சூழலியல் : குப்பை கழிவு மேலாண்மையும் சுற்றுப்புறப் பாதுகாப்பும்
நமது வீட்டுக் குப்பையில் பாதிக்கு மேல் மட்கும் பொருள்களே. மேலும் இந்தக் குப்பைகள் நகரம் மற்றும் கிராமப் பொருளாதார வசதிகளைப் பொருத்தும் மாறுபடும்.
அதாவது வசதிகள் அதிகம் உள்ள வீட்டில் சேரும் குப்பை எடையிலும் எண்ணிக்கையிலும் அதிகமாகவும் மட்காத கழிவுகள் அதிகம் கொண்டனவாகவும் இருக்கும். பொதுவாக மட்கும் குப்பைகள், மட்காத குப்பைகளைப்போல பெரிதாய் பேசப்படுவதில்லை என்றாலும் உலக வெப்பமாதலில் அவற்றுக்குக் கணிசமான பங்கு உண்டு.
உணவுக் கழிவுகள் மட்கும்போது வெளியாகும் மீத்தேன் வாயு, கார்பன் – டை – ஆக்சைடைவிட 25 மடங்கு அதிகமாக உலக வெப்பமயமாதலைத் துரிதப்படுத்த வல்லது. மேலும், உணவுப் பொருள்கள் உற்பத்திக்குத் தேவைப்படும் நிலம், நீர், உழவு, உரங்கள், அறுவடை, போக்குவரத்து, சந்தைப்படுத்தல், நுகர்தல், சமைத்தல் போன்ற பல நிலைகளில் ஏராளமான கார்பன் – டை – ஆக்சைடு உமிழ்வும் வளப் பயன்பாடும் சூழல் சீர்கேடுகளும் ஏற்படுகின்றன.
மட்கும் கழிவுகளைப் பொறுத்தவரையில் அவற்றைக் கையாள்வதில் கூடுதல் பொறுப்பு தனிநபர்களுக்கு இருக்கிறது. நுகர்வுக்கு முன்பான வீணடிப்புகளில் அரசு தலையிட வேண்டிய அவசியம் இருக்கிறது என்றாலும், நுகர்வு நிலையிலேயே, அதாவது வீட்டில்தான் கணிசமான உணவுப்பொருள்கள் வீணாவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
மட்கும் கழிவுகளை அவற்றின் உருவாக்கத்தி லேயே கட்டுப்படுத்துவதன் மூலமும் – தவிர்க்க முடியாத கழிவுகளைத் திறம்பட மேலாண்மை செய்வதன் மூலமாகவும் நாம் குப்பை மேலாண்மையில் 50 விழுக்காடு பிரச்சினையைச் சரிசெய்துவிட முடியும். இவற்றில் எளிமையாகச் செய்யக்கூடிய வழிமுறைகளைப் பார்க்கலாமா?
1. சரியாகத் திட்டமிட்டு அன்றாடத் தேவைக்கான உணவுப் பொருள்களை மட்டுமே வாங்கிச் – சமைத்து உணவு வீணாவதைத் தவிர்த்தல்.
2. ஊட்டச் சத்துகளற்ற – வெறும் நாவின் சுவைக்கான உணவுகளை நுகர்வதையும் சமைப்பதையும் தவிர்த்தல்.
3. தவிர்க்கமுடியாத நிலையில் உருவாகும் குப்பையை (இடம் இருந்தால்) வீட்டிலேயே காற்றோட்டத்துடன் மட்கச் செய்து உரமாக்குதல்.
இவ்வாறு மட்கச் செய்யும்போது மீத்தேன் உருவாவது கட்டுப்படுத்தப்படுகிறது. வீட்டிலேயே மட்கச்செய்தால் உள்ளாட்சி அமைப்புக்கு குப்பை மேலாண்மையில் இருக்கும் சுமை குறைவதோடு அவற்றைக் கொண்டு நமக்குத் தேவையான சத்தான நச்சற்ற கீரைகளையும் காய்கறிகளையும் வீட்டின் சுற்றுப்புறத்திலும், மொட்டை மாடிகளிலும் தோட்டம் அமைத்துப் பயிர் செய்து பெறலாம்.
