க்ளாப்ஸ்
கலைத் திருவிழாவிற்குப் பேரு கொடுக்க விருப்பம் இருக்கிறவங்க பேரு கொடுங்க. பேச்சுப்போட்டி, கதை சொல்லல் போட்டி, ஓவியப் போட்டி, புத்தக விமர்சனம், நடனப் போட்டி இதுல எல்லாம் கலந்துக்கிறவங்க ஆறாம் வகுப்பு டீச்சர் உதயாகிட்ட பேரைக் கொடுங்க. நடனத்துக்கு….’ என்பதுவரையே கேட்டது. ஆசிபாவிற்கு அதற்கு மேல் கேட்கவில்லை. பேச்சுப்போட்டிக்கும் கதை சொல்லலுக்கும் பெயர் கொடுத்துவிடலாம் என இருந்தாள். என்ன கதை சொல்லலாம், என்ன புத்தகம் பற்றிப் பேசலாம், என்ன தலைப்பில் பேசலாம் என யோசித்துக்கொண்டே இருந்தாள். மதிய இடைவேளையில் சாப்பிட்டுவிட்டு உதயா ஆசிரியரைப் பார்க்கச் சென்றாள். ஆசிபா வந்ததும் உதயா தன் அருகே அமர வைத்து “நான் சொல்றேன் அந்தப் பெயரை எல்லாம் வரிசையா எழுது, உன் கையெழுத்து நல்லா இருக்கும்” என்று சொல்லிப் பெயர்களை எழுதச் சொன்னார். எழுதி முடிந்ததுமே சட்டெனக் கிளம்பிவிட்டார்.
ஆசிபா தன் பெயரையும் அந்தப் பட்டியலில் சேர்க்க மிகவும் விருப்பப்பட்டாள்.
மறுநாள் வகுப்பில் அதே பட்டியலை வாசித்தார் உதயா. “வேற யார் பெயரையாச்சும் சேர்க்கணுமா? விடுபட்டிருக்கா?” எனச் சொன்னதும் மெல்ல ஆசிபா கையை உயர்த்தினாள். “ஆசிபாதான் இந்தப் பட்டியலை அழகா எழுதிக்கொடுத்தா, அவளுக்கு எல்லோரும் க்ளாப்ஸ் கொடுங்க” எனச் சொல்லிவிட்டு வகுப்பிலிருந்து நகர்ந்துவிட்டார். வாட்டமாக ஆசிபா அமர்ந்தாள். பக்கத்து வரிசையில் இருந்த ராம், ஆசிபாவை அழைத்தான். “நீ பேச்சுப் போட்டியில கலந்துக்கணுமா?” என்றான். ‘ஆமா’ என்று தலையாட்டினாள் ஆசிபா. ஆசிபாவின் பெயரையோ அல்லது அவள் விருப்பத்தையோ யாரும் கேட்காததற்குக் காரணம் ஆசிபாவால் சரளமாகப் பேச முடியாது. அவளுக்குக் கொஞ்சம் வாய் திக்கும். வெகு சில சமயங்களில் மட்டுமே சரளமாகப் பேசுவாள். ராம் அவளுடைய நண்பன். அவளின் மன ஓட்டத்தையும் மன வருத்தங்களையும் புரிந்துகொள்பவன்.
உதயா டீச்சரிடம் சென்று ஆசிபாவின் பெயரைச் சேர்க்கச் சொன்னான். அவர் மறுத்துவிட்டார். “எனக்கு ஏற்கனவே இந்த எல்லாத் தகவலையும் எமிஸில்ல ஏற்றணும். அடுத்த வட்டார நிகழ்ச்சிக்குக் கூட்டிகிட்டுப் போகணும், செம தலைவலி ராம். ஆசிபா பெயரைச் சேர்க்க முடியாது. வெளிய போய் மானத்தை வாங்கிடுவா” எனச் சொல்லிவிட்டார். ஆசிபாவிடம் “நீ உன் பேச்சினைத் தயார் செய்துக்க” என்றான். ஆனால், எப்படி அவளைப் பேச வைப்பது என அவனுக்கும் தெரியாது.
