முதல் ஆங்கில அகராதி தொகுத்த ஜான்சன்
முதன்முதலில் வெளியிடப்பட்ட அகராதி இன்று 257 ஆண்டுகளுக்குமுன் 1755இல் டாக்டர் ஜான்சனால் வெளியிடப்பட்டது. இக்காலத்தில் வார்த்தைக்கு அர்த்தம் பார்க்க யாராவது ஜான்சன் அகராதியைப் பார்ப்பார்களா என்பது சந்தேகமே.
1747இல் ஃபிரெஞ்சு நிபுணர்கள் தங்கள் மொழிக்கு இம்மாதிரி அகராதி தயாரிக்க முயற்சித்தது கண்டு இங்கிலீஷுக்கும் இந்த அகராதியைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஜான்சனுக்கு உதித்தது.
மூன்றே ஆண்டுகளில் இதைச் செய்து முடிக்க விரும்பினார். ஆனால், எட்டு ஆண்டுகள் பிடித்தன. இந்த அகராதி வேலை பாதி முடியும்போது ஜான்சன் தனக்கு வேலைகளில் மிகவும் உதவியாக இருந்த அருமை மனைவியை இழந்தார்.
தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் அவர் உழைத்தார். இதனால் அவருக்கு, 1500 கினி கிடைத்தது.
ஆக்ஸ்ஃபோர்டில் அவர் வறுமையுடன் வாழ்ந்தவர். தன் உடை ஆபாசமாக இருந்ததற்காக திரைக்குப் பின்னால் உட்கார்ந்து பிறர் கண்ணில் படாமல் அவர் சாப்பிடுவது வழக்கம். அந்த ஆக்ஸ்ஃபோர்டு கலாசாலையில் அவர் எம்.ஏ. பட்டம் பெற்றார்.
பிரபல நடிகை மிசஸ் ஸ்டான்ஸ் அவரைப் பார்க்க வந்தபோது உட்கார அங்கு நாற்காலிகூட இல்லை. உங்கள் ஆட்டத்தைப் பார்க்க எவ்வளவோ பேர் வந்து இடமில்லாமல் போகிறார்கள். அப்படி அவர்கள் செல்வதற்குக் காரணமாக இருக்கும் உங்களுக்கு இங்கு உட்கார இடமில்லாவிட்டால் பரவாயில்லை என்று டாக்டர் ஜான்சன் கூறி சமாளித்துக் கொண்டார்.
இவர் அகராதியில் வார்த்தைகளுக்கு வெறும் அர்த்தம் மட்டும் இல்லை. அதில் தன் கருத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். உதாரணமாக, தேசபக்தி என்பது அயோக்கியனுக்குக் கடைசி அடைக்கலம் என்று அர்த்தம் கூறியிருக்கிறார்.
ஜான்சனுக்கு மூன்றாவது ஜார்ஜ் வருடத்திற்கு 300 பவுன் பென்ஷன் அளிக்கச் செய்தார்.
– தகவல்: மு.நீ.சி.
இவர்கள் அகராதிகள்
அதிகமாகப் பேசுபவரை `சரியான அகராதி என்று சொல்லுவார்கள்.ஆனால் இவர்கள் உள்ளபடியே அகராதிகள் .எப்படி தெரியுமா?
விளையாடுவது, தொலைக்காட்சி பார்ப்பது, பாடல் கேட்பது, சினிமா பார்ப்பது, கடற்கரைக்குச் செல்வது, நண்பர்களுடன் அரட்டையடிப்பது என்று பலவிதமான பொழுதுபோக்குகளை நாம் நம் வாழ்வில் பின்பற்றி வருகிறோம்.
ஆனால் இவர்களின் பொழுதுபோக்கு அகராதி படிப்பதுதான்.
ஆங்கில நாட்டின் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தவர் எட்மண்ட் பர்க். ஆங்கிலப் பாராளுமன்றத்தில் அவர் பேசிய பேச்சுகள் உலகப் புகழ் பெற்றவை. இவர் 4 அகராதிகளைப் புரட்டிப் பார்ப்பதையே தனது பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார். புதிய சொற்கள், தெளிவான பொருள்களை அறிவதில் அவருக்கிருந்த ஆர்வமே பொழுதுபோக்காக அகராதியைப் படிப்பதற்குக் காரணமாக அமைந்ததாம்.
ஏழ்மை நிலையில் வளர்ந்து 18 வயதுவரை எழுதப் படிக்கத் தெரியாமல் இருந்தவர் ஆபிரகாம் லிங்கன். 18 வயதுக்குப் பிறகு, அவரது சிற்றன்னை மரப்பட்டைகளில் ஏ, பி, சி, டி (a, b, c, d)எழுதச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
தனது ஆர்வத்தாலும், விடா முயற்சியாலும் ஏழ்மையை ஒரு காரணமாகக் கருதாமல் பி.எல். பட்டம் பெற்றார். லிங்கனும் தனது ஓய்வு நேரங்களை அகராதியைப் புரட்டிப் பார்ப்பதிலேயே செலவு செய்துள்ளார். அகராதியும் கையுமாகத்தான் இருப்பாராம்.
மேலும், பிட்பிரபு, சேத்தாம் பிரபு என்ற ஆங்கிலக் கோமான்களும் தினமும் அகராதியின் சில பக்கங்களைப் படிப்பதற்கென்றே நேரம் ஒதுக்கி, ஒரு சொல் விடாமல் படித்துவிடுவார்கள்.
இராபர்ட் பிளெனிங் என்ற கவிஞர் அகராதியின் சில பக்கங்களை மனப்பாடம் செய்வதற்கென்றே தினமும் நேரத்தை ஒதுக்குவாராம்.