ரசிக்கலாம்; சிக்கலாமா?
BTS என்பது கொரியா இளைஞர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட இசைக்குழு, யுடியூப் என்ற காணொலி இணையதளம் மூலம் மிகவும் பிரபலமான இவர்களின் பார்வையாளர்கள் குறிப்பாக தென் இந்தியாவில் 10 முதல் 17 வயதுள்ளவர்கள் என்பதை நம்ப முடிகிறதா?
கடல் கடந்த ஒரு சிறிய தீபகற்ப நாடு. மொழி வேறு உருவம் வேறு என்று நாம் நினைக்கலாம். ஆனால், மிகத்தீவிரமாக இந்த இசைக்குழுக்களின் காணொலிகள் சிறுவர் சிறுமிகளிடையே பரப்பப்படுகிறது, லாபம் பார்க்கும் கூட்டம் இதைப் பயன்படுத்தி இந்த இசைக்குழுவினரின் படங்கள் அடங்கிய சிறு சிறு பரிசுப்பொருட்கள், பைல்கள், ஸ்டிக்கர்கள், நோட்டுப் புத்தகங்கள் போன்றவற்றை விற்பனைக்கு வைத்து மேலும் அடிமையாக்கி விடுகின்றனர். இதுவே கொரிய இசைக்குழு BTS மீது உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்களுக்கு ஈர்ப்பு ஏற்பட காரணம் ஆகும். BTS (Bangtan Sonyeondan) என்ற பெயர் கொண்ட இசைக்குழு ஏழு இளைஞர்களைக் கொண்டது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
பதின் பருவத்தினரின் உள்ளங்களை ஈர்க்கும் வகையில் அவர்களின் பாடல்கள் உள்ளன என்று சொல்லப்படுகிறது. இந்தப் பாடல்கள் கடந்த சில ஆண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகின்றன. ஙிஜிஷி பாடல்களின் ரசிகையான ஒருவரிடம் எப்படி வேற்று மொழிப் பாடல்களை விரும்பிக் கேட்டு, புரிந்து கொண்டு, அதன் மீது ஆர்வம் ஏற்படுகிறது என்று கேட்ட போது, “தமிழ் ரசிகர்கள் எப்படி தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற வேறு மொழிப் பாடல்களைக் கேட்டு ரசிக்கின்றனரோ, அதேபோன்றுதான் கொரியப் பாடல்கள். எனக்கு கொரிய மொழி அந்நியமாகத் தெரியவில்லை” என்கிறார்.
BTS ரசிகர்கள் அந்த இசைக்குழுவினரைப் போலவே ஆடைகள் அணிந்து கொள்வது, காலணிகள் போட்டுக் கொள்வது புதிய கலாச்சாரமாக இளைஞர்கள் மத்தியில் இருந்து வருகிறது. சில ஆடை அங்காடிகளில் கொரிய கலாச்சார ஆடைகள், பொருட்களை விற்பதற்குத் தனிப் பிரிவுகளே உள்ளன.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இப்படியான இசைக் குழுக்கள், பாடகர்கள் பிரபலமாவதும் அவர்களது உடைகள், பாவனைகள் அந்தக் காலத்தின் பேஷன் ஆவதும் இயல்பு. எல்விஸ் பிரஸ்லி, மைக்கேல் ஜாக்சன், பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் என பல்வேறு காலங்களிலும் பலர் இருந்திருக்கிறார்கள்.
இப்போது இந்த BTS இசைக்குழுவின் ரசிகர்கள் உலகம் முழுவதும் தங்களை BTS Army என்று அழைத்துக் கொள்கின்றனர். இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா எனப் பல மாநிலங்களில், கிராமம், நகரம் என்ற வித்தியாசம் இல்லாமல், பள்ளி கல்லூரி மாணவர்கள் இந்தப் பாடல்களை விரும்புகின்றனர். ஆனால் அது எல்லை மீறி. அந்தக் குழுவினரை நேரில் சந்திக்க வேண்டும் என்பது பலரது ஆசைக் கனவாக மாறியுள்ளது. அப்படி ஆசை கொண்ட தமிழ்நாட்டின் கிராமப்புறப் பகுதி ஒன்றிலிருந்து 13 வயதுடைய மூன்று சிறுமிகள், தென் கொரியா செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து, வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
செல்போன் மூலம், BTS இசைக்குழுவைப் பற்றித் தெரிந்து கொண்ட அந்த மூன்று சிறுமிகளும், பாடல்களைத் தொடர்ந்து கேட்டு, அதனால் ஈர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக தீவிரமாக BTS பாடல்களைக் கேட்டு வந்த சிறுமிகள் தென் கொரியாவுக்குச் செல்ல வேண்டும் என்று ஆசை கொண்டனர். அதற்காக கடந்த மூன்று மாதங்களாகத் திட்டமிட்டு வந்துள்ளனர். ரயில் மூலம் சென்னை வந்து, சென்னையிலிருந்து எப்படியாவது விசாகப்பட்டினம் சென்று அங்கிருந்து கப்பல் மூலம் கொரியா செல்வது அவர்களின் திட்டமாக இருந்தது.
சிறுமிகளில் ஒருவரின் தாத்தா வைத்துள்ள தேநீர்க்கடையிலிருந்து சிறிது தொகையை எடுத்து வைத்துள்ளனர். பள்ளி சென்ற சிறுமிகள், சீருடைகளை மாற்றி விட்டு அங்கிருந்து ஜனவரி 4ஆம் தேதி புறப்பட்டுள்ளனர். அருகில் உள்ள ரயில் நிலையத்துக்குச் சென்று, அங்கிருந்து ரயில் மூலம் சென்னை வந்தடைந்தனர். “சென்னையில் தங்குவதற்கு இடம் தேடி அலைந்து, இரண்டு உணவு விடுதிகளில் இடம் கிடைக்காமல், மூன்றாவதாக ஒரு இடத்தில் ரூ. 1,500க்கு ஒரு அறையில் தங்கியுள்ளனர். பின்பு, கொரியா செல்வது சாத்தியமில்லை என்று உணர்ந்த அவர்கள், வீடு திரும்பலாம் என முடிவு செய்து மீண்டும் சென்னையிலிருந்து ரயில் ஏறினர்.