4. வீட்டில் இடம் இல்லையென்றால் மட்கும் கழிவுகளை பாலித்தீன் பையில் போட்டு திறந்த நிலையில் உள்ளாட்சி அமைப்பின் குப்பை சேகரிப்போருக்கு வழங்க வேண்டும். (பாலித்தீன் பையில் காற்றோட்டமின்றி கட்டப்பட்டுக் கொடுக்கப்படும் குப்பையிலிருந்து மீத்தேன் வாயு வெளிப்படும்.)
5. இவ்வாறு பெறப்படும் மட்கும் குப்பையை நகர நிருவாகம் அதற்கென்றே வடிவமைக்கப்பட்ட நிலையங்களில் மட்கச் செய்து தோட்டங்களுக்கு விநியோகிக்க வேண்டும். பெரிய குடியிருப்புகளில் ஏராளமான மட்கும் கழிவுகள் கிடைக்கும்போது வளாகத்திலேயே கழிவுகளிலிருந்து எரிவாயு பெறும் நிலையங்களையும் அமைக்கலாம். வீடுகளில் பால்கனியிலேயே அமைக்கத்தக்க எரிவாயுக் கலன்களும்கூட இப்போது சந்தையில் கிடைக்கின்றன.
6. குப்பைகளை நீண்ட தொலைவுக்கு எடுத்துச் செல்வது எல்லா வகையிலும் தவிர்க்கப்பட வேண்டும். மேற்கண்டவற்றைச் சிறப்பாக நடைமுறைப்படுத்த அரசிடம் குப்பை கூளங்களை வகைபிரித்துப் பெற்று, அவற்றைத் தனித்தனியே மேலாண்மை செய்யும் சிறப்பான கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டியது அவசியம்.
பெருநகரங்களில் குப்பையைக் கையாள நகர நிருவாகம் செய்யும் இந்தச் செயலை சிறு நகரங்கள் மற்றும் குடும்பங்கள் அதிக அளவில் உள்ள கிராமங்களில் வேறு ஒரு தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது
சிறு நகரம் மற்றும் கிராமங்களில் நாள்தோறும் எவ்வளவோ குப்பை சேகரமாகிறது. அவற்றைப் போட்டுவைக்க நாம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குப்பைக் கூடையை வைத்திருக்கிறோம். முன் காலத்திலும் இப்படியான கூடையை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். அது அளவில் பெரியது, அதை எங்கேயும் தூக்கிச் செல்ல முடியாது. ஆனால், அதில் ஏராளமான குப்பையைப் போட முடியும்.
நிலத்தில் ஒரு பெரிய குழியைத் தோண்டி, தமக்குப் பயன்படாது மீந்த சமைத்த உணவுக் கழிவையும் குப்பையையும் அதில் போட்டுவைப்பார்கள். அதன் பெயர் குப்பைக் குழி அல்லது எருக்குழி எனப்பட்டது. தாங்கள் வாழ்ந்த ஒவ்வொரு பொது இடத்திலும், அவரவர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் இத்தகைய குழிகள் இருந்தன. குப்பைக் கழிவுகள் பெரும்பாலும் மட்கவைக்கப்பட்டுப் பின் மறு சுழற்சி முறையில் விவசாயத்துக்கான இயற்கை உரமாகப் பயன்படுத்தப்படும்.
அக்காலத்தில் பாலிதீன் பயன்பாடோ பிளாஸ்டிக் பயன்பாடோ கிடையாது. தற்போது, உணவைவிட அதிகமான அளவில் மற்ற கழிவுகள் சேர்ந்துவிடுகின்றன. போதாக்குறைக்கு எந்தப் பொறுப்புணர்வும் இல்லாமல் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களும், பாலிதீன் பைகளும் தவிர்க்க இயலாக் குப்பையாகப் பெருகியுள்ளன.
