மொழி காக்கும் கடமை
மொழிகள் உலகில் பலவாகும்;
மூத்த மொழியோ தமிழாகும்;
அழிந்த மொழிகள் பலவாகும்;
அழியா மொழியோ தமிழாகும்!
எழிலாய் ஒளிரும் தமிழினிலே
இலக்கி யங்கள் ஏராளம்;
விழிபோல் அதனைக் காத்திதல்
வெற்றிக் கான வழியாகும்!
பெற்ற தாயைப் பேணுதல்போல்
பிறந்த மண்ணைப் போற்றுதல் போல்
உற்ற அன்னைத் தமிழ்மொழியை
ஓதி உணர்ந்து காத்திடுக!
வேற்று மொழிகள் கற்றிடலாம்;
விரிந்த அறிவும் பெற்றிடலாம்;
ஊற்றாய் உன்றன் உள்ளத்துள்
ஒளிர வேண்டும் தாய்த்தமிழே!
செம்மை யான பன்மொழிகள்
சிறந்து விளங்கும் இவ்வுலகில்
நம்மை உயர்த்தும் நன்மொழியே
நமது தமிழ்தான் என்றுணர்க!
அன்னை மொழியாய்ப் பன்மொழிகள்
அனைவ ருக்கும் இங்குண்டு;
உன்னைப் பெற்ற தமிழ்மொழியை
உயர்வாய் மதித்தல் உன்கடமை!!<
– கே.பி. பத்மநாபன், சிங்காநல்லூர்