நடந்த கதை – 5 : பெரியாருக்கு வந்த அழைப்பு!
விஷ்ணுபுரம் சரவணன்
“சத்தியாகிரகவாதிகள் திட்டமிட்டப்படி வெற்றிகரமாக முதல் நாள் போராட்டத்தை நடத்திட்டாங்க”
“ஆமா அம்மா. அதைக் கேட்கிறப்பவே செம த்ரில்லா இருக்குது”
“ஆயிரம் ஆண்டு பழக்கம் என மனிதர்களை தெருக்கள்ல நடமாடத் தடை விதிக்கிறது எவ்வளவு பெரிய அநீதி, இல்லையா?”
“மிகப்பெரிய அநீதிதாம்மா… அது சரி… அன்னிக்கு மாலை நடந்த கூட்டத்தில் ஜார்ஜ் ஜோசப் என்ன பேசினார்… சீக்கிரம் சொல்லுங்கம்மா”
“இதைத்தான் ஜார்ஜ் ஜோசப் கடுமையாகக் கேட்டாரு. மக்கள் வரிப்பணத்துல போட்ட சாலையில இந்துக்கள்ல சில பிரிவினர் நடக்கத் தடை போடலாமா என்று உரக்கக் கேட்டாரு.”
“ஓ!”
“கடுமையான தடைகள் இருந்த காலம் அது. மகாராஜாவுக்கு ஊரே பயந்துகிடந்த காலம். நியாயமாக இருந்தாலுமே அரசாங்கத்துக்கு எதிரா எது செய்தாலும் தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தைத் தந்த காலம். அப்போதுதான் அந்தப் போராட்டம் நடந்துச்சு இல்லையா?”
“ஆமா அம்மா”
“அந்தக் காலத்துல ஆதிக்கஜாதி அடக்குமுறைக்கு எதிராகப் போராட்டத்துல கலந்துகிட்டு சத்தியாகிரகம் செய்யப் பலரும் முன் வரமாட்டாங்கனு நிறையப் பேர் நினைச்சிட்டு இருந்தாங்க. ஆனா, ஜார்ஜ் ஜோசப் அன்னிக்கு பேசறப்ப, போராட்டத்திற்கான நியாயங்களைச் சொல்லி எப்படிப் போராட்டம் நடந்துச்சினு விவரிச்சார். எவ்வளவு அடக்குமுறைகள் இருந்தப்பயும் 60 பேர் சத்தியாகிரகம் செய்ய முன் வந்தாங்களாம்”
”அப்படியா?”
”அன்னிக்கு நடந்த போராட்டம் பற்றிதான் வைக்கம் முழுக்கவே பேச்சு. அடுத்த நாள் என்னாகுமோ என விவாதிச்சிட்டு இருந்தாங்க”
“அடுத்த நாள் என்னாச்சு?”
”முந்தைய நாளைப் போலவே ஓர் ஆதிக்க ஜாதியைச் சேர்ந்தவரும் தெருவில் நடக்கத் தடை விதிக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த இருவரும் செல்ல முடிவானது. அதன்படி ஒரு நாயரும் ஒரு புலையர் பிரிவைச் சேர்ந்தவரும் தெருவுக்குள் செல்லத் தொடங்கினார்கள்”
”ம்”
“காவல் துறை வழக்கம்போல அவங்கள கைது செய்து திருவனந்தபுரம் சிறைக்கு அனுப்பினுச்சு. போராட்டத்தோட இரண்டாம் நாளும் கொஞ்சம்கூட தீவிரம் குறையாம தொண்டர்கள் இருந்தார்கள். போராட்டத்தில என்ன நடக்குது என்பதை காந்தியடிகளுக்கு காங்கிரஸ் தலைவர்கள் தந்தி மூலமாகத் தெரிவிச்சுக்கிட்டு இருந்தாங்க”
“எதிர்தரப்புல ஒண்ணுமே செய்யலையா?”
“அவங்க செய்யாமலா இருப்பாங்க. காந்தியை நேரில் போய்ப் பார்த்தாங்கன்னு சொன்னேன் இல்ல”
”ஆமா”
“அதோட பலனா, காந்தி ஒரு கடிதம் எழுதி கேசவ மேனனுக்கு அனுப்பறாரு. அதில. ‘சிவராம அய்யரும் வாஞ்சேசுவர அய்யரும் தன்னை வந்து பார்த்ததாகவும் பிரச்சனைக்கு உரிய தெருக்கள் பிராமணர் அறக்கட்டளைக்குச் சொந்தமானது என்றும், விரைவில் அவர்களோடு பேசி நல்ல முடிவு எடுப்பதாகவும் அதுவரை சத்தியாகிரகத்தை நிறுத்தி வைக்கும்படியும் கேட்டுக்கிட்டதாக அந்தக் கடிதத்தில் காந்தி எழுதியிருந்தார்.
