ஊருக்குப் போய் வந்த கரடி – 7: ”ஜாதியா அப்படின்னா…?
“கொஞ்ச துரம் ஓடினேன்… அங்கே ஒரு இடத்திலே காடு மாதிரியே நிறைய மரங்கள் இருந்துச்சு.
இந்த இடம் நாம் பதுங்கி இருக்க வசதியா இருக்கும்னு நினைச்சு அதுக்குள்ள போயி ஒரு மரத்துமேலே ஏறி, படுத்துத் தூங்கிட்டேன்.
விடிஞ்சது. முழிச்சுப் பாத்தா அந்த இடத்திலே மண்ணை நீள நீளமா குவிச்சு வச்சிருந்தாங்க.
சில மனிதர்கள் ஒரு மனிதனை ஓலையிலே படுக்க வைச்சு அங்கே தூக்கிக்கிட்டு வந்தாங்க.’’
“எதுக்கு ஒரு ஆளைப் படுக்க வைச்சு தூக்கிக்கிட்டு வந்தாங்க?’’ முயல் ஆர்வமாய் கேட்டது.
“அவரு செத்துப் போயிட்டாராம்.’’
“அய்யோ பாவம்…’’ என்றது முயல்…
“நீதான் வருத்தப்படுறே… ஆனா மனிதர்கள் மேளமெல்லாம் அடிச்சுக்கிட்டு… ஆடிக்கிட்டு… ஒரே சத்தம் போட்டுக்கிட்டு… பூவையெல்லாம் வாரிவாரி இறைச்சுக்கிட்டு… வெடி வெடிச்சுக்கிட்டு… ஒரே அமர்க்களமா அந்த இடத்துக்கு வந்தாங்க.
பெரிய பள்ளம் வெட்டி அதுக்குள்ள செத்துப் போனவரை வைச்சு மேலே மண்ணைத் தள்ளி மூடிட்டுப் போயிட்டாங்க.
அங்கே நீள நீளமா மண்ணைக் குவிச்சு வச்ச இடமெல்லாம் இப்படி மனிதர்களைப் புதைச்சு வச்ச இடம்னு அப்பதான் புரிஞ்சுது.
அதுக்குள்ள இன்னொரு ஆளை அதே மாதிரி தூக்கிக்கிட்டு கொஞ்சம் பேரு வந்தாங்க.
அவரை அங்கே இருந்த ஒரு மேடை மேலே வச்சு நிறைய மரக்கட்டைகளை அவரு மேலே அடுக்கி அதுல நெருப்பு வச்சு ஒரு ஆளு கொளுத்துனாரு.
அதுக்குள்ள அங்கே இருந்தவங்களுக்குள்ள சண்டை வந்துடுச்சு.’’
“எதுக்குச் சண்டை வந்தது?’’ அணில் கேட்டது.
“குழந்தை இல்லாத இந்த பெரியவரோட, தம்பி பையன் எப்படி கொள்ளி போடலாம்? அண்ணன் பையன்தானே கொள்ளி போடணும்னு சண்டை.
உடனே ஒரு ஆளு நம்ம ஜாதியிலேயே ரொம்பப் பெரிய மனிதர் இவரு…
ஏம்ப்பா சண்டை போடுறீங்க விடுங்கப்பா…’’ என்றார்.
“டேய்! ஜாதிப் பெருமை பேசுற இடமாடா இது… இது சுடுகாடுடா… இங்கே எதுக்கு அதெல்லாம்…’’ இன்னொருத்தரு… சத்தம் போட்டாரு.
“அப்பதான் தெரிஞ்சுது அந்த இடத்துக்குப் பேரு… சுடுகாடு…ன்னு’’
“அடடே! நாம வாழுற அந்த இடத்துக்குப் பேரு காடு. மனிதர்கள் செத்தா புதைக்கிற இடத்துக்குப் பேரு சுடுகாடு. நல்லாருக்கே…’’ என்றது குட்டி யானை.
“அதெல்லாம் சரி… ஜாதிப் பெருமை பேசுற இடமா இதுன்னு ஒரு பெரியவரு… சொன்னாருன்னு சொன்னியே… ஜாதின்னா என்னா?’’ என்று புரியாமல் கேட்டது முள்ளம்பன்றி.
“எனக்கு அவரு பேசும்போது புரியாமத்தான் இருந்துது. ஆனா கொஞ்ச நேரத்திலேயே எனக்குத் தெளிவாயிடுச்சு.’’
“எப்படி?’’ என்றது ஆந்தை.
“அங்கே இருந்த மனிதர்கள் பேசுனதுலேயே புரிஞ்சு நான் தெளிவாயிட்டேன்.’’