கலைத்திருவிழா பள்ளி அளவில் நடந்து முடிந்து, வட்டாரம், மாவட்டம் எனப் போய்க் கொண்டே இருந்தது. இதற்கு இடையில் திடீரென இரண்டு நாட்களில் மாவட்ட ஆட்சியர் பள்ளிக்கு வருகின்றார் என ஒரே பரபரப்பு. கலைத் திருவிழாவிற்காக ஏற்கனவே தடபுடலாக கலை நிகழ்ச்சிகளைத் தயாரித்து இருந்ததால் அதனையே மாவட்ட ஆட்சித் தலைவர் நிகழ்ச்சிக்குப் போட்டுவிடலாம் என முடிவு. பக்கத்தில் இருக்கும் நான்கு கிராமங்களிலிருந்தும் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். மாவட்ட ஆட்சியரின் வண்டி கம்பீரமாக வந்து நின்றது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேர நிகழ்ச்சி.
“ஆசிபா, உன் பேச்சு தயாரா?” என்றான் ராம்.
“நான்… த..த..யாரா இருக்கிறேன் ராம். ஆ..ஆ..ஆனா எங்க பேசுவேன்” என்றாள்.
“நாலு பேரு கேட்டால் போதுமா?”
“நீ மட்டும் கேட்டாக்கூட போதும்” என்றாள்.
பள்ளி மாணவர்களைக் கட்டுப்படுத்துவது சிரமமாக இருந்தது. அய்ந்து அடிக்கு ஓர் ஆசிரியர் என நின்றுகொண்டு இருந்தார்கள். ஆனாலும் நிகழ்ச்சி நடக்கும்போது ஓயாத சத்தம். தங்களுக்குள் பேசிக்கொள்வதால்தான். கவிதை வாசிப்பு, சின்னச் சின்ன தலைப்புகளில் உரை என்று எதையுமே கவனிக்கவில்லை. அவ்வப்போது தலைமை ஆசிரியர் நடந்து வரும்போது அமைதியாவார்கள். மாவட்ட ஆட்சியரே மேடையிலிருந்து இறங்கி மாணவர்கள் மத்தியில் அமர்ந்த பின்னர் கொஞ்சம் சத்தம் அடங்கியது.
நன்றியுரைக்கு முன்னர் ஆட்சியரைப் பேச அழைத்தனர். அவர் தன் பேச்சினைத் துவங்கினார். “அனைவருக்கும் வணக்கம். எனக்குப் பேசுவதற்கு இருபது நிமிடங்கள் ஒதுக்கி உள்ளனர். அவ்வளவு நேரம் நான் பேசப்போவது இல்லை, 10 நிமிடங்கள்தான் பேசப்போகின்றேன்” என்றதும் கைதட்டல். “அந்த பத்து நிமிடங்களை உங்களில் ஒருவருக்குத் தரப்போகின்றேன். எட்டாம் வகுப்பு ஆசிபா எங்கிருந்தாலும் மேடைக்கு வந்து உங்கள் உரையைத் தரவும்” என்று சொல்லி அமர்ந்துவிட்டார்.
ஒரே சலசலப்பு. “ஆசிபா… ஆசிபா உன்னைக் கூப்பிட்றாங்க.” ஆசிரியர்களுக்கு ஒரே ஆச்சர்யம்! ஆசிபா ஏதும் தெரியாமலும் புரியாலும் மேடையை நோக்கி நடந்தாள். மேடை ஏறி ‘மைக்’ முன்னால் நின்றாள். உடலெல்லாம் வியர்த்துவிட்டது. கூடுதல் ஆச்சரியமாக ஒரே அமைதி. பள்ளியில் பெரும்பாலானவர்களுக்கு ஆசிபாவால் சரளமாகப் பேச முடியாது என்பது நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும் என்ன பேசப்போகின்றாள் என்ற குறுகுறுப்பு.