“ஓஹோ”
“’அந்த அய்யர் சகோதரர்கள் சொல்றது உண்மையின்னா, அவங்களுக்கு இடம்கொடுத்து உதவி செய்யலாமே’ என்று காந்தி எழுதியிருந்தாரு. ஆனா, போராட்டம் சூடு பிடிச்சுப் போயிட்டு இருந்ததால அது பொருட்படுத்தப்படல”
“மூன்றாம் நாளுகீம் அதேமாதிரி மூன்று பேர் உள்ளே நுழையப் போயி கைது செய்யப்பட்டாங்களா?”
“இல்ல செழியா. இரண்டு நாள் நடந்த போராட்டம் அடுத்த ஆறு நாள் நடக்கல”
“அய்யோ… ஏன்… என்னாச்சும்மா?”
“இளைய ராணி கோவிலுக்கு வந்தாங்க… அதனால அப்பறம் சில காரணங்களால போராட்டம் நடக்கல”
“போராட்டக்காரர்கள் பயந்துட்டாங்கனு எல்லோரும் நினைப்பாங்களே”
”நீ சொல்றது சரிதான். சிலர் அப்படித்தான் பேசினாங்க… அதுக்கு நியாயமான பதிலைச் சொன்னார் ஜார்ஜ் ஜோசப்”
”என்ன சொன்னார்?”
“காங்கிரஸ்காரர்களும், சத்தியாகிரகக்காரர் களும் எந்தப் பெண்ணிடமும் மரியாதை இல்லாமல் நடந்துக்க மாட்டோம். அதனால்தான் இளைய ராணி வந்தப்ப போராட்டம் நடத்தல. ஆனா, அதேநேரம் மகாராஜா வந்திருந்தா இன்னும் வேகத்தோட போராட்டத்தை நடத்தியிருப்போம்னு சொன்னார். அதுமட்டுமல்ல, பல கூட்டங்கள் போட்டு போராட்டத்தைப் பற்றி விளக்கிப் பேசிக்கிட்டே இருந்தாரு. அதனால போராட்டம் பற்றின தீவிரம் மக்கள்கிட்ட குறையவே இல்லை”
“ம்ம்”
“தலைவர்களை முடக்கிட்டால் போராட்டம் நின்னு போயிடும்னு அரசாங்கம் திட்டம்போட்டுது. அரசாங்கம் இப்படித்தான் நினைக்கும்னு காங்கிரஸ் தலைவர்களுக்கு நல்லா தெரியும். அதனால அக்கம் பக்கத்தில இருக்கிற மாகாணங்களிலுள்ள தலைவர்களோட ஆதரவைப் பெறணும்னு நினைச்சாங்க”
“ஓ!”
“போராட்டத்தில இருந்த குரூர் நீலகண்ட நம்பூதிரி என்பவர் ஏப்ரல் நான்காம் தேதி, உடனே வைக்கத்துக்கு வருமாறு பெரியாருக்கு ஒரு தந்தி அனுப்புனாரு.”
“பெரியார் உடனே வந்துட்டாரா’ அம்மா?”
“இல்ல செழியா… அந்த நேரத்துல காங்கிரஸ் கட்சித் தலைவரா பெரியார் இருந்தாரு. அதனால நிறைய வேலைகள் அவருக்கு இருந்துச்சு. அப்ப, குளித்தலை நகரிலே மாநாடு வேற இருந்துச்சு. அதனால, தான் அவசியம் வைக்கத்துக்கு வர வேண்டுமா என்று கேட்டு, பதில் தந்தி அனுப்பினாரு.”
“அப்பறம்?”
“ஏப்ரல் ஆறாம் தேதி ஜார்ஜ் ஜோசப் மீண்டும் ஒரு தந்தி கொடுத்து பெரியாரை வைக்கத்துக்கு அழைச்சாரு. அப்பவும், தான் கட்டாயம் வர வேண்டுமா எனக் கேட்டு பதில் அனுப்பினாரு”
“ஓஹோ… நின்னுபோன போராட்டம் ஆறாம் தேதி வரைக்கும் நடக்கலையா… அப்பறம் எப்பத்தாம் திரும்ப ஆரம்பிச்சாங்க?”