“அப்படி என்ன பேசுனாங்க?’’ என்றது முள்ளம்பன்றி…
“செத்தவரைத் தூக்கிக்கிட்டு அந்தச் சுடுகாட்டுக்குள்ள வந்ததுமே ஒருத்தரு, “ஏப்பா! இந்தச் சுடுகாட்டுலேதானே போன வருஷம் நம்ம ஜாதிக்காரன் பிணத்தை கீழ் ஜாதிக்காரப் பயலுகளப் புதைக்கிற இடத்திலே புதைச்சிட்டான்னு இந்த சுடுகாட்டு வெட்டியானை நம்ம பசங்க அடிஅடின்னு அடிச்சானுங்க…’’
“நிறுத்து… நிறுத்து… கீழ் ஜாதின்னு ஒண்ணு இருந்தா அப்ப மேல் ஜாதின்னு ஒண்ணு இருக்குந்தானே…’’ என்றது நரி.
“ஒண்ணு ரெண்டு இல்லே… அது எக்கச்சக்கமா இருக்கு… அவன் இவனுக்கு கீழே… இன்னொருத்தன் அவனுக்கும் கீழேன்னு வச்சிக்கிட்டு… ஒருத்தருக்கு ஒருத்தரு தாழ்வா நடத்துறாங்க…
ஒவ்வொருத்தரையும் இழிவா நடத்துற கெட்ட பழக்கமெல்லாம் மனிதர்கள்கிட்டே இருக்குதுன்னு அப்பதான் தெரிஞ்சுது.
செத்துப் போயிட்டா எல்லாரையும் பிணம்னுதான் சொல்றாங்க. ஆனா… செத்த பிறகும் ஜாதிப் பெருமை பேசுறதைப் பார்க்கும்போது மிருகமா இருக்கிற நாம எவ்வளவோ மேலுன்னு தோணுச்சு…’’
“அது என்னமோ உண்மைதான்.. நரி, முயல், குரங்கு, யானை, கரடின்னு வேற வேற வடிவத்துலே… வேற வேற பேருலே இருந்தாலும் மொத்தத்திலே நாம எல்லாம் விலங்குகள்.
ஆனா, ஒரே மாதிரி இருக்கிற மனிதர்கள் வேற வேற ஜாதியா இருக்குறாங்க. வேற வேற சடங்கு, சம்பிரதாயமெல்லாம் பண்ணி பிணத்தை அங்கே எரிச்சுட்டோ… இல்லே புதைச்சிட்டோ போறாங்க.. மனிதர்கள்னு பெருமை பேசிக்கிற அவங்களுக்கு உள்ளே நிறைய பாகுபாடு இருக்கு.. நாம எவ்வளவோ பரவால்லேன்னு சொல்லு’’ என்றது குரங்கு.
“ஆமா! ஆமா! அந்தச் சுடுகாட்டுலே பிணம் எரிக்கிறதுக்கு, புதைக்கிறதுக்கெல்லாம் ஆளு ஒருத்தரு இருந்தாரு… அவரை அங்கே வந்து எல்லாருமே ரொம்ப கேவலமாவும், மரியாதை இல்லாமலும் பேசுனாங்க.
ஆனா, கோவில்லே நான் பாத்த பூஜை செய்யிற ஆளுகிட்ட ரொம்ப மரியாதையாப் பேசுனாங்க. அவருக்கிட்டே ரொம்ப நல்லவங்க மாதிரி நடந்துக்கிட்டாங்க. ஆனா அவரும், இவரும், ஒரே மாதிரி மனிதர்கள் தானே? ஏன் இப்படி நடந்துக்கிறாங்கன்னு எனக்குப் புரியலே…
“புரிஞ்சு மட்டும் நாம என்ன செய்ய முடியும்? சரி.. சுடுகாட்டுலே இருந்த நீ அடுத்து எங்கே போனே…? என்ன ஆனே?’’ என்று ஆவலாய்க் கேட்டது யானை.
“அட… அது பெரிய கதை… சொல்றேன்… சொல்றேன்…
பிணத்தைத் தூக்கிக்கிட்டு வந்தவங்களிலே ஒருத்தரு நிழலுக்காக நான் ஏறி இருந்த மரத்துக்கு அடியிலே வந்து நின்னாரு. தற்செயலா மரத்து மேலே இருந்த என்னைப் பாத்துட்டு… தடா புடான்னு தள்ளிப்போய் நின்னு மத்தவங்களைக் கூப்பிட்டு பேயி… பேயின்னு என்னைக் காட்ட ஆரம்பிச்சிட்டாரு…”
(பயணம் தொடரும்…)