புது ஆண்டுல என்னமாதிரி எல்லாம் மாற்றங்கள் வந்தா நல்லா இருக்கும்?
எப்போதும் புது ஆண்டு பிறந்தாலே அது ஒரு புதிய தொடக்கமாகவே எதிர்பார்க்கப்படுகிறது. நாம் நம் பழக்கவழக்கங்களை, மனநிலையை எல்லாம் மாற்றிக் கொள்கிறோமோ இல்லையோ புத்தாண்டு அவை அனைத்தையும் மாற்றி நமக்கு வெற்றியைத் தந்துவிடும் என்று மாணவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கிறோம்.
மாணவர்களைப் பொறுத்தவரை புத்தாண்டு என்பது அவர்கள் தங்களின் கல்வியாண்டை மீண்டுமொரு முறை புது உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் தொடங்க ஓர் வாய்ப்பு வழங்குகிறது.
அந்த வகையில் 2024ஆம் ஆண்டும் கல்வித்துறையில் சிறப்பான ஓர் ஆண்டாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஏனெனில், தற்போது கற்பிக்கும் முறை மற்றும் கற்கும் முறைகளில் தொடர்ந்து மாற்றங்களைப் புகுத்துவதில் தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
அப்படியான தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வளர்ச்சியாக என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தால் நன்றாக இருக்கும் என்பதைப் பட்டியலிடுவோம், வாங்க.
1. Hybrid வகுப்பறைகளின் எழுச்சி:
அது என்ன Hybrid? என யோசிக்கிறீர்களா.. கோவிட் தொற்றுக்குப் பிறகு, பெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் எல்லாம் ஊழியர்கள் ‘Hybrid’ முறையில் அலுவலகத்திற்கு செல்வது அதிகரித்தது. அந்த நடைமுறை பள்ளிகளிலும் வரலாம். இணைய வழி மற்றும் நேரடி வகுப்பு இரண்டையும் ஒருங்கே பெறும் கலந்த அனுபவத்தை மாணவர்களுக்கு வழங்கலாம். இதனால் வெவ்வேறு கற்றல் அனுபவங்களை மாணவர்கள் பெறுவார்கள். மாணவர்கள் பள்ளி வளாகத்தில் ஒன்று கூட முடியாத சூழலில் இந்த வாய்ப்பு தடையின்றி கற்றலுக்கு உதவும். கடந்த மாதத்தில் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் டில்லி காற்று மாசுபாடு போன்ற பேரிடர் காலங்களில் பள்ளிகளின் இயல்புநிலை முழுவதும் பாதிக்கப்பட்டது. அந்நேரங்களில் இது போன்ற நடைமுறை சற்று உதவியாக இருக்கும். ஆனாலும் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு Hybrid வகுப்பறைகள் இப்போதைக்குக் கை கொடுக்காது.
2. செயற்கை நுண்ணறிவு (AI) எனும் தொழில்நுட்பம்:
அடுத்த தலைமுறையை ஆளவிருக்கும் AI எனும் இந்தத் தொழில்நுட்பம் சாதகமா? பாதகமா? என்பதை எல்லாம் ஆராய நேரம் இல்லாமல் அதை நடைமுறைப்படுத்தவே ஆரம்பித்து விட்டோம். அத்தகைய கிமி தொழில்நுட்பம் ஒவ்வொரு மாணவனுக்கும் தனிப்பட்ட வேகம் மற்றும் திறன்களுக்கு ஏற்ப கற்றல் அனுபவங்களை வழங்கப் பெரிதும் துணை புரியும். AI -ஆல் இயங்கும் ஆசிரியர்கள், கற்றல் தளங்கள் மற்றும் தானியங்கு கருத்தமைப்புகள் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். நேரடியாக ஆசிரியரிடம் கற்கும் அனுபவத்தை எந்தத் தொழில் நுட்பத்தாலும் ஈடு செய்ய முடியாது என்றாலும், கால மாற்றத்திற்கு ஏற்ப இயங்குவது கட்டாயமாகிறது
3. ஆழ்ந்த கற்றல்:
‘மெய் நிகர் உண்மை’ எனப்படும் VR-Virtual Reality மற்றும் ‘மிகைப்படுத்தப்பட்ட மெய்ம்மை’ எனப்படும் AR-Augmented Reality ஆகியவற்றால் உருவகப்படுத்தப்பட்ட கற்றல் புதிய அனுபவங்களோடு கல்வி கற்க மாணவர்களுக்கு உதவும் தொழில்நுட்பங்களாகும். குறிப்பாக அறிவியல் ஆய்வுகள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மற்றும் தொழிற்பயிற்சி போன்ற பாடங்களில் இந்த அதிவேக அனுபவம் என்பது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
4. திறன் அடிப்படையிலான கற்றல் மற்றும் சான்றிதழ்கள்:
பள்ளி, கல்லூரி என வரிசையாகப் படித்து, முறையாகப் பட்டம் பெற்று நேர்முகத் தேர்வுகளில் தேர்வாகி, பணியில் சேர்வது ஒரு புறம் இருக்க, படிப்பில் ஆர்வமில்லாத மாணவர்களும் குறுகிய காலத்தில் அனுபவரீதியாகக் கற்றுக் கொள்ளும் வகையிலான படிப்புகளும் பெருகி வருகின்றன. தன் தனித்திறனுக்கு ஏற்ற படிப்பை மாணவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வகையில் வாய்ப்புகள் நம்மைச் சுற்றிலும் கொட்டிக் கிடக்கின்றன. இந்த வகையிலான படிப்புகளிலும் சேர்ந்து படித்து முறையாகச் சான்றிதழ் பெற்று தாம் விரும்பும் துறையில் சாதனை படைக்கலாம்..