”ஆறு நாட்கள் கழிச்சி, ஏப்ரல் ஏழாம் தேதி மறுபடியும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டாங்க. வழக்கமாக, தொண்டர்கள்தானே உள்ளே போவாங்க.. இந்த முறை வேற மாதிரி திட்டம் போட்டாங்க”
“என்ன திட்டம் அம்மா?”
“இந்த முறை காங்கிரஸ் தலைவர்களே முன்னின்று பிரச்சனைக்கு உரிய தெருக்களுக்குள்ள போறது என்பதுதான். அதன்படி தலைவர்கள் கே.பி.கேசவமேனனும், டி.கே.மாதவனும் துணிச்சலோடு போராட்டக் களத்துக்குப் போனாங்க. தலைவர்களே கலந்துகொள்ற நாள் என்பதால கூட்டம் கட்டுக்கடங்காம இருந்துச்சு.”
“ஆஹா”
“இவ்வளவு கூட்டத்தைக் காவல் துறை எதிர்பார்க்கல. அதனால் பிரச்சனைக்கு உரிய இடத்துக்குப் பக்கம் போறதுக்கு முன்னாடியே இரண்டு பேரையும் கைது செய்துடுச்சு காவல் துறை”
“இரண்டு பேரும் தடை செய்யப்பட்ட ஜாதிக்காரங்க இல்லையே? அப்பறம் ஏன் கைது செய்தாங்க?”
“சரியான கேள்வி செழியா… தடுக்கப்பட்டுள்ள தெருக்கள்ல தடை செய்யப்பட்ட பிரிவினரை நடக்கச் சொல்லி தூண்டினதாகவும், அதனால ஜாதி ஹிந்துகளுக்கு ஆத்திரம் வந்து கலவரம் நடக்கலாம்னு சொல்லி இவங்க ரெண்டு பேரையும் கைது செய்ததா அரசுத் தரப்புல சொன்னாங்க.”
“என்ன அநியாயம் இது? தலைவர்கள் எதுவும் சொல்லலையா?”
“அது எப்படிச் சொல்லாமல் இருப்பாங்க. எல்லாத் தெருக்களிலேயும் எல்லோரும் நடக்க அனுமதிக்க வேண்டும் என்பதுதான் எங்க கோரிக்கை. தனிப்பட்ட யார் மீதும் வெறுப்பு கிடையாதுனு வாதம் செஞ்சாங்க”
“தீர்ப்பு என்னாச்சும்மா”
“அய்ந்நூறு ரூபாய் பணம் கட்டினால் பிணை என்றும், இல்லாவிட்டால் ஆறு மாதம் சிறைத் தண்டனை என்றும் சொன்னார். தலைவர்கள் பணம் கட்ட முடியாதுன்னு சொன்னதும் திருவனந்தபுரம் சிறைக்கு அனுப்பிட்டாங்க”
”அடடா?”
“போராட்டத்தில் கலந்துகொண்டு தண்டனை பெற்றவங்களப் பார்த்து பரிதாபப்படக் கூடாது செழியா… அடுத்த நாள் ஏப்ரல் 8ஆம் தேதி திருவனந்தபுரம் காங்கிரஸ் கட்சிச் செயலாளர் குமாரோடு ஈழவர் ஒருவரும், புலையர் ஒருவரும் போராட்டத்துல கலந்துகிட்டாங்க. அவங்களையும் காவல் துறை கைது செய்தது. நீதிமன்றம் அவங்களுக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனையும் கொடுத்துச்சு”
“ஓ!”
“இப்படியே போராட்டம் தொடர்ந்து நடந்துச்சு. ஏப்ரல் பத்தாம் தேதி அன்னிக்கு அரசாங்கம் அதிரடி மாற்றம் ஒன்னு செய்தது. அதை எப்படி எதிர்கொள்றதுன்னு போராட்டக்காரர்கள் ரொம்பவே குழம்பிட்டாங்க. இனிமே போராட்ட வடிவத்தை எப்படி நடத்தறதுன்னு விவாதிச்சாங்க”
“அப்படி என்ன மாற்றம் அம்மா?” <
(தொடரும்)