விளையும் பயிர்
என்னால் முடியும்
விவசாயத்தில் கூலிக்கு வேலை செய்யும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். சுறுசுறுப்பாக இருந்ததோடு சட்டென எதையும் புரிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவராக வளர்ந்தார்.
தனது தாயிடம் சென்று, எனக்கு என்னவெல்லாமோ தோன்றுகிறது அம்மா என்பார். என்னடா குண்டைத் தூக்கிப் போடுற, வர வர உன் போக்கே சரியில்லை, பயமா இருக்கு எனக்கு என்று தாயார் தன் மன பயத்தைச் கூறுவார். நான் கேள்வி கேட்டாலே நீங்கள் ஏன் நடுங்குகிறீர்கள் அம்மா என்பார்.
உன் கேள்வி கேட்டு நான் நடுங்கவில்லை. நான் நடுங்குகிற மாதிரி இருக்கிறது உன் ஒவ்வொரு கேள்வியும் என்பார் தாயார். அம்மா, அதோ மேசையில் டம்ளர் வைத்துள்ளீர்கள். அது எப்படியம்மா கீழே விழாம இருக்கு என்பார். இன்று டம்ளர் ரூபத்தில வில்லங்கமா? மேசைல இருக்கிறதால விழல. அந்தரத்துலயா இருக்கு என்பார் தாயார்.
அப்போ நிலா எந்த மேசையில அம்மா இருக்கு? அது மட்டும் ஏன் அம்மா விழலை என்பார். அம்மா பதில் சொல்லத் தெரியாமல் இருப்பார். உடனே 10 வயதுச் சிறுவரோ, எனக்கென்னவோ இதுக்கு ஒரு கணக்கு இருக்குனு தோனுதும்மா என்பார். என் பிள்ளைக்கு என்னாச்சோ தெரியலையே, இப்படி நிலாவுக்கும் வீட்டுக்கும் முடிச்சுப் போட்டு உளறுகிறானே என்பார் தாய்.
விடாத சிறுவன் வானத்துல இருக்கிற எல்லாமும் சுத்திக்கிட்டே இயங்குகிற மாதிரி எனக்குத் தோன்றுகிறது என்பார் தன் அம்மாவிடம். உனக்கு என்னடா எப்பவும் வானத்துலயே வேலை? அங்க என்ன சுத்துது? எல்லாம் அப்படி அப்படியேதானே இருக்கு என தாய் பதில் கூறுவார்.
சுத்துதுமா சுத்துது. சுத்தி சுத்தி கடைசியா இருட்டான மய்யத்துல போய் விழுந்துடற மாதிரி எனக்கு மனதில் படுதம்மா என்பார். என்னைப் போய்க் கேட்கிறாயே எனக்கு என்ன தெரியும் என்று தாய் கூறுவார்.
ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால் இரண்டுங்கிற மாதிரி இதுக்கும் கணக்கு இருக்கு, சமன்பாடு இருக்கு, அதை என்னால கண்டுபிடிக்க முடியும் அம்மா என 10 வயதில் கூறிய இந்தச் சிறுவன் பிரெஞ்சு நாட்டில் ஈடு இணையற்ற கணித மேதையாகவும் வானவியலாளருமாகத் திகழ்ந்த பியர்ஸ் சைமன் மார்க்யுஸ்டே லாப்லஸ் ஆவார்.