குறும்படப் போட்டியில் வெற்றி பெற்று ஜப்பானுக்குச் சென்ற அரசுப் பள்ளி மாணவி
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி சாரா செயல்பாடுகளாக ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலக்கிய மன்றம், சிறார் குறும்படம், வானவில் மன்றம், வினாடி – வினா சார்ந்த போட்டிகள் ஒன்றிய, மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் சிறப்பிக்கப்பட்டு வருகின்றனர். சிறார் குறும்படங்களைப் பொறுத்தவரை தனிநபர் குழு உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது. திரைப்படத்தின் ஒரு காட்சியை இயக்குதல் என்ற தனிநபர் பிரிவில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் அ.குரும்பப்பட்டி நடுநிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்த மாணவி கீர்த்தனா மாநில அளவில் இறுதிப் போட்டியில் பங்கேற்றார்.
மாநில அளவிலான குறும்படப் போட்டியில் முதலிடம் வென்ற குழுவைச் சேர்ந்த ஆத்தூர் மாணவி கீர்த்தனா உட்பட 14 பேர் ஜப்பானுக்கு கல்விச் சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஜப்பானுக்குச் சென்றது குறித்துப் பேசிய மாணவி கீர்த்தனா.
“மாவட்ட அளவில் தேர்வான எனக்கு கடந்த ஆண்டு சென்னையில் பயிற்சி முகாம் நடைபெற்றது. அங்கு முன்னணி இயக்குநர்கள் பயிற்சி அளித்தனர். பிளஸ் டூ முடித்த பிறகு அரசுத் திரைப்படக் கல்லூரியில் இயக்குநர் பிரிவில் பட்டம் பெற்று திரைத்துறையில் சாதிக்க விரும்புகிறேன்” என்றார்.
– மரகதமணி