சாதனை : 2023 ஆண்டிற்க்கான நோபல் பரிசுகள்
உலக அமைதிக்காகவும், சமாதானத்திற்காகவும் செயல்படும் தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் உலகிலேயே வழங்கப்படும் மிக உயரிய விருது அமைதிக்கான நோபல் பரிசு.
ஆனால் இந்த விருதை நிறுவியவர்தான் டைனமைட் என்றும் வெடிகுண்டைக் கண்டுபிடித்தவர். அவர் தான் ஆல்ஃப்ரட் நோபல் என்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர்.
யார் இந்த ஆல்ஃப்ரட் நோபல்?
ஆல்ஃப்ரட் நோபல் 1833-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதி ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் பிறந்தார். அவர், இத்தாலியில் சான் ரெமோ நகரில் 1896-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி பக்கவாதத்தால் இறந்தார். அவரது இறுதிச் சடங்குக்கு மறுநாள், அவர் கைப்பட எழுதிய உயில் வாசிக்கப்பட்டது.
அதில், அவருடைய செல்வத்தின் பெரும்பகுதி, இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் சர்வதேசச் சாதனைகளை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்க ஒதுக்கப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது.
நார்வே நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் அமைதிக்கான பரிசைத் தவிர, மற்ற அனைத்து விருதுகளும் ஸ்வீடனின் அமைப்புகளால் வழங்கப்படும். மேலும், இந்தப் பரிசுகள் உலகில் உள்ள எந்தத் தேசத்தவருக்கும் வழங்கலாம் என்று அவரது உயில் கூறியது. முதல் நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு தான் வழங்கப்படத் தொடங்கியது. இன்றுவரை வழங்கப்பட்டு வருகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10-ஆம் தேதி இப்பரிசு வழங்கப்படுகின்றது.
அமைதிக்கான நோபல் பரிசு
ஈரானியப் பெண்களின் உரிமைக்காக அதிகாரத்தையும் அரசையும் எதிர்த்துப் போராடி 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நர்கஸ் முகமதிக்கு 2023-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.
தன் வாழ்நாளில் பத்துக்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டு, டெஹ்ரானின் எவின் சிறைச்சாலையில் 2012 முதல் அடைக்கப்பட்டுள்ளார். 12 ஆண்டுகளாக சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் நர்கஸ் முகமதி, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதற்கு நன்றிக் கடிதம் எழுதி இருக்கிறார்.
சிறையில் இருந்து எழுதப்பட்ட அந்தக் கடிதத்தை அவரின் மகள் கியானா வாசிக்க, அந்தக் காட்சி வீடியோவாக நோபலின் அதிகாரபூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
“உங்கள் அனைவருக்கும் நான் நன்றி யுள்ளவளாக இருக்கிறேன்; இறுதி வெற்றிவரை ஈரான் மக்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எவினில் அடைக்கப் பட்டுள்ள 46 பெண் கைதிகள் சார்பாக நோபல் கமிட்டிக்கு எனது வாழ்த்தையும் நன்றியையும் தெரிவிக்கிறேன்.
இந்த இயக்கத்தின் பலம் ஈரானியப் பெண்களின் அமைப்பில் உள்ளது. நாங்கள் விரும்பாததைவிட, எங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நாங்கள் உறுதியாக அறிவோம். வெற்றி எளிதானது அல்ல. ஆனால், அது நிச்சயம் கிடைக்கும்.
நாங்கள் அதை நம்புகிறோம், வெற்றியில் உறுதியாக இருக்கிறோம்’’ என்று கடிதத்தில் கூறியுள்ளார்.
ஈரானில் நடந்த போராட்ட இயக்கத்தை மேற்கத்திய நாடுகளின் தலைமையிலான நாசவேலை என்று தெஹ்ரான் கூறி வருகிறது. முகமதிக்கு அமைதிப் பரிசு வழங்க முடிவெடுத்ததை அடுத்து மனித உரிமைகள் பிரச்சினையில் நோபல் குழு தலையிட்டு அரசியல் செய்வதாகக் குற்றம் சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு
2023-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவியலாளர்களான அமெரிக்காவைச் சேர்ந்த பியரி அகோஸ்தினி, ஜெர்மனியைச் சேர்ந்த ஃபெரெங்க் க்ரவுஸ் மற்றும் ஸ்வீடனைச் சேர்ந்த அன்னி எல் ஹூலியர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளில் எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக ஒளியில் அட்டோசெகன்ட் அதிர்வுகளை உருவாக்கும் சோதனை முறைக்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக ‘தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ்’ தெரிவித்தது.
இம்மூவரும் அணுக்கள் மற்றும் மூலக் கூறுகளின் உலகிற்குள் இருக்கும் எலக்ட்ரான்களை ஆய்வு செய்வதற்கான கருவியை மனித குலத்துக்கு வழங்கிய பங்களிப்புக்காக அங்கீகரிக்கப்படுகிறார்கள். இவர்கள் மூவரும் ஒளியில் மிகக் குறுகிய துடிப்புகளை உருவாக்கும் வழிமுறைகளை நிரூபித்துள்ளனர். இது எலக்ட்ரான்கள் நகரும் அல்லது விரைவாக ஆற்றலை மாற்றும் செயல்முறைகளை அளவிடப் பயன்படும்.
