துணுக்குச் சீட்டு – 13 : “பாலை வண்டைப் பார்த்தான்! பசுமைத் திட்டம் படைத்தான்!”
நமிபியப் பாலைவனத்தில் ஒரு பயணக்குழு அதிகாலை வேளையில நடந்து போய்க்கிட்டு இருந்தாங்களாம், அப்போ அவங்க கிட்ட இருந்த தண்ணீர் காலி ஆகுற நிலையில் இருந்துச்சாம்… கதை சொல்றேன்ல, ‘உம்’ சொல்லுங்க பா, தண்ணீர் வேணுமேனு யோசிச்சிட்டு நடக்கும் போது அங்க நமிபியப் பாலைவன வண்டு ஜாலியா உடம்பு முழுக்க நல்ல தண்ணீர் கொட்டி வச்சதுபோல நின்னுட்டு இருந்துச்சாம். அது எப்படி நல்ல தண்ணீர்னு தெரியும்? சரி logic வேணுமா, அந்த பயணக்குழுவுல ஒருத்தர் அதை வீட்டுக்குப் போகும்போது பத்திரமா எடுத்துட்டுப் போய், ஆய்வுக்கூடத்தில் வச்சி ஆராய்ச்சி பண்ணிணாங்க. Ok வா? இப்போ கதைக்கு வருவோம். நம்ம பயணிகள், உடம்பு வேர்த்து சுற்றி பார்த்தா, நல்ல தண்ணீர் எங்கையுமே இல்ல, அப்போ எப்படி இந்த வண்டுக்கு மட்டும் தண்ணீர் கெடைச்சி இருக்கும்?
மேல சொன்ன பயணிகள் கதை கற்பனை என்றாலும், நமிபியப் பாலைவன வண்டும் அதன் உடம்புல தண்ணீர் இருந்ததும் உண்மை.
அதிகாலை வேளையில் பாலைவனத்திலேயும் ஈரக்காற்று அடிக்கும். அந்த நேரத்துல, நம்ம நமிபியப் பாலைவன வண்டு மணல் மேட்டுக்கு மேல போய் ஈரக்காற்றுக்கு எதிராக நின்னுட்டு, உடம்பை 45 டிகிரிக்குத் தூக்கிட்டு தலையைக் கீழ் நோக்கி வச்சி நிக்கும். அப்படி நிக்கும் போது, ஈரக்காத்துல இருக்கும் தண்ணீர் இந்த வண்டோட உடம்புல பட்டு சுருங்கி (condense) தண்ணீர் ஆக மாறும். நமிபியப் பாலைவன வண்டின் உடம்பின் மேற்பகுதி மேடும் பள்ளமுமாக இருக்கும். மேடா இருக்குற பகுதி தண்ணீரை ஈர்க்கும் தன்மை கொண்டது. ஆனால், பள்ளமா இருக்குற பகுதி தண்ணீரை அண்டவே விடாது. நமிபியப் பாலைவன வண்டின் உடம்பின் மேற்பகுதி இப்படி இரண்டு வகையாக இருக்குறதால, தண்ணீர் காற்றோட வேகத்தால அடிச்சிட்டுப் போகாம இருக்கு. ஒரு கட்டத்துக்கு மேல உடம்பில் ஒட்டிட்டு இருக்கும் தண்ணீரின் அளவு அதிகமா ஆக ஆக, அந்தத் தண்ணீர் உருண்டு, வண்டின் வாய்க்கு வரும். அதுவும் அந்த நல்ல தண்ணீரைக் குடிச்சிட்டு ஜாலியா அடுத்த வேலையைப் பார்க்கப் போய்டும். என்ன ஒரு புத்திசாலித்தனம் இந்த வண்டுக்கு!
இந்த வண்டு பூமியைக் காப்பாத்த உதவி இருக்கு. ஆமா, இந்த வண்டைப் பார்த்து ஊக்கமடைந்து, நம்ம விஞ்ஞானிகள் எல்லாம் சேர்ந்து கடல்நீர் பசுமையில்லம் எனும் முறையைக் கண்டுபிடிச்சி இருக்காங்க. இதுல, கடல் நீரை ஆவியாக்கி அதை பசுமையில்லத்தின் ஒரு பகுதியில இருந்து முழு பசுமை இல்லத்துக்கும் பரவ விடுவாங்க. இந்த நீராவி சில செடிகள் வளர ஏதுவான சூழலைத் தருது. பசுமையில்லத்தின் மறுபகுதியில நீராவி சுருங்கி மீண்டும் நல்ல தண்ணீராக மாறும். இந்தத் தண்ணீர் பயிர்களுக்குப் பாசனத்திற்குப் பயன்படுது. கடல் நீரை நீராவியா மாற்றும் இயந்திரத்துக்குத் தேவையான மின்சாரத்தை சூரிய ஒளி மூலமாக எடுக்குறாங்க.
நீராவியிலிருந்து வரும் நல்ல தண்ணீர் தேவையான அளவை விட 5 மடங்கு அதிகமாக வருது. அதனால் பாசனத்திற்கும் சூரியப் பலகையை (solar panel) கழுவுவதற்கும் தேவையான அளவு நீர் கிடைக்கிறது. சூரிய ஒளியும் கடல் நீரும் பயன்படுத்துறதால, இந்த முறை புவிக்கு ரொம்ப நல்லது. இந்த கடல் நீர் பசுமை இல்லத்தை வைத்து The Sahara forest project எனும் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்காங்க ஆராய்ச்சியாளர்கள். பாலைவனத்தில் செடி வளர்த்து அந்த இடத்தைப் பசுமையாக்க வேண்டும் என்று தான் இதைச் செய்கிறார்கள். இதன் முதற்கட்டமா கத்தார்ல இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி இருக்காங்க அங்க இதனால தக்காளியும் வெள்ளரியும் வளர்ந்துச்சாம் பா! பாலைவனத்தைப் பசுமையாக்க நம்ம ஆராய்ச்சியாளர்கள்பாடுபடுறாங்க. நாம மரம் சூழ்ந்த இடத்தில இன்னும் பசுமையைக் கொண்டு வர ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒரு மரம்னு நடலாமா?