என்று கூறியது. இதனைக் கேட்ட நண்பர்கள், என்ன செய்வது? இப்படியே நிலைமை இருந்தால் நீரின்றி உணவின்றி நாம் இறந்துவிட வேண்டியதுதான். நம் இனமே அழிந்துவிடும் போல் உள்ளதே என்று வருத்தமுடன் பேசின.
இதனைக் கேட்ட மூன்றாவது நரி, நமக்குத் தேவையான உணவு இருக்குமிடம் ஒன்று உள்ளது என்றதும் எங்கே… எங்கே உள்ளது? உண்மையைத்தான் சொல்கிறாயா? என்றன. உண்மையாகத்தான் சொல்கிறேன் என்றது
இருக்குமிடத்தை எங்களுக்குச் சொல் அல்லது அழைத்துச் செல். நாம் அனைவரும் பகிர்ந்து சாப்பிடலாம் என்றது. இதனைக் கேட்ட மூன்றாவது நரி, உணவு இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். ஆனால்….. என்றது. என்ன ஆனால் போனால் என்று சொல்லிக் கொண்டு நேரத்தை வீணாக்கிக் கொண்டு இங்கேயே நிற்கிறாய்? வா செல்லலாம் என்று அந்த நரியினை அழைத்துச் சென்றன.
நரிகள் மூன்றும் நடக்கத் தெம்பில்லாத நிலையில், பிற மிருகங்களின் கண்களில் படாமல் நடந்து சென்றன. அழைத்துச் சென்ற நரி ஒரு பெரிய திராட்சைத் தோட்டத்தின் அருகே சென்றதும் நின்றது. நண்பர்கள் இருவரும் உணவு எங்கே உள்ளது? எங்களை இவ்வளவு தூரம் நடக்க வைத்து ஏமாற்றிவிட்டாயா-? என்றன.
கொஞ்சம் அந்தத் தோட்டத்தில் படர்ந்துள்ள கொடிகளுக்குக் கீழே அழகாகத் தொங்கும் திராட்சைக் கொத்துகளைப் பாருங்கள் என்றதும் நண்பர்கள் இருவரும் பார்த்து பிரமிப்பில் _ பசியில் உமிழ்நீர் சுரந்து நின்றன.
இதனைப் பார்த்தவுடனேயே வாயில் நீர் சுரந்து நின்றுவிட்டீர்களே, சாப்பிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் தெரியுமா என்றது. ஆமா, எப்படிச் சாப்பிடுவது? இவ்வளவு உயரத்தில் உள்ளதே, நாமோ உருவத்தில் சிறியவர்கள். நம்மால் எப்படி அதனைச் சாப்பிட முடியும் என்று வருத்தத்துடன் கூறின.
முயற்சி செய்தால் எதுவும் முடியும். யோசிப்போம், ஏதாவது வழி கிடைக்கும் என்றது மூன்றாவதாக வந்த நரி. யோசித்தால் நேரம்தான் போகுமே தவிர பழங்களைச் சாப்பிட்டு நம் வயிறு எப்போது நிறைவது?
நிச்சயம் முடியும் நண்பர்களே, நாம் மூவரும் சிந்தித்து வழி காண்போம் என்றதும் நண்பர்களுள் ஒன்று, சீச்சீ இந்தத் திராட்சைப் பழங்கள் புளிப்புச் சுவையுடையவை, வாருங்கள் வேறு இடத்திற்குச் சென்று இரை தேடலாம் என்றது. சாப்பிட்டுப் பார்க்காமல் இந்தப் பழம் புளிக்கும் என்று உன்னால் எப்படி ஒரு முடிவுக்கு வர முடிந்தது? முடியாதவர்கள் – சோம்பேறிகள்தான் தங்கள் இயலாமையினால் – சோம்பேறித்தனத்தினால் இப்படிப்பட்ட பதிலினைச் சொல்வர். சிந்தித்தால் ஏதாவது ஒரு வழிமுறை நிச்சயம் கிடைக்கும் என்று மூன்றாவது நரி கூறியதும் ஆர்வத்தில் மூன்றும் மூளைக்கு வேலை கொடுத்தன.
நரிகள் மூன்றும் சுற்றிலும் கண்களால் தேடியபடி யோசித்தன. நண்பர்களே, நாம் எம்பிக் குதித்து திராட்சைப் பழங்களைப் பறித்து ருசிக்கலாமா என்றது ஒன்று. எவ்வளவு உயரத்திற்கு நம்மால் தாவிக் குதிக்க முடியும்? ஏதாவது பயனுள்ள ஆலோசனையாகச் சொல் என்றது இன்னொன்று. ஆகா, எனக்கு ஒரு வழி கிடைத்துவிட்டது என்றது மூன்றாவது நரி மகிழ்ச்சியுடன்.
பழங்களைச் சாப்பிடும் ஆர்வத்தில் மற்ற இரு நரிகளும் சொல் சொல் என்றன. அதோ தெரிகிறதே அந்த மரத்தைப் பாருங்கள். அந்த மரத்தின் கிளையானது மிக அருகிலேயே பிரிந்து இரு பெரிய கிளைகளாகச் செல்கிறது. அதில் ஒன்றின் கிளை திராட்சைப் பந்தலை ஒட்டிச் செல்கிறது. அதன் கீழே நிறைய திராட்சைக் கொத்துகள் உள்ளன பாருங்கள் என்றது.
மரத்தின் அருகில் சென்ற நரிகள் கிளையினை நிமிர்ந்து பார்த்தன. இதன் உயரம் கொஞ்சம் அதிகமாக உள்ளதே. நமது மகிழ்ச்சி சிறிது நேரத்தில் துன்பமாக மாறிவிட்டதே என்று புலம்பின.
அப்போது மூன்றாவது நரி, நண்பர்களே துன்பத்தை இன்பமாக மாற்றலாம். கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள் என்றது. பின்பு சிறிது நேரத்தில், நண்பர்களே நாம் குனிந்து நின்று ஒருவர் மீது ஒருவர் ஏறி மரத்தின் கிளையினைத் தொட முடிகிறதா என்று பார்ப்போம் என்றது.
அழகாக வளைந்து கொடுத்து ஒன்றன்மீது ஒன்றாக ஏறி ஒரு நரி மரக்கிளையில் ஏறியது. திராட்சைக் கொடி படர்ந்திருந்த இடத்தின் அருகில் சென்று பழங்களைப் பறித்தது. மரக்கிளையில் ஏறிய முறையிலேயே மீண்டும் நண்பர்களின் துணையுடன் கீழே இறங்கியது.
நண்பர்கள் மூவரும் திராட்சைப் பழங்களை ரசித்து ருசித்துச் சாப்பிட்டு மகிழ்ந்தன.
– செல்வா