வயல்வெளிகள் குறைந்துவிட்டதாலும் நவீனமயமாதலாலும் குப்பை உரமாகும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஆனால், வகைதொகையில்லாமல் சிறு, குறு, பெரு நகரங்கள் அனைத்திலும் குப்பை சேர்ந்துகொண்டே போகிறது. மேலும், மின்னணுப் பொருள்கள் காரணமாக உருவாகும் குப்பை பெருகுவதும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
வெகுவிரைவில் இந்தியா, மின்னணுக்கழிவுக் குப்பை பெருக்கத்தில் சீனாவை மிஞ்சும் என ஆய்வறிக்கைகள் வேறு பயமுறுத்துகின்றன. இந்தக் குப்பையைச் சமாளிப்பது தீர்க்க முடியாத பிரச்சினையாகவே மக்களுக்கும் அரசுக்கும் உள்ளது.
அரசும் பல தூய்மைத் திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இன்னும் நூறு சதவிகிதம் குப்பையை அகற்ற முடியாமல் போன சூழலில் புதிதாக ஒரு தொழில்நுட்பம் கிடைத்தால் அதுவும் பயன்படுத்திப் பார்க்கப்படுகிறது.
அதிவெப்பஎரித் தொழில்நுட்பம்
தற்போது ‘இன்சினரேட்டர்’ என்னும் அதிவெப்பநிலை எரித் தொழில்நுட்ப முறை பரவலாகிவருகிறது. இம்முறையில், குப்பையை மட்கச் செய்யாமல் அதை அதி வெப்பநிலைக்கு எரியூட்டிச் சாம்பலாக்குகிறார்கள். இந்தச் சாம்பலை, கரிம விவசாய (organic manure) உரமாகப் பயன்படுத்தலாம். தற்போது பெரும்பாலான நகரங்களில் ஊருக்கு வெளியே திறந்த வெளியில் குப்பை எரிக்கப்படுகிறது. அப்படி எரித்தால் குப்பையின் அளவு குறைந்துவிடும் என்று நம்பப்படுகிறது. இது தவறான புரிதல்.
இன்சினரேட்டர் தொழில்நுட்பம், ஒரு மூடிய கலனில், அனைத்துவகையான குப்பைகளையும் உள்ளே கொட்டி எந்த எரியூக்கியும் இல்லாமல் சாதாரணமாகத் தீப்பற்றவைத்தால் 20 – 25 நிமிடங்களில் அக்குப்பை கிட்டத்தட்ட கொட்டிய எடையிலிருந்து 10-இல் ஒரு பகுதியாகவே மிஞ்சும். இந்த எரிக்கும் கலன் 4 அடி உயரமும் 2 அடி விட்டமும் கொண்டது. இதில் ஒரு தடவை 100 கிலோவுக்கும் மேலான குப்பையைக் கொட்டி எரித்தால் எரித்துமுடித்தபின் ஒரு கிலோவுக்கும் குறைவாகவே சாம்பல் மிஞ்சும்.
இந்த எரிகலனின் உட்சுவர் செராமிக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டு அதற்கு மேல் செராமிக் பூச்சும் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 700 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலைக்கு உட்படுத்தப்படுவதால், குப்பை வெகு விரைவில் எரிந்து சாம்பலாகிறது. மேலும், விரைவில் எரிவதற்காக அதன் அடிப்பகுதியில் காற்று எல்லாத் திசைகளிலும் இருந்து செல்ல குழல்கள் போன்ற அமைப்பு (அடுப்பூதும் குழல் போல்) உள்ளது. அதற்குக் கீழ்ப்பகுதியில் எரிந்த சாம்பல் விழ சிறு கதவும் உள்ளது.
இந்தப் பூவுலகக் குப்பைகள் சூழல் உலகமாக நாம்தான் மாற்றிக் கொண்டிருக்கிறோம். அதைக் குறைத்து, தவிர்த்து, மறு சூழற்சி செய்து அல்லது புதிய முறைகளைப் பயன்படுத்தியேனும் நாம் தான் உலகைக் காக்க வேண்டும்.<