இப்ப நான் என்ன சொல்றது? கருப்பசாமியிடம் வசமாக மாட்டிகொண்ட நால்வர்
எனக்கு அப்போது 12 வயதிருக்கலாம். பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் மகன் பசியோடு இருப்பானே என்று சாப்பிடுவதற்கு ஏதாவது செய்துவைத்திருப்பார் அம்மா! அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் பையை வீட்டினுள் தூக்கி வீசிவிட்டு, நண்பர்களுடன் விளையாடச் சென்றுவிடுவேன். எங்கள் வீட்டில் நான் மட்டும்தான் இப்படி. “நீ மட்டும் ஏண்டா இப்படி?” என்று அடிக்கடி அம்மா, கடிந்து கொள்வது வழக்கம்.
அப்படி ஒருநாள்…
எவ்வளவோ முயற்சித்தும் பெயர்கள் நினைவுக்கு வராத இரண்டு நண்பர்கள், இப்போதும் பெயர் மறக்காத செல்வராஜ்! நால்வரும் இணைந்து வெவ்வேறு விளையாட்டுகளில் திளைத்துக் கொண்டிருந்தோம். அவ்வப்போது அம்மாவின் குரல் தூரத்திலிருந்து, “நீ வருகிறாயா? இல்லே நான் வரட்டுமா?” என்று மெலிதாகக் கேட்டது மட்டும்தான் ஒரேயொரு நெருடல். அப்படி இப்படியென்று மாலையிலிருந்து தொடங்கிய பல் வேறு விளையாட்டுகளில் அப்போது திருடன்-_ போலீஸ் விளையாட்டு போய்க்கொண்டிருந்தது. விளையாட்டு மட்டுமல்ல, நேரமும்தான்!
வழியில் வந்த ஒருவர், “டேய் பசங்களா, இருட்டிடுச்சே, விளையாண்டது போதும் வீட்டுக்குப் போங்க” என்று அக்கறையுடன் சொல்லும்போதுதான் நன்றாக இருட்டிவிட்டது என்பதே எங்களுக்குத் தெரிந்தது. அப்படித் தெரியாமல் இருந்ததற்கு இன்னுமொரு காரணம் இருந்தது. அன்றைக்கு முழுநிலவு நாள் முடிந்து அடுத்த நாள் என்று நினைவு! தரையில் நல்ல வெளிச்சம்! நிமிர்ந்து பார்த்தால் சிறிது தூரத்திலேயே நன்றாக இருட்டிவிட்டது தெரிந்தது. 1000 மீட்டர் தொலைவில் இருக்கும் எங்கள் வீட்டின் கூரையையும், வெட்டவெளியையும் தவிர மற்ற இடங்களிலெல்லாம் நன்றாக இருட்டி இருந்தது. எங்களுக்கு இலேசாக உதறத் தொடங்கியது. வீட்டுக்குச் சென்றுவிடலாம் என்று ஏறக்குறைய நால்வருமே முடிவு செய்துவிட்டோம்.
திடீரென்று எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. என்னை அறியாமல் துள்ளிக் குதித்து. நின்ற இடத்திலேயே அப்படியே நின்றுவிட்டேன். அதையறியாமல் செல்வராஜ், “சரி, ஆட்டத்தை இத்துடன் முடித்துக்கொள்ளலாம்” என்றான். பிறகு நான் சர்வாங்கமும் ஒடுங்கி நிற்பதைப் பார்த்து, “என்னாச்சுடா?” என்றான், வியப்புடன். எனக்கு வாய் வரவில்லை. எனக்கு 5 வயதில் திக்குவாய் இருந்தது. இது செல்வராஜுவுக்குத் தெரியும். “இன்னுமாடா இருக்கு” என்றான் கிண்டலாக. நான் இல்லையென்பதுபோல் இருண்ட முகத்துடன் தலையசைத்தேன். “அப்புறம் என்னாச்சுடா?” என்றான். “டே…ய்… கீ…கீ…ழே ஏ…தோ… ஒ…ன்னு க..க…ரு…ப்பா… போ…போ…ச்சுடா” என்று குழறினேன்.
