நினைவில் நிறுத்துவோம்! உணர்வு – என்ஜீன்; அறிவு – ஸ்டேரிங்
உள்ளத்தனையது உயர்வு’’ என்றார் வள்ளுவர். ஒருவரது உள்ளம் எப்படிப்பட்டது என்பதைப் பொறுத்தே அவரது வாழ்வும் அமையும். உள்ளம் நல்லவுள்ளமாய் இருப்பின் அதில் எழும் எண்ணங்கள் நல்லவையாக இருக்கும். எண்ணங்கள் நல்லதாயின் செயலும் நல்லதாய் அமையும். உள்ளம் கொடியதாயின் எண்ணங்களும் கொடியதாய் இருக்கும். எண்ணம் கொடியதாய் இருப்பின் செயலும் கொடியதாய், கெட்டதாய், தீயதாய், கேடு தருவதாய் இருக்கும்.
வீரம், அச்சம், கருணை, பாசம், மகிழ்வு, கவலை, உறுதி, உறுதியின்மை, தயக்கம், கலக்கம் எல்லாம் உள்ளத்தில் எழும் உணர்வுகளே!
உள்ளம் என்பதை மனம் என்றும் அழைக்கிறோம். உள்ளம் என்பது மூளையில் உணர்வுகள் தோன்றும் இடம். ஆனால், அந்த உணர்வுகள் உள்ளத்தை ஆட்டுவிக்கும். பிள்ளைகளைப் பெற்றவர்கள் தாய் தந்தையென்றாலும், அப்பிள்ளைகள் வளர்ந்ததும் பெற்றவர்களை ஆட்டுவிப்பதுபோலத்தான் இதுவும்.
உள்ளம் உணர்வுகளால் பதிக்கப்படாமல் தடுக்க அறிவால் மட்டுமே முடியும். மோட்டார் வாகனத்திற்கு ‘ஸ்டேரிங்’ போல மனிதனுக்கு அறிவு. மோட்டார் வாகனத்தை ‘என்ஜின்’ இழுத்துச் செல்லும். என்ஜின் இழுத்துச் செல்லும் இடமெல்லாம் வாகனம் சென்றால், பள்ளத்தில் வீழ்ந்தோ, பாறையில், மரத்தில் மோதியோ சிதையும்.
என்ஜின் வாகனத்தை இழுத்துச் செல்லும்போது, எங்கு ஓரம் செல்ல வேண்டும், எங்கு திருப்ப வேண்டும் என்று கணக்கிட்டுச் செய்வது ஸ்டேரிங். அதேபோல் மனிதரை இயக்கிச் செல்வது அவர்களது உணர்வு. உணர்வு இழுத்துச் செல்லும் படியெல்லாம் ஒருவர் சென்றால், மோதிச் சிதறி அழிய நேரிடும். வாகனத்தை செல்லவேண்டிய இடம் நோக்கி எப்படி வளைத்து, திருப்பி, ஒதுக்கிக் கொண்டு செலுத்துவதற்கு ஸ்டேரிங் பயன்படுகிறதோ அப்படி, மனிதரை உணர்வு வழிசெல்லாது, அவர்களது இலக்கு நோக்கி இட்டுச் செல்வது அவர்களுடைய அறிவு ஆகும்.
இதைத்தான் நம் வள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே,
“சென்ற இடத்தான் செலவிடாது தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.’’ என்றார்.
உணர்வு செல்லுகின்ற இடமெல்லாம் செல்லாமல், தீமைகளை விலக்கி நல்இலக்கு நோக்கி, சரியான வழியில் கொண்டு செல்வது அறிவு என்றார்.
இயற்கையில் மனிதர்க்கு உல்லாசமாக ஊர்சுற்றி, சுவையானவற்றைத் தின்று, சுகமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு(விருப்பம்) இருக்கும். உல்லாசத்தையும், சுவையையும், சுகத்தையும் விரும்பி, அவற்றைத் தேடி, அனுபவித்து வாழ்ந்தால் அவர்கள் செய்யவேண்டிய கடமை, பணி, சாதனை எதையும் செய்ய இயலாது. கடமை, பணி, சாதனை செய்ய, கடினப்பட்டு, உடலை வருத்தி, தனது விருப்பங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு செயல்பட வேண்டும். அப்போதுதான் வாழ்வு சிறப்பாக, மகிழ்வாக, போற்றும்படியாக அமையும்.
காய்கறி, கீரை, கசப்பு, துவர்ப்பு உடலுக்கு நல்லது. ஆனால், நமக்கு இனிப்பு, பொரித்தது, வறுத்தது பிடிக்கும். நமக்குப் பிடிக்கும் என்பதால், இனிப்பும், வறுவலும், பொரியலும் அதிகம் சாப்பிட்டால் உடல்நலம் கெட்டுப் பல நோய்களுக்கு ஆளாக வேண்டிவரும்.
