2023 இல் குழந்தைகளுக்கு ஆதரவாக என்னவெல்லாம் நடந்துள்ளன?
நாளைய சமுதாயத்தைக் கட்டமைக்கும் தூண்கள், வருங்கால இளைஞர்கள் என்றும், புன்னகை வீசும் ரோஜாக்கள் என்றும் இன்னும் எத்தனையோ வர்ணனைகளில் வர்ணித்தாலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும், சுரண்டல்களும், அடக்குமுறைகளும் தொடர்கதையாகவே இருந்து வருவதை நாம் அறிவோம். அதனால்தான் 2024இன் தொடக்கத்தில் கடந்த ஆண்டில் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காகத் தீட்டப்பட்ட திட்டங்களை முன்னிலைப்படுத்த இருக்கிறோம். 2023 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு என்னென்ன நன்மைகள் கிடைத்துள்ளன என்பதை அறிவோம், வாங்க.
1. முதன்முறையாக வங்கதேசத்தின் அகதிகள் முகாம்களில் உள்ள அனைத்து வயது வரம்பிலும் இருந்து ரோஹிங்கியா குழந்தைகள் அனைவரும் அவர்கள் குடியேறி இருக்கும் மியான்மர் நாட்டின் பாடத்திட்டத்தில் முறையான கல்வியைப் பெற பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் எண்ணிக்கை மட்டும் 3 லட்சம் ஆகும். 2021இல் ஒரு முன்னோடித் திட்டமாக இது ஆரம்பிக்கப்பட்டபோது இதனால் பயனடைந்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் பத்தாயிரம் மட்டுமே. அந்த எண்ணிக்கை 2023இல் கிட்டத்தட்ட 30 மடங்கு அதிகரித்திருக்கிறது என்றால் மிகப்பெரிய சாதனை தானே!
2. கனெக்ட்டிகட், வெர்மாண்ட் மற்றும் மிச்சிகன் ஆகிய மூன்று அமெரிக்க நகரங்களில் குழந்தைத் திருமணங்கள் முழுவதுமாகத் தடை செய்யப்பட்டு இருக்கின்றன. அதேசமயம் மின்னசோட்டா, நியூ மெக்சிகோ மற்றும் இல்லினாய்ஸ் போன்ற அமெரிக்க நகரங்கள் குழந்தைக் குற்றவாளிகளுக்கு பரோல் கொடுப்பதை வாழ்நாள் முழுவதும் தடை செய்திருக்கின்றன.
3. கருக்கலைப்புக்கான கூட்டாட்சி குற்றவியல் தண்டனைகளை நீக்கவேண்டும் என்று மெக்சிகோவின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால், மெக்சிகோவில் பெண்கள் கருக்கலைப்புப் பிரச்சினைகளிலிருந்து பெரிதும் விடுதலை அடைந்திருக்கின்றனர். இதனால் சிசுக்கொலைகளும் முடிவுக்கு வரும்.
4. மேற்கு ஆப்பிரிக்காவின் சியரா லியோன் நாடு ஒரு தொலைநோக்குக் கல்விச் சட்டத்தை இயற்றி இருக்கிறது. அச்சட்டம் குழந்தைகளுக்கு 13 ஆண்டுகள் வரை இலவசப் பள்ளிப்படிப்புக்கு உத்தரவாதம் அளிப்பதோடு, அவர்களுக்கு உடல் ரீதியான தண்டனையையும் தடை செய்கிறது. மேலும் கர்ப்பிணிப் பெண்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் குறைபாடு உடைய குழந்தைகளின் உரிமைகளையும் இச்சட்டம் பாதுகாக்கிறது.
5. நாடுகளுக்கிடையே நிகழும் ஆயுத மோதலின் போது பள்ளிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் பொருட்டு 118 நாடுகள் இணைந்து ஒரு பிரகடனத்தைக் கொண்டு வந்தனர். ஆஸ்திரேலியாவும், கயானாவும் தங்கள் நாட்டிலிருப்பவை பாதுகாப்பான பள்ளிகள் என அப் பிரகடனத்தை அங்கீகரித்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்.
6. அய்.எஸ்.அய்.எஸ் என்னும் அமைப்பு, அரசுக்கு எதிராகப் போராடுவதற்காக குழந்தைகளைப் போராளிகளாக ஆட்சேர்ப்பு செய்வதையும், அவர்களைத் தவறான வழியில் பயன்படுத்துவதையும் செய்து வந்தனர். இதைத் தடுக்க ஈராக் நாடு அய்க்கிய நாடுகள் சபையுடன் ஒரு கையொப்பமிட்டு இருக்கிறது. இதனால் குழந்தைகள் இளம் வயதிலேயே தீவிரவாதிகளாக மற்றப்படுவது தவிர்க்கப்படும்.
7. குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் உட்பட பல பிரச்சினைகளில் இருந்து மனித உரிமைக் காக்கப்பட வேண்டும் என்ற ஒரு புதிய சட்டத்தின் உரையை அய்ரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தையாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இதனால் குழந்தைகள் உரிமைகள் பெரிதும் பாதுகாக்கப்படும்.
8. குழந்தை உரிமைகளுக்கான அய்.நா குழு 121 நாடுகளில் உள்ள 16000 குழந்தைகளிடமிருந்து காலநிலை மாற்றும் மற்றம் பிற சுற்றுச்சூழல் நெருக்கடிகளை எதிர்கொள்வது எப்படி என்பதற்கான உள்ளீடுகளைப் பெற்று குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் கடமைகளை விவரிக்கும் அதிகாரப்பூர்வமான வழிகாட்டுதலைத் தொடங்கி இருக்கிறது.
9. பிரேசில், இந்தியா மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆகியவை மில்லியன் கணக்கான மாணவர்களின் ஆன்லைன் தனியுரிமையைப் பாதுகாக்க கற்றல் இளணயதளங்களில் இருந்து தேவையற்ற விளம்பரங்களை அகற்றுவதோடு, கல்வி அல்லாத நோக்கங்களுக்காக குழந்தைகளுக்குத் தரவைப் பயன்படுத்தும் ஆன்லைன் கற்றல் தளங்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையையும் செயல்படுத்தி இருக்கின்றன.
10. பல்கேரியா, ஸ்லோவாக்கியா, தென்னாப்பிரிக்கா மற்றும் பெரு ஆகிய நாடுகள் குழந்தைகளுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வந்த வெடி மருந்துகளை மொத்தமாக அழித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக கிளஸ்டர் வெடி மருந்துகளை அழிப்பதற்கான மாநாட்டில் பங்கேற்ற 112 மாநிலங்களும் இந்த கொடிய ஆயுதங்களின் கையிருப்புகளை அழிக்க வேண்டிய தங்கள் கடமையை இப்போது நிறைவேற்றத் தொடங்கி இருக்கின்றன.
குழந்தைகளின் ஆரோக்கியமான மற்றும் அறிவார்ந்த வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சி!. ஆகவே, அத்தகைய குழந்தைகளுக்காக நாம் இன்னும் ஏராள நன்மைகள் செய்ய வேண்டும். 2024 மேலும் புதிய புதிய அறைகூவல்களைக் எதிர் கொள்ள நேரிடலாம். எந்த ஒரு நாட்டின் அரசாங்கமும் தங்கள் பதவிகளில் ஓய்வெடுக்க முடியாது. குழந்தைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் உரிமைகளை முன்னேற்றுவதற்கும். தொடந்து முயற்சிகளை முடுக்கி விட வேண்டும். அதற்கான ஆக்கபூர்வமான செயல்பாடுகளை முன்னெடுப்போம்.<