மூவரும் ஒருவரையொருவர் அனிச்சையாக நெருக்கியடி நின்றுகொண்டு, பதற்றத்துடன் “என்னடா சொல்றே?” என்றனர், ஒருமித்த குரலில். நான் பதில் சொல்லாமல் ஒடுங்கிய படியே நின்றேன். இந்த நேரத்தில் ‘பெரியவர்கள் யாராவது அந்தப் பக்கம் வரமாட்டார்களா?’ என்ற எண்ணம் எனக்குள் தானாக ஓடியது. எனது தாய்மாமா, திருமூர்த்தி என்று பெயர். கூலி வேலை செய்துவிட்டு, நன்றாகக் குடித்து விட்டு பாதையை அளந்தபடியே, “யாரை நம்பி நான் பிறந்தேன். போங்கடா போங்க! என் காலம் வெல்லும், வென்ற பின்னே வாங்கடா வாங்க” என்ற பாடலைப் பாடிக்கொண்டே வருவார். அவருக்கு எப்போதும் இந்த ஒரே பாடல்தான்… அதைச் சரியான ராகத்துடன்தான் பாடி வருவார். ஆனால் ‘என்ன, மாமா இதே பாடலைப் பாடி வருகிறார்’என்று நாங்கள் அலுத்துக்கொள்வோம். இப்போது அந்தப் பாடல் கேட்காதா என்று ஏங்கவே தொடங்கிவிட்டேன். ஆனால்…
செல்வராஜ் சற்று உதறலுடன் என்னை இன்னமும் நெருங்கி வந்து, “டேய்… ஒரு வேளை கருப்புசாமியாக இருக்குமோ?” என்று புதிய பீதியைக் கிளப்பிவிட்டான். அவ்வளவு தான்… மற்ற மூவருமே ஒருவரையொருவர் இடித்துக்கொண்டு நின்று கொண்டோம். நால்வரின் முகங்களும் பேயறைந்ததுபோல இருண்டு கிடந்தது.
எங்கள் ஊரில் கருப்புசாமியைப் பற்றி நிறைய கதைகள் உண்டு. அவர் நள்ளிரவில் ஊர்க்காவல் பணிக்காகப் பவனி வருவார்! கையில் பெரிய அரிவாள் வைத்திருப்பார்! யாராவது குறுக்கே வந்தால் அவ்வளவுதான்… ஒரே வீச்சு! இதெல்லாம் தேவையில்லாமல் எங்களுக்கு நினைவு வந்து தொலைத்து எங்கள் பீதியை இன்னமும் அதிகப்படுத்தியது. ஒருவன், “டேய்… என் வீடுவரைக்கும் வந்து விட்டுட்டுப் போங்கடா” என்றான். ஆளாளுக்கு இதேபோல கெஞ்சியபடி இருந்தனர். இறுதியில் மிஞ்சிய நான், “உங்களையெல்லாம் விட்டுட்டு, நான் என்னோட வீட்டுக்கு தனியா எப்படிடா போறது?” என்றவுடன் அதிலிருக்கும் சிக்கல் புரிந்து செய்வதறியாது நின்றனர். நான் பயத்தில் நண்பர்களின் முகத்தைப் பார்க்க முடியாமல் தலைகுனிந்து நின்றேன்.
திடீரென்று மறுபடியும் துள்ளிக் குதித்து விட்டேன். மூவரும் அரண்டு போயினர். என் தோளைப் பிடித்து அழுத்தி, “டேய் ஏன்டா இப்படியெல்லாம் செய்றே” என்றனர் கோபத்துடன். அச்சத்தின் உச்சத்தில் இருந்த நான், “டே…ய்… செல்…வா… ம,,.ம..றுபடியும்… அதைப்… பா,,.பார்த்தேண்டா” என்று சொல்வதற்குள் உயிர் போய் உயிர் வந்ததுவிட்டது. மூவரின் கால்கள் அடுத்தவர்களின் கால்களோடு உரசியது. அடுத்தவர் தோள்களைப் பற்றிக்கொண்டு யாராவது பெரியவர்கள் வருகிறார்களா? என்று நடுங்கியபடியே நோட்டமிட்டனர்.
திடீரென்று தலையை நிமிர்த்தி செல்வராஜ், “டேய்… கருப்புசாமி நள்ளிரவு 12 மணிக்கு மேலதாண்டா வருவாருன்னு சொன்னாங்க. ஒருவேளை இது கருப்புசாமி இல்லாமகூட இருக்கலாமே” என்றான். அனைவருக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது அவனது கேள்வி. அதற்குள் இன்னொருவன், “கருப்புசாமி நினைச்ச நேரத்தில் வருவாராண்டா. இது எங்க தாத்தா சொன்னது” என்று அந்த ஆறுதலில் அடுத்த நொடியே மண்ணள்ளிப் போட்டுவிட்டான்.
ஆனால், செல்வராஜ் கேட்ட கேள்வி என்னை உசுப்பிவிட்டது. சிலர் மாற்றிச் சொல்லியிருந்தாலும் பெரும்பாலானவர்கள் நள்ளிரவு தாண்டித்தான் கருப்புசாமி வருவார் என்று சொல்லியிருப்பது நினைவில் வந்து சென்றது. இதற்காக ஏன் பயப்பட வேண்டும்? என்ற எண்ணமும் அதையொட்டியே, “எதுக்கும் பயப்படக்கூடாது டா” என்று அம்மா சொல்வதும் சேர்ந்தே நினைவில் வந்து போனது. அதனால், சற்றே துணிச்சல் ஏற்பட்டு தலையைச் சற்றே நிமிர்த்தி வானத்தைப் பார்த்தேன். அப்போதும் உடம்பைத் தூக்கிப்போட்டது. ஏற்கனவே அச்சத்தில் இருந்த மூவரும், என்னைப் பார்த்து “இப்ப என்னடா” என்றனர் பரிதாபத்துடன்.
