இப்ப நான் என்ன சொல்றது? ஒரு குட்டிப் பேயும் நான்கு நண்பர்களும்
அப்போது எனக்கு வயது 14 இருக்கலாம்.
நான் விளையாடிக் கொண்டிருப் பதைப் பார்த்தாலே எரிந்துவிழும் எனது அம்மா, அன்று என்னை, தன் வயிற்றோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டார். பிறகு என்ன நினைத்தாரோ, என் முகவாய்க்கட்டை நாடியைப் பிடித்து முகத்தை நிமிர்த்தி, “அம்மா வருகிற வரைக்கும் எங்கேயும் போகக்கூடாது, சரியா?” என்று தழுதழுத்த குரலில் சொன்னார். நான் பேசுவதற்குள், நண்பர்களைப் பார்த்து, “நீங்களும் வீட்டுக்குப் போங்க” என்று சொல்லிவிட்டு, தாராபுரம் சாலையை நோக்கி ஏறக்குறைய ஓடினார்.
அம்மாவின் நடவடிக்கையில் இருந்த பெரும் மர்மம், எங்களையும் அவர் சென்ற இடத்திற்கு தன்னிச்சையாகச் செல்ல வைத்துவிட்டது.
அங்கே… அடர்த்தியாக நின்ற ஊர் மக்களிடையே கிடைத்த சந்து, பொந்துகளில் தேடித்தேடிப் பார்த்ததில், சாலையில் வழிந்தோடிய ரத்தம் மட்டும்தான் எங்கள் கண்களுக்குத் தெரிந்தது. பெண்கள் ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தனர். ஆண்கள் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். “இப்படி சின்ன வயதிலேயே இறந்துபோனா, மேல போகமாட்டாங்களாம்; அவங்களுக்கு விதிக்கப்பட்ட வயசு வரைக்கும் இங்கதான் பேயா சுத்திக்கிட்டு இருப்பாங்களாம்” என்று அவர்கள் பேசிக் கொண்டதுதான் எங்கள் கவனத்தில் தங்கியது.
அதன்பிறகு, நான் விளையாடவே போகவில்லை. ஒரு குட்டிப் பேய் 24 மணி நேரமும் வீட்டு வாசலிலேயே காத்திருப்பதாகவும், வெளியே வந்ததும் என்னை ’லபக்’ கென்று பிடித்துக் கொன்றுவிடும் என்றும், எண்ணிக்கொண்டு வீட்டுக்குள்ளேயே கிடந்தேன்.
நான்கு நாட்களுக்குப் பிறகு…
அம்மா, “ஏஞ்சாமி, இப்படி வீட்டுக்குள்ளேயே கிடக்கிறே, உன் கூட்டாளிகள் காத்திருக்காங்க, போய் அவங்களோடு கொஞ்சம் விளையாடிட்டுதான் வாயேன்” என்றார் பரிவுடன்.
அம்மாவா இது? என்று வியப்புடன் மெ…ல்ல… வெளியே சென்றேன்!
வாசலில் அந்தக் குட்டிப் பேய் இல்லை! எனக்கும் ஒன்றும் ஆகவில்லை! நண்பர்களுடன் வழக்கம் போல் நானும் சேர்ந்துகொண்டேன்.
பேருந்தில் அடிபட்டு இறந்தது 8 வயது பெண்! பெயர் விமலா! மோதியது காரத்தொழுவு சென்று வரும் 7 ஆம் எண் பேருந்து! ஓட்டுநர் நாச்சிமுத்து! இந்தக் குட்டிப்பெண் மீதுதான் தவறாம்!
இவையெல்லாம் நண்பர்களின் புலனாய்வில் கிடைத்த தகவல்கள்.
எனக்கு என்னவோ போலிருந்தது. அந்தக் குட்டிப்பெண் விமலா, நன்றாக கொழுக் மொழுக்கென்று இருப்பாள். அவளுக்கா இப்படி?
நேரம் கடந்துகொண்டிருந்தது…
திடீரென்று…
“ஏய்… யாருப்பா அது? நேரங்காலத்துல வீட்டுக்குப் போற எண்ணமே இல்லையா?” என்றொரு முரட்டுக்குரல் எங்களை அசைத்தது.
வழக்கம் போலவே நன்றாக இருட்டியிருந்தது.
“சரிடா, நான் வர்றேன்” என்று சொல்லிவிட்டு வீட்டை நோக்கி அடியெடுத்து வைத்தேன்.
“டே…ய்… அதெ…ன்ன…டா.. உங்..க.. வீ..வீ…ட்டு கே…ட்ல”
நடுங்கும் குரல் ஒன்று என் பிடரியைப் பிடித்து நிறுத்தியது…
அது செல்வராஜின் குரல்தான்!
பார்க்கக்கூடாது என்று எவ்வளவோ முயன்றும் முடியாமல், எங்கள் வீட்டு வாசல் கதவைப் பார்த்தேன்.
