நினைவில் நிறுத்துவோம்! பாதையை மாற்றும் போதை!
20 வயதுக்கு மேற்பட்டவர்களை எச்சரிக்கை வேண்டிய காலம் மாறி, தற்போது 10 வயது சிறார்களையே எச்சரிக்கை வேண்டிய கட்டாய அவலநிலை வந்துவிட்டது.
ஆம். “பீடி பிடிக்காதே, சிகரெட் குடிக்காதே” என்றுச் சிறுவர்களை எச்சரிப்பது உண்டு. காரணம். பெரியவர்கள் ஊதி விட்டு எறியும் சிகரெட், பீடியை எடுத்து சில சிறுவர்கள் புகைப்பது உண்டு. இதையே 25 ஆண்டுகளுக்கு முன் பெரிய குற்றமாகக் கருதி பெரியவர்களும், பெற்றோரும் கண்டிப்பர். ஆனால். இன்றைக்கு 10 வயதிலே கஞ்சா கலந்த பொருட்களையும் மாத்திரைகளையும் பல வகையில் சிறுவர்கள் பயன்படுத்தும் அவலம் வந்துவிட்டது.
இதோ அண்மையில் ஒரு நிகழ்வு பற்றிய செய்தி
“தமிழக – கேரள எல்லையில் இருக்கும் தேனி மாவட்டம், கடந்த 50 ஆண்டுகளாக கஞ்சாவின் தலைநகரமாகவே இருக்கிறது. அண்மைக் காலமாக ‘நிலா’ என்ற ‘கோட் வேர்டில்’ போதை மாத்திரைகள் தாராளமாகக் கிடைப்பதால், பள்ளி மாணவர்களும் இதற்கு அடிமையாகும் சூழல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில்தான் போதையில் சிக்கிய 12 வயதுச் சிறுவன், கொலையும் செய்துள்ளான்.
இதுகுறித்து கம்பம் தெற்கு காவல்துறையினர், “கம்பம் சுருளி அருவிச் சாலையில் குடியிருந்து வந்தவர் 88 வயது மூதாட்டி ராமுத்தாய். கடந்த வாரம் இரவு, இவர் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார். பீரோவில் வைத்திருந்த ஒன்றரை சவரன் தங்க நகையையும் காணவில்லை.
கொலை நடந்த வீட்டில் கிடைத்த கைரேகை, அப்பகுதியில் சந்தேகப்படும்படியான நபர்கள் எவருடைய கைரேகையோடும் ஒத்துப்போகவில்லை. பழைய குற்றவாளிகளோடும் பொருந்தவில்லை. இதையடுத்த அப்பகுதியில் உள்ள சில சிறுவர்களின் கைரேகைகளைச் சேகரித்து, பரிசோதித்தபோதுதான், அதே தெருவில் வசிக்கும் 12 வயதுச் சிறுவனின் கைரேகையோடு அது ஒத்துப்போனது.
அதையடுத்து, அந்தச் சிறுவனிடம் விசாரித்தோம். அவன் சொன்ன தகவல் கேட்டு தலைசுற்றிப் போனது… ‘சின்னமனூர் அருகே உள்ள எரசைப் பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் தங்கி 6ஆம் வகுப்பு படிச்சுகிட்டு இருந்தேன். என்னோட ஜாதகத்தைப் பார்த்த எங்க அப்பா, அம்மா. எனக்கு நேரம் காலம் சரியில்லைங்கறதால, என்னை விடுதியில் இருந்து கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க. அதனால பள்ளிக்கூடம் போகாம ஊர் சுத்திக்கிட்டு இருந்தேன்.
அப்போ இந்தப் பகுதியில இருக்கற அண்ணாக்களோட சிநேகிதம் கிடைச்சு, அவங்ககூட சேர்ந்து போதை போடக் கத்துக்கிட்டேன். போதைப்பொருள் வாங்கக் காசு இல்லாத சமயத்துல எல்லாம், சின்னச் சின்ன திருட்டு வேலை செய்வேன்.
