தூரத்து ரயில் சத்தம் பக்கத்தில் கேட்பது ஏன்?
நவம்பர் மாதம் மழையும் சாரலுமா போச்சு. அதுல என்னை மாதிரி மழையில நனைஞ்சி, நீங்களும் ‘ஹச்சுஹச்சு’ன்னு தும்மிட்டு இருந்திங்களா? என்ன மழைல நனையலையா??? சரி, அடுத்த தடவை மழையில நனைஞ்சி நீங்களும் தும்முங்க. ஒருநாள், நானு தும்மிட்டு இருக்கும்போது, அப்போதான் மழைவிட்டு இருந்துச்சு. நான் இருக்கும் இடத்தில இருந்து ரயில் நிலையம் தொலைவு. ஆனா, அப்போ, எங்கேயோ, தொலைவில் ஓடிட்டு இருந்த தொடர் வண்டி, என் பக்கத்தில ஓடுற மாதிரி சத்தம் அதிகமாக் கேட்டுட்டு இருந்துச்சு. நீங்களும் அதுமாதிரி கேட்டு இருக்கீங்களா? எப்படி மழைக்காலத்துல அவ்ளோ தொலைவில் இருக்கும் ரயில் பக்கத்துல போற மாதிரி ஒலி கேட்குது?
அதைப் பத்தி தெரிஞ்சிக்கணும்னா நமக்கு அணுவைப்பத்தித் தெரிஞ்சிருக்கணும். அணுபற்றி முன்னரே நாம கத்துக்கிட்டு இருக்கோம். நம்ம பூமியில இருக்கும் எல்லா பொருளுமே அணுவால செய்யப்பட்டதுதான். நெறைய அணுக்கள் ஒன்னாச் சேர்ந்து இருந்தா அதை மூலக்கூறுன்னு சொல்லுவோம்.
எல்லாப் பொருட் களிலும் மூலக்கூறுகள் இருக்கு. இவை நகரும் தன்மை உடையவை. அதுக்கு முன்னாடி தொடரோட்டம் (relay) தெரியுமா உங்களுக்கு? தொடரோட்டத்துல (relay), 4 பேர் ஒரு குறிப்பிட்ட தூரத்துல நின்னுகிட்டு இருப்பாங்க. முதலில் ஓடி வர்றவங்ககிட்ட ஒரு கம்பு இருக்கும். அதை ரெண்டாவதா நிக்கிறவங்கக்கிட்ட ஓடிப்போய்க் கொடுப்பாங்க, அந்த நபர் அடுத்த ஆள்கிட்ட கொடுக்க ஓடுவாங்க. அந்த மாதிரிதான் இந்த மூலக்கூறுகளும், நகர்ந்து வரும் மூலக்கூறும் அமைதியா ஒரே இடத்துல கொஞ்சங் கொஞ்சமா நகர்ந்துட்டு இருக்கும் மற்றொரு மூலக்கூறும் ஒன்னோட ஒன்னு மோதிக் கிச்சுனா, நகர்ந்து வந்த மூலக்கூறு அதுக்கிட்ட இருக்கும் ஆற்றலை (energy) அமைதியா இருந்த மூலக்கூறுகிட்ட கொடுத்துட்டு அது வேற திசை நோக்கிப் பயணப்பட ஆரம்பிக்கும். நம்மளோட ரெண்டாவது மூலக்கூறு கிடைத்த ஆற்றலை அடுத்த மூலக்கூறுகிட்டக் கொடுக்க வேண்டி நகரும். என்ன, தொடரோட்டத்துல முதல்நபரும் ரெண்டாவது நபரும் மோதிக்க மாட்டாங்க. மற்றும் முதல் நபர் கம்பைக் கொடுத்ததும் நின்னுடுவாங்க ஆனா, மூலக்கூறுங்க மோதிக்கும். தொடர்வண்டிச் சத்தம், மழைக்காலம், இதுக்கும் மூலக்கூறுகளுக்கும் என்ன சம்பந்தம்?
ஒரு பொருளைத் தட்டுனா, அதுல அதிர்வு ஏற்படும். அந்தப் பொருளில் இருக்கும் மூலக்கூறுகள் வேகமா நகர்ந்து, ஆற்றலை ஒன்னோடு ஒன்னு மாற்றி மாற்றிக் கொடுக்க ஆரம்பிக்கும். மூலக்கூறுகளின் நகர்தலும் அந்தப் பொருளில் ஏற்படும் அதிர்வும்தான் ஒலி உருவாகக் காரணமா இருக்கு. மூலக்கூறுகள் ஒன்னோட ஒன்னு பரிமாற்றிக் கொள்ளும் ஆற்றலாலதான் ஒலி ஓர் இடத்தில இருந்து இன்னொரு இடத்துக்குப் போகுது. ஒரு திடமான பொருளில் இருந்து ஓசைவந்தால், அந்தப் பொருளில் இருக்கும் மூலக்கூறுகள் காற்றில் இருக்கும் மூலக்கூறுகளுக்கு ஆற்றலைப் பரிமாறும். இதனாலதான், மேளத்தில் அடிக்கும் போது வரும் இசை, மேளத்தின் தோலில் உள்ள மூலக்கூறுகளாலும் காற்றில் இருக்கும் மூலக்கூறுகளாலும், நம்ம காதுக்குக் கேட்குது. மூலக்கூறுகளின் எண்ணிக்கை அதிகமா இருந்துச்சுன்னா, அப்போ ஆற்றலைக் குடுக்க நெறைய மூலக்கூறுகள் இருக்கும் அல்லவா? அதனால, வேகமாகவும் மிகத் தொலைவான தூரத்துக்கும் ஒலியாலே பயணப்பட முடியுது. பொதுவாகவே வெப்பநிலை குறைவாக இருந்தா, அங்கே மூலக்கூறுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். மழைக்காலத்திலயும் மற்றும் இரவு நேரத்துலயும் வெப்பநிலை குறைவா இருக்கும், மூலக்கூறுகளின் எண்ணிக்கை அதிகமா இருக்கும். அதனால்தான் வெகு தொலைவில் போய்க்கிட்டு இருக்கும் ரயில் வண்டியோட சத்தம், வேகமாகப் பயணப்பட்டு வந்து, நம்மகிட்ட ரயில்வண்டி போய்க்கிட்டு இருக்குற மாதிரி தோன்றும் அளவுக்குச் சத்தமா ஒலி கேட்குது.