கதவு என்றால், தடுக்குத் தட்டிகள் சுற்றுச் சுவராக இருக்கும். நுழைவு வாசலில் இரண்டு பக்கமும் இரண்டு கனமான சவுக்கு மரம் நடப்பட்டு, மர அறுவை மில்லில் கிடைக்கும் மரப்பலகைகள் மூலம், அப்பா தயார் செய்த ’கதவு’ அது. அதற்கு தாழ்ப்பாள் இருக்கும். திறந்து மூடும்படியாகவும் அமைத்திருப்பார்.
அந்த வாசல் கதவின் இடப்பக்கத்தில் இருக்கும் சவுக்குக் கட்டையின் மீது ஏதோ ஒன்று குட்டியாக அமர்ந்திருந்தது. அதன் உடை காற்றில் ஆடியது. இரண்டு கைகளையும் நீட்டியபடி எங்களையே… பார்ப்பது போலவே இருந்தது. எனக்குச் சட்டென்று கால்சட்டை நனைந்துவிட்டது. மற்ற மூவரும் ஒருவரையொருவர் வழக்கம் போல என்ன செய்வதென்று தெரியாமல் என்னையே பார்த்தவாறிருந்தனர்.
“எ..எ…ன்ன…டா… அ..அ..து?”
எனது குரல்தான்!
“ஒ..ஒ..ரு.. வேளை… வி…வி…மலாவோட… பே…பேயா இருக்குமாடா…?”
செல்வராஜின் குரல்!
அவ்வளவுதான்…
மீண்டும் சரசரவென்று கருப்புசாமி கோயில் மேடைக்கே சென்றுவிட்டோம். சாமிக்கும், பேய்க்கும் ஆகாது என்று யாரோ சொல்லக் கேள்வி. நால்வரின் முகங்களும் வெளிறிப் போயிருந்தன.
“யாரது?… இந்த நேரத்தில் அங்கே…?”
அப்பாடா!… எனக்கு மிகவும் பழக்கமான குரல் அது!
“டேய்… எங்கப்பாடா!”
மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், “நாங்கதாம்ப்பா” என்று பதில் சொல்லிவிட்டு, விறுவிறுவென்று சென்று அப்பாவின் பின்னால் சென்று அவரை இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டேன்.
“என்னாச்சுப்பா” என்று கேட்டவாறே, தனது வயிற்றைச் சுற்றியிருந்த எனது இரண்டு கைகளையும் ஆதரவுடன் பற்றிக்கொண்டார். நான் அப்படியே வீட்டுவாசல் வரைக்கும் அப்பாவின் கால்களை இடித்தாவாறே சென்று, அம்மா வற்புறுத்திக் கொடுத்த உணவைச் சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிட்டேன்.
”பையன் எதையோ பார்த்துப் பயந்திருக்கான். காலையில் எழுந்ததும் சுத்திப் போடு” என்று சன்னமான குரலில் அப்பா சொல்வதைக் கேட்டபடியே உறங்கிவிட்டேன்.
காலையில் அம்மாதான் எழுப்பிவிட்டார். எல்லோரும் இயல்பாக இருந்தனர். அந்தப் பேய் இவர்களை ஒன்றும் செய்யவில்லையா? சிறுவர்களை மட்டும்தான் கொடூரமாகக் கொல்லுமா? என்ற நியாயமான கேள்விகளுடன் தயங்கியபடியே மெ…ல்ல… வெளியில் வந்து பார்த்தேன்!
ஒன்றுமேயில்லை!
ஆனால்… அது?
அது அப்படியேதான் இருந்தது! எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அது பேயல்ல, 100 கிலோ அரிசி மூட்டையின் சாக்குப் பை. அதை அம்மா நனைத்து காயப்போட்டிருக்கிறார். அதுதான் இருட்டில் காற்றில் அப்படி ஆடியிருக்கிறது. மலைபோல் எண்ணியது பனி போல் விலகியது!
எனக்கு வெட்கமாகப் போய்விட்டது. இதைக் கண்டா பயந்தோம்?
அதன்பிறகுதான் நிதானமாக, கடந்த இரண்டு ஆண்டுகள் எனக்கு நேர்ந்ததையெல்லாம் வரிசைப்படுத்திப் பார்த்தேன். எதெதற்கெல்லாம் அஞ்சினேன்? அதிலிருந்து எப்படி விடுபட்டேன்? என்று கோவையாக படம் போல் மனதினுள் ஓடியது. அதற்குப்பிறகு அது தொடர்பாக நான் அஞ்சியதும் இல்லை என்பதும் சேர்ந்தே புரிந்தது! அப்படித்தான் இந்தப் பேய் பயமும்!
ஏதோவொரு பனிமூட்டம் விலகியது போல் இருந்தது. ஆனால், அது என்னவென்றுதான் புரியவில்லை. ஒரு வேளை ‘பயம்’ என்பது முற்றிலும் விலகிவிட்டதோ என்னவோ? அதன்பிறகு என்னுடைய தன்னம்பிக்கையில் ஒரு முரட்டுத்தனம் சேர்ந்துகொண்டது. இந்தச் சம்பவம் என் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது என்பதை நான் அப்போது உணரவில்லை. அதனாலேயே இப்போதும் அந்தச் சம்பவத்தை என்னால் மறக்கவே முடியவில்லை!<