எழுத்தறிவு!
எண்ணும் எழுத்தும் இருகண்கள்
என்றார் அன்றே வள்ளுவனார்!
எண்ணும் எழுத்தும் கல்லாதார்
அறிவுப் பார்வை அற்றோர்தாம்!
பிறந்த மனிதர் யாவருமே
பேசும் கலையைக் கற்றிடுவோம்;
சிறந்த அறிஞ ராவதற்குச்
சீராய் எழுதிப் பழகிடுவோம்!
தரையில் பிறந்த அனைவருக்கும்
தாயின் மொழியாய் ஒன்றிருக்கும்;
விரைவாய் அதனை எழுதிடவே
வேண்டிப் பழக வேண்டும் நாம்!
எண்ணிக் கையைக் கற்றால்தான்
எதையும் அளக்க முடியும்காண்;
கண்ணின் மணிபோல் கணக்கினையும்
கற்று நாமும் தேர்ந்திடுவோம்!
எண்ணை எழுத்தை இகழாமல்
எல்லோருக்கும் கற்பிப்போம்;
திண்ணை தன்னில் உறங்கிடுவோர்
தெளிவு பெறவே செய்திடுவோம்!
– கே.பி. பத்மநாபன்,
சிங்காநல்லூர்