இளவயதில் சுடரும் : முட்டைக் கண்ணுன்னா egg eyed-ன்னு சொல்லுவோமா?
ஒரு நாட்டின் பெருமை என்பது நாட்டில் உள்ள மலைகள், காடுகள், இயற்கை வளங்கள் எனக் கூறப்பட்டாலும், உண்மையான பெருமை அந்த நாட்டில் வளரும் குழந்தைகளே ஆவர். முதிர்ச்சியடைந்த மனிதன் நாட்டைப்பற்றியும் சமூகத்தைப் பற்றியும் சிந்திப்பது இயல்பு அப்படி இல்லாமல் சிறுவயதிலேயே சமூகத்தைப் பற்றியும் சிந்திப்பது மட்டும் அல்லாமல் பல்வேறு திறமைகளில் தன்னை மேம்படுத்திக் கொள்வது என்பது மிகவும் சிறப்பானது.
அப்படி சமூக ஆர்வம் மிக்க சிறுவர் தான் இளங்கதிர் இளமாறன். அமெரிக்காவில் நியூஜெர்சியில் வாழும் அவருக்கு வயது 15. அவர் விமானம் ஓட்ட விடும்புபவர், இசை மற்றும் குறியீட்டு முறை ஆகியவற்றிலும் வயலின் வாசிப்பதிலும், புத்தகங்களை வாசிப்பதிலும் ஆர்வமுள்ளவர்.
அமெரிக்காவில் வளர்ந்தாலும் ஆங்கிலத்துடன் தமிழையும் கற்று தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டிருக்கிறார் இளங்கதிர். அதன் விளைவாக ஒரு கதை புத்தகத்தை தற்போது மொழி பெயர்த்து வெளியிட்டு இருக்கிறார்.
“முட்டைக் கண் பச்சோந்தி The egg eyed Chameleon” என்று பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகம் எழுத்தாளர் கன்னிக்கோவில் ராஜா அவர்கள் எழுதிய கதைகளின் தொகுப்பு ஆகும். அதை அழகுற ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார் இளங்கதிர் இளமாறன்.
அதில் ‘Kamali’s best friend’ என்ற ‘கமலியின் சிறந்த தோழி’ என்ற கதை எல்லா உயிரினங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் மரம் செடிகொடிகளை நேசிக்கும் ஒரு சிறுமி பற்றியது. இரண்டாவதாக உள்ள ‘A Pongal Gift for the forest Goddess ‘வனதேவதைக்கு ஒரு பொங்கல் பரிசு’ என்ற கதையின் மூலம் வனங்கள் எப்படி அழிக்கப்படுகின்றன. அவற்றை எப்படி காப்பது என்பது பற்றி பேசப்படுகிறது. ‘The Kitten who took a selfie’ செல்பி எடுத்த பூனைக்குட்டி’ என்ற கதையால் செல்போன் மோகத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றியும்,‘The egg -Eyed chameleon’ முட்டைக்கண் பச்சோந்தி, இயற்கையின் படைப்பை ஏற்பது குறித்தும்,‘I am Strong’ – நானே பலசாலி என்ற கதை அம்மாவின் பேச்சைக் கேட்காமல் சென்று கன்றுக்குட்டிக்கு வந்த ஆபத்தைப் பற்றி விளக்கும் கதையாகவும் அமைந்துள்ளன.
குழந்தைகளுக்கு நல்ல கருத்துகளுடனும், சமூக சூழ்நிலைகளைச் சிந்திக்கும் வண்ணமாகவும், தங்கள் ஆற்றலை மேம்படுத்திகொள்ளும் வகையிலும் தன்னம்பிக்கை நிறைந்த கருத்துகள் இக்கதையில் இடம்பெற்றுள்ளன.
வீடியோ கேம், கைபேசி, பொழுதுபோக்கு கேளிக்கைகளில் ஈடுபட்டு தங்கள் பொன்னான நேரத்தை வீணடித்துக்கொண்டு இருக்கும் சிறுவர்கள் போல் அல்லாமல் தமிழும் ஆங்கிலமும் கற்று புத்தகங்களை மொழியாக்கம் செய்யும் அளவு தன்னை உருவாக்கிக் கொண்டுள்ள இளங்கதிர் இளமாறன் அவர்களை நிச்சயம் பாராட்டி வாழ்த்த வேண்டும்.
– உத்ரா பழனிசாமி