ஊருக்குப் போய் வந்த கரடி – 6 : காட்டுக்குள்ள பணம்!
மழையிலே அங்கிருந்து தப்பிச்சு பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வந்துவிட்டேன். ஆனா… அதுக்குள் ஊருக்குள்ள கரடி வந்துடுச்சு… ஊருக்குள்ள கரடி வந்துடுச்சு…ன்னு வாகனங்கள்ல சத்தமா கத்த ஆரம்பிச்சுட்டாங்க.’’
“அட… அந்த மாதிரி வசதி நம்ம காட்டுக்குள்ளேயும் இருந்தா… நமக்கு எவ்வளவு பாதுகாப்பா இருக்கும்…’’ என்றது மான்குட்டி.
“நீ சொல்றது புரியலியே…?’’ என்றது நரி…
“அதாவது… காட்டுக்குள்ள நம்மளைப் புடிக்கவோ, மரங்களை வெட்டவோ மனிதர்கள் யாராவது வந்தா சத்தமா கத்திச் சொல்றதுக்கு ஏற்பாடு செய்தா நாம முன்னெச்சரிக்கையா பாதுகாப்பான இடத்துக்கு தப்பிச்சுப் போகலாம்தானே…’’ என்று விளக்கம் சொன்னது மான்குட்டி..
“அப்படியே தகவல் சொன்னாலும் நாம தான் தப்பிக்க முடியும். நம்மளைக் காத்து நிக்கிற இந்த காடும் மரங்களும் எப்படி ஓடும், ஒளியும்…?’’ என்று கேள்வி கேட்டது நரி…
“நரி… நீ சொல்றது சரி… ஊருக்குப் போய் வந்த கரடியைப் பேச விடுங்க… தயவு செய்து குறுக்க குறுக்க நீங்க பேசாதீங்க…’’ என்றது முள்ளம் பன்றி…
“சரி… சரி…’’ என்றது நரி…
“ஊருக்குள்ள நான் போன சேதி எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு. அதுக்குள்ள இருட்டிப் போச்சு… நான் அங்கேயிருந்த கடைவீதிக்குள்ள இருந்த சின்னச் சின்னக் கடைகள்மேலே ஏறி நடக்க ஆரம்பிச்சேன்.
காட்டுல நமக்குச் சும்மா கிடைக்கிற பழம், காய் எல்லாத்தையும் மொத்தமாக் கொட்டி கத்திக் கத்தி விற்பனை செஞ்சுக்கிட்டிருந்தாங்க.’’
“விற்பனைன்னா… என்னாது?’’ தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தைக் கேட்டது முள்ளம்பன்றி.
“இப்ப நீ மட்டும் குறுக்கப் பேசலாமா?’’ நரி சட்டென மடக்கியது.
“என்ன செய்ய… தெரியாததைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிறது தப்பில்லியே…’’ என்றது முள்ளம்பன்றி…
“இதைத்தான் நாங்களும் செய்தோம்’’ என்றது மான்குட்டி…
“நல்லது… நல்லது… ஒவ்வொருத்தரும் தங்களோட சந்தேகங்களை அப்பப்ப… கேட்டுக்கலாம். அதான் நல்லது… அதுக்காக வளவளன்னு குறுக்கப் பேசக்கூடாது. சரியா? நீ சொல்லு…. செல்லக்குட்டி… விற்பனைன்னா என்னது? அது எனக்கும் தெரியாது… சொல்லு…’’ என்றது அம்மாக் கரடி.
“விற்பனைன்னா… மனிதர்கள் கையிலே நிறைய பணம்… அதாவது ரூபா நோட்டுங்க வச்சிருக்காங்க. அதைச் சம்பாதிக்கத்தான் ஒவ்வொருத்தரும் ஒரு வேலை செய்யிறாங்க. அந்தப் பணத்தைக் கொடுத்துதான் எல்லாரும் பொருளை வாங்குறாங்க.’’
“ஆகா! நம்ம காட்டுக்குள்ளேயும் அப்படி பணம் இருந்தா எப்படி இருக்கும்…’’ என்று காதை ஆட்டியபடி சொன்னது குட்டியானை.
“நான்தான் காட்டுலேயே பெரிய பணக்காரனா இருப்பேன்’’ என்று நெஞ்சை நிமிர்த்தி நின்றது குரங்கு.
“அது எப்படி?’’ என்று விழித்தது நரி…
“மரத்துக்கு மரம் தாவிக் குதிச்சு… காயி பழம்னு எல்லாத்தையும் பறிச்சு விற்பனை செய்தா… நான் பணம் படைச்சவன்தானே?’’ என்றது குரங்கு.
“எல்லாத்தையும் வித்துட்டு பணத்தை கையிலே வச்சுக்கிட்டு பசி எடுக்கும் போதெல்லாம் பணத்தை சாப்பிட முடியுமா?’’ எனக் கேட்டது பறக்கும் அணில்.
“காசு, பணம் இதெல்லாம் நமக்கு ஒத்து வராது… ஒவ்வொரு நாளும் கிடைச்சதைத் தின்னுப்புட்டு… மகிழ்ச்சியா வாழுற நமக்கெதுக்கு அதெல்லாம்? பணம் சம்பாதிக்கிறது கூட பெருசில்லே… பாதுகாத்து வச்சுக்கிறது நமக்கு சிரமம். வேண்டாம்ப்பா… அதெல்லாம் ஊருலேயே இருக்கட்டும்…’’ என்றது காட்டுப் பன்றி…
“ஆமா! ஆமா! மனிதர்கள் அந்தப் பணத்துக்குத்தான் அலையிறாங்க; அதிகமா சண்டை போட்டுக்குறாங்க; ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்கிறாங்க. வெட்டிக்கிறாங்க.
நான் ஊருக்குப் போனதுனாலே இதை தெரிஞ்சுக்கிட்டேன். நம்ம காட்டுலே பறிச்சுக் கொண்டு போன பலாப்பழத்தை வேற ஏதோ ஒரு ஊர்ப் பேரைச் சொல்லி ஏமாத்தி விற்பனை செய்யிறாங்க மனிதர்கள்.’’
“மனிதர்கள் கதை நமக்கெதுக்கு…? கடை வீதியிலே இருந்த நீ அப்புறம் எங்கே போனே…?’’ மான் கேட்டது.
“இரவு முழுதும் கடைவீதியிலே உள்ள கட்டடங்கள் மரங்கள்னு மறைஞ்சு ஒளிஞ்சு இருந்த எனக்குப் பசிக்க ஆரம்பிச்சுடுச்சு.’’
“ராத்திரி நேரம் கடைவீதியிலே மக்கள் நடமாட்டம் குறைஞ்சு கொஞ்சம் அமைதி ஆச்சு… தெரு ஓரத்திலே ஒரு வாகனத்திலே நிறைய பலாப்பழம் வச்சிருந்ததைப் பாத்தேன். யாருக்கும் தெரியாமே மெதுவா போயி… குட்டியா ஒரு பலாப்பழத்தை எடுத்துக்கிட்டு வந்து இருட்டுலே உக்காந்து பிச்சுத் தின்னேன்.
ஆனா… அதுக்குள்ள அந்தப் பலாப்பழ வாசனையை வச்சு ரெண்டு மூணு பேரு என்னைப் பாத்துட்டு கரடி… கரடின்னு சத்தம் போட்டாங்க.
அவ்வளதான்… பலாப்பழத்தைப் போட்டுட்டு ஓட ஆரம்பிச்சேன்.’’..<
(பயணம் தொடரும்)