இரண்டு நிமிடங்கள் அப்படியே நின்றாள். கூட்டத்திலிருந்து ஒரு கை உயர்ந்தது. பெருவிரலைக் காட்டி ‘thumbs up’ என்று காட்டியது, ராம்!!. ஆசிபா திணறித் திணறித் துவங்கினாள்
“வணக்கம் நண்பர்களே. உங்களோடு சில நிமிடங்கள். அடுக்கு மொழியில் எனக்குப் பே..பே பே பேச வராது. எனக்குள்ளே ஒரு கேள்வி இருக்கு. ஆண்டு முழுக்க பல நாட்களைக் கொண்டாடுகின்றோம். தேசத்தின் தலைவர்களைக் கொண்டாடுகின்றோம். காந்தி ஜெயந்தி, குழந்தைகள் தினம், ஆசிரியர் தினம், அம்பேத்கர் பிறந்த நாள், காமராஜர் பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள், அண்ணா பிறந்தநாள் என்று கொண்டாடுகிறோம். எல்லோரும் வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள். பல தியாகங்களைச் செய்துள்ளனர். ஏன் ஒரு பெண்ணும் இதில் இல்லை? அவர்களைத் தலைவர்களாக உருவாகவிடவில்லையா? அல்லது அவர்களைக் கொண்டாடவில்லையா? இதனைச் சொன்னதும் சில பெயர்கள் உங்கள் மனதில் வந்து போகலாம். ஆனால், இன்னும் எங்களைப் போன்ற குழந்தைகளுக்குப் பெண் தலைவர்களின் பெயர்கள் பெண் ஆளுமைகளின் பெயர்கள் மற்றும் அவர்களின் தொண்டுகள் பற்றி பரவலாகச் சொல்லப்படுவதில்லை. இந்த ஆண்டு ஆசிரியர் தினத்தின் போது சாவித்ரிபாய் பூலே பற்றி எங்கள் ஆசிரியர் சொல்லிக் கேள்விப்பட்டோம். தேசிய அளவில் அவரை ஏன் கொண்டாடவில்லை? பெண்களைத் தலைவர்களாக உருவாக்க எல்லா வழிகளையும் மேற்கொள்வோம். வாய்ப்பை எனக்குக் கொடுத்த ஆட்சியருக்கு நன்றி” எனப் பேச்சை முடித்தாள்.
எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். ஒன்று, அவள் சரளமாகப் பேசியதற்கு; மற்றொன்று, அவள் பேசிய கருத்துக்கு. தலைமை ஆசிரியர்கள் எல்லோரும் பெருமைகொண்டனர். சிலர் கண்களைத் துடைத்துக்கொண்டனர். கலெக்டர் மீண்டும் ஒலி வாங்கியின் (மைக்) முன் நின்றார். “ஆசிபாவிற்கு நல்வாழ்த்துகள்! அவர் பேசும்போதே அலைபேசியில் வேறு ஏதாவது நாட்கள் இருக்கா எனத் தேடியும் பார்த்தேன். நுட்பமாகக் கவனித்துள்ளார். ஆசிபாவைப் பாராட்டும் அதே வேளையில் மற்றொருவரையும் நாம் பாராட்ட வேண்டும்.
ராம்!!
நேற்று மாலை ஆட்சியர் அலுவலகத்தில் என்னை வந்து சந்தித்தான் ராம். பள்ளியிலிருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கு என் அலுவலகம். தனியாளாகச் சைக்கிள் மிதித்து வந்தான். என்னைச் சந்திக்கவேண்டும் என விடாப்பிடியாக இருந்தான். சிசிடிவியில் இவனைப் பார்த்து வரவழைத்துப் பேசினேன். தன்னுடைய நண்பரான ஆசிபாவைப் பேச வைக்கவேண்டும் என விரும்பிக் கேட்டுக்கொண்டான். பள்ளியிலேயே சொல்லலாமே என்றேன். ஆசிபாவிற்கு இருக்கும் சிக்கலைச் சொன்னான். ஆசிபாவைப் பாராட்டும் அதே அளவிற்கு ராமையும் பாராட்ட வேண்டும். தன் நண்பருக்காகத் துணை நிற்பது அவசியம். ஆசிபாவின் கேள்விக்கான விடைகளையும் நாம் ஆராய்வோம். நன்றி” என முடித்தார். ராமும் ஆசிபாவும் மேடை ஏற்றப்பட்டனர். இருவருக்கும் புத்தகங்கள் பரிசாகக் கொடுத்தார் ஆட்சியர்.
கரவொலி நிற்கவே இல்லை!