5. கற்றலில் விளையாட்டு:
கற்றலை மேலும் ஈடுபாட்டுடனும், ஆர்வத்துடனும் செய்ய விளையாட்டு அடிப்படையிலான அனுபவங்கள் கற்றல் கூறுகளில் இணைக்கப்படலாம். காலம் காலமாக விளையாட்டு என்பது மாணவப் பருவத்தில் இருந்து வந்தாலும் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த வகை விளையாட்டுகள் மாணவர்களை மேலும் தரப்படுத்துவதுடன், அவர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தி தொடர் வெற்றிக்கு
வழி வகுக்கும்.
6. மனநலத்திலும், நல வாழ்விலும் கவனம் செலுத்துதல்:
இப்போதெல்லாம் கிண்டர்கார்டனில் படிக்கும் மாணவர்கள் கூட stress, tension போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதும், எதற்கெடுத்தாலும் கோபப்படுவதும், சிறிய தோல்விகளைக் கூட தாங்கிக் கொள்ளும் பக்குவம் இல்லாதிருப்பதும் பரவலாக இருக்கிறது. எனவே, பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் மனநலம் மற்றும் நலவாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கட்டாயத்தில் உள்ளன. இதற்காக மன அழுத்த மேலாண்மை, நினைவாற்றல் நடைமுறைகள் மற்றும் சமூக உணர்ச்சி போன்றவற்றைக் கற்றலில் இணைந்து வழங்கும் உத்திகள் அதிக அளவில் நடைமுறைப் படுத்தப்படலாம்.
7. கற்றல் தளங்களும், கல்வியாளர்களும்:
கோவிட் தொற்று ஆரம்பித்ததில் இருந்து Zoom, Meet போன்ற ஆன்லைன் தளங்களின் பயன்பாடு அதிக அளவில் இருந்து வருகிறது. இது பல்வேறு தொழில்நுட்பங்களுடன் உலகெங்கிலும் உள்ள மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே அறிவுப் பரிமாற்றத்தைச் செயல்படுத்த உதவியாய் உள்ளது. இதனால் பல்வேறு கலாச்சாரங்களுக்கு இடையேயான புரிதலையும், உலகளாவிய குடியுரிமை பற்றிய அறிவையும் மாணவர்கள் பெறுகிறார்கள்.
8. கல்வியின்
வாழ்வியல் பயன்பாடு:
பல்வேறு பேரிடர்களை மாணவர்கள் தாம் வசிக்கும் பகுதிகளிலேயே பார்ப்பதால் அவை எதனால் ஏற்படுகின்றன என்ற தெளிவையும் பெறுகின்றனர். அதிலும் குறிப்பாக சுற்றுச்சூழல் கல்வி, பருவநிலை மாற்றங்கள், கழிவுகள் மேலாண்மை, ஆரோக்கிய உணவை உட்கொள்ளுதல் மற்றும் புதுப்பிக்கக்கூடிய வளங்களைப் பாதுகாத்தல் போன்றவற்றுக்கான தீர்வையும் அவர்களே மேற்கொள்ளும் வகையில் கற்றல் முறைகளை வாழ்க்கையோடு தொடர்புபடுத்திக் கொள்ளும் பக்குவத்தோடு செயல்படுவர்.
9. வாழ்நாள் முழுமைக்குமான கற்றல்:
படித்து முடித்து வேலைக்குச் சென்றுவிட்டால் அதன் பிறகு படிக்கத் தேவையில்லை என்ற நிலை மாறி ஒவ்வொரு துறையிலும் அடுத்தடுத்த நிலைக்கு தங்களை உயர்த்திக் கொள்ளவும், திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும், உயர் பதவிகளைப் பெறவும் வாழ்நாள் முழுமைக்குமான கற்றல் இனி வரும் காலங்களில் இன்றியமையாததாக இருக்கும்.
கற்றலிலும், கற்பித்தலும் எத்தனை புதுமைகள், தொழில் நுட்பங்கள் புகுத்தப்பட்டாலும், உயர் பதவிகள் பெற்றாலும், எவ்வளவு வசதியாக வாழ்ந்தாலும் அன்போடு பழகுதல், அடக்கத்தோடு வாழுதல், மற்றவருக்கு உதவி செய்தல், பெரியோரை மதித்தல், அறத்தைக் காத்தல், அறிவார்ந்து செயல்படுதல் போன்றவை மாணவப் பருவத்தில் இக்காலத்திலும், எக்காலத்திலும் போதிக்கப்பட வேண்டிய முக்கியப் பண்புகளாகும். நல்லதொரு சமுதாயத்தைக் கட்டமைப்போம்..