சம்பவத்தன்னிக்கு, ஃப்ரெண்டஸ்கூட விளையாடிட்டு, தண்ணி கேட்டுதான் அந்தக் கிழவி வீட்டுக்குப் போனேன். குடிக்கத் தண்ணி குடுங்கன்னு கேட்டதும், ‘ஏன்டா திருட்டுப் பயலே இப்போ எதைத் திருடடா வந்திருக்கே?’ன்னு கேட்டாங்க. அதனால, ஆத்திரமா பிடிச்சுத் தள்ளினேன். தடால்னு கீழே விழுந்து பின் தலையில காயம்பட்டு மயங்கிட்டாங்க. நெருங்கித் தொட்டுப் பார்த்தேன். மூச்சு இருந்துச்சு.
ஆனா, இப்படியே விட்டா என்னைப் பத்தி வெளியில சொல்லிடுவாங்கன்னு பயமா இருந்துச்சு. அதனால, பக்கத்துல கிடந்த ஒரு கம்பை எடுத்து வாயிலேயே பலமா குத்தித் தாக்கினேன். அப்படியே செத்துட்டாங்க. இழுத்து ஒரு மூலைல போட்டேன்.
பீரோவைத் திறந்து உள்ளே இருந்த நகையை எடுத்துகிட்டு ஓடிட்டேன்’ அப்படின்னு சொன்னான்.” அவனைக் கைது செய்து மதுரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
12 வயதுச் சிறுவன் பாட்டியைக் கொலை செய்யும் கொடுமைக்குக் காரணம் என்ன? போதை! அதுவும் இரண்டு போதைகள்.
ஒன்று ஜோதிட போதை!
மற்றொன்று கஞ்சா போதை!
அறிவியலுக்கும் உண்மைக்கும் எதிரான ஜோதிடத்தை நம்பி பலர் பாழாகிறார்கள். பலர் வாழ்க்கை நாசமாகிறது. அப்படி ஜோதிடத்தால் பாழானவன்தான் மேற்கண்ட சிறுவனும்! சோதிடத்தால் படிப்பை இழந்த அச்சிறுவன், அவனைவிட வயது அதிகம் உள்ள ஆண்களோடு பழகி அவனும் கஞ்சாவைப் பயன்படுத்தியுள்ளான். நாளடைவில் கஞ்சா போதைக்கு அடிமையானான். கஞ்சா வாங்கப் பணம் இல்லாமல், பாட்டியைக் கொன்று திருடியுள்ளான்.
ஜோதிட போதை அவன் படிப்பைப் பறித்தது! ஊர் சுற்ற வைத்தது! கண்டவருடன் பழக வைத்தது!
கஞ்சா போதை அவன் வாழ்வையே பறித்துவிட்டது!
50 ஆண்டுகளுக்கு முன் 30 வயதுள்ளவர் களுக்குக்கூட கிடைக்காத கெட்ட வாய்ப்புகள் எல்லாம் இன்றைக்கு 10 வயதுச் சிறுவர்களுக்கே எளிதில் கிடைக்கின்றன.
பள்ளிக்கு அருகிலுள்ள பெட்டிக்கடையிலே போதைப் பொருட்கள் எளிதில் கிடைக்கின்றன. பெற்றோரும், ஆசிரியர்களும், பெரியவர்களும் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும், கண் காணிப்புடனும் இருக்கவேண்டும். பிஞ்சுகளும் இது போன்ற கெட்ட, தீய பழக்கங்களிலிருந்து தங்களை விலக்கி, விழிப்போடு காத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம்.
பிஞ்சுப் பருவத்தில் தீய பழக்கங்கள் கவரும். அந்த ஈர்ப்பில் சென்றால் வாழ்வே திசை மாறிப் பாழாகிவிடும்.
எனவே, கேடு சூழ்ந்த இவ்வுலகில் பிஞ்சுகள் விழிப்போடும், கட்டுப்பாட்டோடும் இருந்து நல்வழியில் சென்று தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.<