காட்பாடி ரயில் நிலையத்தில், உணவு சாப்பிட இறங்கிய போது, அவர்களின் ரயில் புறப்பட்டுச் சென்று விட்டது. அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ரயில் நிலையத்திலேயே நின்றிருந்த சிறுமிகளை ரயில்வே பாதுகாப்புப் படையினர் பார்த்து, விசாரித்துள்ளனர். பின்பு மாவட்ட குழந்தைகள் நலக் குழுவுக்குத் தகவல் தெரிவித்தனர். தாங்கள் கொண்டு வந்த ரூ. 14,000 பணத்தில் தங்கள் செலவுகள் போக, மீதம் 8,059 ரூபாய் வைத்திருந்தனர்’ வீட்டிலிருந்து புறப்பட்ட சிறுமிகள் தங்கள் கைகளில் கைபேசிகள் எதுவும் கொண்டு செல்லவில்லை. சிறுமிகள் பள்ளியில் தங்களது நண்பர் ஒருவரிடம் தங்கள் திட்டத்தைப் பற்றிக் கூறியுள்ளனர். அதன் மூலம் சிறுமிகள் குறித்த தகவல்கள் கிடைத்தன.
“கடந்த சில மாதங்களாகவே அந்த இசைக்குழுவை சிறுமிகள் பின்தொடர்ந்து வருகின்றனர். ஆங்கிலவழிப் பள்ளியில் படிக்கும் மாணவிகள், கூகுள் செய்து, கொரியப் பாடல்களின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டனர். அந்த இசைக்குழுவில் உள்ள அனைவரது பெயர்களும் அவர்களுக்கு தெரியும். இசைக் குழுவினர் அணிந்திருக்கும் ஆடை, காலணிகள், உணவு என அனைத்தையும் ஆர்வமாகத் தேடித் தெரிந்து கொண்டிருந்தனர். இசைக்குழுவினர் பயன்படுத்துவது போன்ற ஆடைகள், காலணிகளை, ஆன்லைனில் நண்பர்கள் வீட்டு முகவரியில் பெற்று, அதனையும் தாங்கள் புறப்பட்டுச் செல்லும் போது பைகளில் வைத்திருந்தனர்” என்றார்.
வேலூரில் குழந்தைகள் நலக்குழுவினர், சிறுமிகளுக்கு ஆலோசனை அறிவுரைகள் வழங்கினர்.
பெற்றோரால் குழந்தைகள், சரியாகக் கவனிக்கப்படாததாலும், அதீத செல்லம் காரணமாக அவர்களின் நடவடிக்கைகளைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பதாலும் இது போன்ற இணையதளங்களுக்கு அடிமையாகிவிடுகின்றனர்.
இந்தக் குழந்தைகள் ஒரு குழுவாக குழுவாகச் செயல்படுகின்றனரா? என்பதையும் முதலில் விசாகப்பட்டினம் சென்று அங்கிருந்து கப்பல் மூலம் கொரியா செல்லும் திட்டம் என்பது குழந்தைகளுக்கு எப்படி தெரியவந்தது என்பதையும் காவல் துறையினர் கண்டறியவேண்டும். ஏனென்றால், குழந்தைக் கடத்தல் கும்பல்கள் இது போன்ற இணையதளத்திற்கு அடிமையான குழந்தைகளைக் குறிவைத்துச் செயல்படுகின்றனர். உங்கள் நண்பர்களிலும் யாரேனும் இப்படி ரசிகப்பித்து பிடித்துப் போயிருந்தால், அவர்களைத் தெளிவுபடுத்துங்கள்! இவ்வாறு செல்லும் குழந்தைகளைக் கடத்தி, அவர்களை சட்டவிரோதச் செயலுக்குப் பயன்படுத்துவது இந்தியாவின் 12 குற்றங்களில் முக்கியமான குற்றமாக உள்ளது.
இசையை ரசிப்பது என்பது வேறு; இசைக்குழுவை ரசிக்கிறோம் என்ற பெயரில் அவர்கள் மீது பித்தாக அலைவது வேறு. அது திரைப்பட நடிகர்களாகவோ, சாகச வீரர்களாவோ, இசைக்குழுவினராகவோ, விளையாட்டு வீரராகவோ இருக்கலாம். அவரவர் துறையில் அவரவர் செய்யும் சாதனையை முன் மாதிரியாகக் கொண்டு நாமும் சாதனை செய்ய முயல்வது பாராட்டத்தக்கது. அதைவிடுத்து அவர்களை நேரில் பார்ப்பதால் யாருக்கு என்ன பயன் விளையப்போகிறது? அதைவிடுத்து அவர்களை ஓரிரு நொடிகள் எங்கோ தொலைவிலிலிருந்து பார்ப்பதால் யாருக்கு என்ன பயன் இதை பிஞ்சுகள் சிந்திக்க வேண்டும்.
இணையதளத்தின் மூலம் அடிமையான பிள்ளைகள் குறித்த பல செய்திகள் வந்த போதும், இவ்வாறு காணொலிக்கு அடிமையாகி கப்பலில் பயணம் செய்யப்போகிறோம் என்று வீட்டை விட்டுச் செல்வது மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். பிஞ்சுகளே, பெற்றோரே எச்சரிக்கை! எச்சரிக்கை!