எனவே, நாக்குச் சுவைக்கு அடிமையாகாமல், அறிவைப் பயன்படுத்தி உடல்நலத்துக்கு எது நல்லது என்று அறிந்து, தேர்வு செய்து சாப்பிட வேண்டும். அளவோடு இனிப்பும், வறுப்பும் சாப்பிட வேண்டும்.
அதேபோல, படிப்பைவிட நண்பர்களோடு சேர்ந்து சிரித்து, ஆடிப்பாடி மகிழ்வதும், ஊர்சுற்றுவதும் எல்லோருக்கும் பிடிக்கும். படிப்பதில் அதிக விருப்பம் இருக்காது. உள்ளம் விரும்புகிறது என்பதால் படிப்பதை விட்டுவிட்டு ஊர் சுற்றலாமா? அந்த நிலையில்தான் அறிவு என்னும் ஸ்டேரிங்கைப் பயன்படுத்தி, சரியான இலக்கு நோக்கி நம் வாழ்வைச் செலுத்தவேண்டும்.
இளம் வயதில் படித்தால்தான் வாழ்வில் உயரமுடியும், சாதிக்க முடியும், மகிழ்வாக, மனநிறைவாக வாழ முடியும் என்பதை அறிவு கொண்டு சிந்தித்து, கல்வியில் கவனம் செலுத்திப் படிக்கவேண்டும். தேவையான அளவு கேடில்லா வகையில் உல்லாசமாக, நல்ல நண்பர்களோடு பழக வேண்டும், விளையாட வேண்டும், பொழுது போக்க வேண்டும்.
அதனால்தான், “உழைக்கும்போது உழைக்க வேண்டும்; விளையாடும்போது விளையாட வேண்டும்’’ என்று கூறினார்கள். அதாவது, எதை எதை எப்போது செய்ய வேண்டுமோ அதை அதை அப்போது செய்ய வேண்டும். எந்த அளவிற்குச் செய்ய வேண்டுமோ அந்த அளவிற்குச் செய்ய வேண்டும்.
பொதுவாக மனிதர்களுக்கு, குறிப்பாக பிள்ளைகளுக்கு, இளைஞர்களுக்குக் கேடானவற்றில் ஆர்வம் அதிகமாக இருக்கும். செல்போனில் அதிகம் பார்ப்பது, சாக்லெட், சிப்ஸ் சாப்பிடுவது, அதை விட கேடான புகைப் பிடிப்பது, மது அருந்துவது, போதை மாத்திரை சாப்பிட்டு போதையில் கிடப்பது போன்றவற்றில் விருப்பம் அதிகம் இருக்கும். நண்பர்களோடு சேர்ந்து இவற்றை நுகர்வது மகிழ்ச்சியைத் தரும். ஆனால், உள்ளம் விரும்புகிறது என்பதற்காக இவற்றைச் செய்தால் கேடும் அழிவும் வரும். எனவே, இச்சூழலில் அறிவைப் பயன்படுத்தி, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதை அறிந்து, கேடானவற்றை விலக்கி, அவற்றின் மீதுள்ள விருப்பத்தை விலக்கி, நல்லவற்றின் மீது நாட்டம் கொண்டு அவற்றைச் செய்ய வேண்டும். அப்போதுதான் வாழ்வு கேடில்லாமல், நல்ல முறையில் சிறப்பாக அமையும்.
சிறுவயதில் பிள்ளைகளுக்கு மூன்று குரங்குப் பொம்மைகளைக் காட்டி, அறிவுரை கூறுவார்கள். ஒரு குரங்கு வாயை மூடிக்கொண்டிருக்கும், இன்னொன்று காதை மூடிக்கொண்டிருக்கும், மற்றொன்று கண்ணை மூடிக்கொண்டிருக்கும்.
“தீயவற்றைப் (கெட்டவற்றை) பேசாதே; தீயவற்றைக் கேட்காதே; தீயவற்றைப் பார்க்காதே” என்பதை அக்குரங்குகள் சொல்கின்றன. எனவே, அதன்படி நீங்கள் நடக்கவேண்டும் என்பார்கள். இதை நீங்கள் வாழ்நாள் முழுவதும் மனதில் கொண்டுவர வேண்டும்.
கெட்டவை என்றால் அவற்றை விலக்குவதும், நல்லவற்றை ஏற்பதும், நல்லவர்களோடு பழகுவதும், நல்ல வழியில் நடப்பதும், உணர்வுகளை, விருப்பங்களைக் கட்டுக்குள் வைத்து, ஒழுங்குபடுத்தி வாழ்வதும் வேண்டும்.
உணர்வை அறிவு கட்டுப்படுத்தினால் வாழ்வு சிறக்கும், மகிழ்வாய் அமையும். உணர்வு அறிவை விலக்கி, தன் வழியில் சென்றால், அழிவு வரும். எனவே, உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்திச் செயல்பட்டு, வாழ்வில் உயரவேண்டும், சிறப்புப் பெற வேண்டும்.<