“டேய் செல்வா, நான் சொல்றத பொறுமையாக் கேளுங்க. இப்போ தலைக்கு மேலும் கருப்பா ஏதோ பெருசா மின்னல் வேகத்தில் போச்சுடா” என்றேன். மூவரின் பதிலுக்குக் காத்திருக்காமல், “டேய்..டேய்.. இரு… இரு…போச்சா? பறந்துச்சா?” என்று தன்னையே கேள்வி கேட்டுவிட்டு, அவர்களைப் பேசவிடாமல், “டேய், நீங்க மூனு பேரும் வானத்தைப் பாருங்க. நான் தரையில் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு தரையைப் பார்க்கத் தொடங்கிவிட்டேன்.
மூவருக்கும் தலை, கால் புரியவில்லை. மூவரின் சார்பில் செல்வா “ஒரு எழவும் புரியலடா. என்னன்னுதான் கொஞ்சம் சொல்லேன்” என்றான் கோபத்துடன். எனது நிலையைக் கண்டு மற்றவர்களுக்கும் ஓரளவுக்கு கருப்புசாமி அச்சம் அகன்றதுபோல தான் இருந்தது. “செல்வா, என்னன்னு எனக்கும் தெரியலடா. அதனால்தான் மேல பார்க்கச் சொல்றேன்” என்றேன் நான். இதற்குமேல் என்னிடம் பதில் வராது என்று தெரிந்துகொண்ட மூவரும் மேலே பார்க்கத் தொடங்கினர்.
திடுக்கென்று நான், “டேய் பாத்தியா? பார்த்தியா?” என்று உச்சபட்ச பரபரப்புடன் கேட்க, மூவரும், “ஆமாண்டா, மேல ஏதோ போச்சுடா” என்றனர் அதே பரபரப்புடன். நான், ”போச்சு இல்லடா, பறந்துச்சு!” என்று அவனைத் திருத்தினேன். மூவரும், “என்னடா வித்தியாசம் இதுல” என்றனர். நான் இன்னொரு முறை, “கவனிச்சுப் பாருங்க. உங்களுக்கே தெரிஞ்சுடும்” என்றேன். நான் ஏதோவொரு முடிவுக்கு வந்துவிட்டேன் என்பதை அறிந்துகொண்டு அவர்களும் ஆவலுடன் பார்க்கத் தொடங்கினர்.
மீண்டும் அதே திடுக்கிடல்! இம்முறை உற்சாகத் திடுக்கிடல்!
“என்னடா என்னன்னு தெரிஞ்சுதா?” என்றேன் உற்சாகத்துடன். “டேய் வவ்வாலுடா!” என்றான் செல்வா. “வவ்வாலுன்னு சொல்லாதடா, பெரிய்ய்ய்ய வவ்வாலுன்னு சொல்லுடா” என்றான் மற்றவன். இப்போது நால்வருக்கும் கோவையாகப் புரிந்தது. இருந்தாலும், “முழுநிலவு வெளிச்சத்தில் மேல பறந்த வவ்வாலோட நிழல்தாண்டா, கீழ நான் பார்த்தது. உயரத்தில் பறக்கிறதுனால அதோடு நிழலு பெருசா தெரிஞ்சிருக்கு, அவ்வளவுதாண்டா” என்றேன்.
ஒரு வழியாக கருப்புசாமி அச்சம் முழுமையாக நீங்கிவிட, ”சரிடா, இது வவ்வாலுன்னு தெரிந்து போச்சு; ஆனா, கருப்புசாமி இருக்கா? இல்லையா? என்று செல்வா ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டான். எனக்கும் மற்றவர்களுக்கும் அப்போது அந்தக் கேள்விக்குப் பதில் என்னான்னு, தெரியவில்லை. ஆகவே, ”தெரியலயடா” என்றேன். அதைப்பற்றிப் சிந்திப்பதற்குள், என்னைப் பார்த்து இன்னொரு நண்பன், “டேய் உங்கம்மா வர்றாங்கடா” என்றான். அவ்வளவுதான் மூவரும் ஆளுக்கொரு மூலையில் ஓடிவிட்டனர்.
நான் ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்த நிம்மதியுடன் அம்மாவிடம் அடிவாங்கத் தயாரானேன். ஏனோ தெரியவில்லை. அன்றைக்கு அடி என்னமோ கொஞ்சம்தான். இரவு உணவு முடிந்தவுடன் படுத்துக்கொண்டு, “ஒரு வேளை இதைப் பார்த்துதான் கருப்புசாமின்னு சொல்லியிருப்பாங்களோ?” என்ற கேள்வி திரும்பத் திரும்ப உள்ளுக்குள் எழுந்தபடியே இருந்தது. பிறகு, விளையாட்டின் அசதியில் ஆழ்ந்து தூங்கிவிட்டேன்.
12 வயதிலேயே கருப்புசாமி இருக்கிறாரா இல்லையா என்ற அய்யம் எனக்குள் வந்துவிட்டது. அடுத்த சில ஆண்டுகளில் ‘இல்லை’ என்றும் புரிந்துவிட்டது.
உங்களுக்கு?.