நேயம்: எம்ஸீ வளர்த்த அவுன்
2004 ஆம் ஆண்டு வேட்டைக்காரர்களால் பெற்றோரைப் பறிகொடுத்து ஆதரவற்று இருந்த நீர்யானைக்குட்டி ஒன்றைப் பாதுகாவலர்கள் காப்பாற்றி அதற்கு அவுன் என்று பெயர் சூட்டி கென்ய மும்பாசா வனவியல் பூங்காவில் வைத்துப் பராமரித்தனர்.
அந்தப் பூங்காவில் 150 வயதுடைய எம்ஸீ என்ற வெப்பமண்டலக் கடலாமை ஒன்றும் இருந்தது,
பராமரிப்பில் இருந்த அந்த ‘அவுன்’ என்று பெயர் சூட்டப்பட்ட நீர்யானைக் குட்டியை எம்ஸ¦ தனது மகனாக ஏற்றுக்கொண்டது போல் அந்தக் குட்டியுடன் எப்போதும் இருக்கும். அதே போல் எம்ஸீ தனக்குத் தரும் உணவை ஹிப்பிக்கு (Hippopotamus) சாப்பிடக் கொடுத்து பிறகு தானும் சாப்பிடும். வெப்பமண்டலக் கடலாமைகளிடம் தங்களது குஞ்சுகளைப் பாதுகாக்கும் பழக்கம் எப்போதுமே இல்லை, கடற்கரையில் குழிபறித்து முட்டையிட்டு மணலைத் தள்ளி மறைத்துவிட்டுச் சென்றுவிடும். அதோடு அதன் வேலை முடிந்துவிடும். கடலாமை முட்டைகள் தானாகவே பொரிந்து குஞ்சுகள் பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து கடலுக்குள் சென்று அவற்றின் புதிய வாழ்க்கையைத் தொடங்கும். அதற்குத் தாய் எங்கே? தந்தை எங்கே? என்றே தெரியாது. அப்படி உள்ள கடலாமை சில நாட்களே ஆன அவுனைத் தன்னுடனேயே வைத்துக்கொண்டது.
இரண்டு விலங்குகளுமே இலை தழைகளை மட்டுமே உண்ணும். கடலாமை தனக்குத் தரப்படும் முட்டைக்கோஸ், கடலைச்செடி, நீர்த்தாவரம் மற்றும் ஆகாயத்தாமரை போன்றவற்றைச் சாப்பிடும். ஆகையால் தனக்குத் தரப்படும் உணவை குட்டிக்குக் கொடுத்து அதைச் சாப்பிடவைத்த பிறகு எம்ஸீ சாப்பிடும்.
எப்போதும் அவுன் தனது ஆமை அம்மாவை விட்டு எங்கும் செல்லாமல் அதன் கூடவே இருந்தது. இந்த இரண்டு உயிர்களின் உறவு ஆப்பிரிக்காவில் தான்சானியா மற்றும் கென்யா நாட்டுப் பள்ளிப்பாடங்களில் கதைகளாக வைக்கப்பட்டன.
மேலும் இரண்டு விலங்குகளின் உறவைப் பற்றி ‘அவுன் & எம்ஸீ உண்மை நட்பு’ என்ற பெயரில் ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழிகளில் நூல்களும் வெளிவந்துள்ளன.