மருத்துவத்திற்கான நோபல் பரிசு
கோவிட் தொற்றுநோய்க்கான எம்.ஆர்.என்.ஏ (mRNA) தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்க வழிவகுத்த தொழில்நுட்பத்தை உருவாக்கிய இரண்டு அறிவியாளர்களுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களைப் பலி கொண்டது. தொற்று நோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்குச் செலுத்தப்பட்டது. கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புக்கு வழிவகுக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த கட்டாலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவின் ட்ரூ வெஸ்மன் ஆகிய இருவரும் முக்கியப் பங்கு வகித்தனர்.
இந்தத் தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சி பெருந்தொற்றுப் பேரிடர் காலத்தில் சோதனைக் கட்டத்திலேயே இருந்த நிலையில், தற்போது உலகம் முழுக்க பல கோடி உயிர்களைக் காப்பாற்றி வருகிறது. கரோனா தொற்றுக்கு உருவாக்கப்பட்ட இந்த எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பம் தற்போது புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்களுக்குப் பயன்படுத்த கூடிய வகையில் இருக்குமா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுகளை அடையாளம் கண்டு எதிர்வினையாற்றும் வகையில் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் வலுப்படுத்தும் வேலையை இந்த வகைத் தடுப்பூசிகள் மேற்கொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பாரம்பரிய தடுப்பூசி தொழில்நுட்பம் அசல் வைரஸ் அல்லது பாக்டீரியாவின் இறந்த அல்லது பலவீனமான செல்களை அடிப்படையாகக் கொண்டது.
அதற்கு மாறாக, எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகள் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையைப் பயன்படுத்திக் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. கரோனா தொற்றின் போது மாடர்னா, ஃபைசர் பயோஎன்டெக் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டன.
வேதியியலுக்கான நோபல் பரிசு:
வேதியியலுக்கான நோபல் பரிசு மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ், அலெக்சி எகிமோவ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் புள்ளிகளின் கண்டுபிடிப்பு மற்றும் தொகுப்புக்காக இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது
இலக்கியத்துக்கான நோபல் பரிசு
2023-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு, நார்வே எழுத்தாளரான ஜான் ஃபோஸ்ஸேக்கு (Jon Fosse) அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்ஸேயின் ”சொல்ல முடியாதவற்றுக்காகக் குரல் கொடுக்கும் அவரது புதுமையான நாடகங்கள் மற்றும் உரைநடைகளுக்காக” இப்பரிசு வழங்கப்படுவதாக தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி தெரிவித்துள்ளது.
இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெறும் ஜான் போஸேவின் சிறந்த படைப்பு ‘செப்டோலோஜி’. இதனை 2021-ஆம் ஆண்டு அவர் எழுதி முடித்தார். மற்றவை ‘தி அதர் நேம் 2020’, ‘அய் இஸ் அனதர் 2020’ மற்றும் ‘ஏ நியூ நேம், 2021’ போன்றவை.
நார்வேயின் வெஸ்ட் கோஸ்டில் கடந்த 1959ஆம் ஆண்டு ஜான் ஃபோஸ்ஸே பிறந்தார். நார்வேஜியன் நிநோர்ஸ்க் மொழியில் எழுதப்பட்ட இவரது மகத்தான படைப்புலகம் நாடகங்கள், நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்புகள் என பல வகைமையைக் கொண்டவை.
பொருளாதார அறிவியலுக்கான நோபல் 2023:
நோபல் பரிசுகளில் கடைசியாக இணைக்கப்பட்ட துறை பொருளாதாரம் ஆகும். 1968-ஆம் ஆண்டு தனது 300-ஆம் ஆண்டைக் கொண்டாடிய சுவீடன் நாட்டின் மய்ய வங்கியான ஸ்வேரியஸ் ரிக்ஸ் வங்கி,
அதையொட்டி பொருளாதாரத்திற்கான ஸ்வேரியஸ் ரிக்ஸ்பேங் பரிசு என்ற ஒன்றை நிறுவி, அதை நிர்வகிக்கும் பொறுப்பை நோபல் பரிசுக் குழுவிடமே ஒப்படைத்தது. அதன்படி ஒவ்வோராண்டும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசாகவே கருதப்பட்டு ஸ்வேரியஸ் ரிக்ஸ் வங்கியின் பரிசு வழங்கப்படுகிறது.
இவ்வாண்டு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கப் பேராசிரியர் கிளாடியா கோல்டினுக்குக் கிடைத்துள்ளது. 1946-ம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த க்ளாடியா கோல்டின், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். இவரது ஆராய்ச்சி 200 ஆண்டுகளாக தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கேற்பு எப்படி மாறியுள்ளன என்பதையும் வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு விகிதங்களில் பாலின வேறுபாடுகள் எப்படி உள்ளன என்பதையும் பற்றிய தரவுகளை வழங்கியுள்ளது என நோபல் பரிசு வழங்கும் தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி தெரிவித்துள்ளது.<