நடந்த கதை – 6 : தலைமை இன்றித் தவித்த போராட்டம்
விஷ்ணுபுரம் சரவணன்
“பத்தாம் தேதி அரசாங்கம் என்ன மாற்றம் செஞ்சுது அம்மா?”
ஆர்வம் தாங்காமல் செழியன் கேட்டான்.
“சொல்றேன் செழியா… வழக்கமாக என்ன செஞ்சுக்கிட்டு இருந்தாங்க?”
“தடை செய்யப்பட்ட தெருவுக்குள்ள போராட்டக்காரங்க மூணு மூணு பேரா போவாங்க. அவங்கள போலீஸ் அரெஸ்ட் பண்ணிடும்.. அதானே அம்மா?”
“சரிதான் செழியா… அப்படித்தான் செய்வாங்கன்னு பத்தாம் தேதியன்று திட்டமிட்டபடி சாத்துக்குட்டி நாயர், கிருஷ்ணய்ய அச்சன், நாராயணன் ஆகிய மூணு பேரும் தடுக்கப்பட்ட பகுதிக்குள்ள போறதுக்கான போராட்டத்தை நடத்தினாங்க. ஆனா, வழக்கமா கைது செய்ய காவல் துறை, ’இனிமேல் கைது செய்ய மாட்டோம். அதேநேரம் தடை செய்யப்பட்ட பகுதிக்குள்ள போக விடாமல் தடுக்க மட்டும் செய்வோம்’னு சொன்னது”
“என்ன இது புதுக் கதையா இருக்கும்மா?”
“ஆமா, காவல் துறையோட இந்த அறிவிப்பை எப்படி எதிர்கொள்றதுன்னு போராட்டக்காரங்க சிறிது நேரம் குழம்பிட்டாங்க. ஆனாலும் ‘எங்களைக் கைது செய்ங்க… இல்லன்னா தெருக்குள்ள போக அனுமதி கொடுங்க’னு போராடினவங்க உறுதியோட நின்னாங்க”
“அப்பறம்?”
“காவல் அதிகாரிகளுக்கு உயர் மட்டத்துல இருந்து வர்ற உத்தரவை நிறைவேற்றதுதானே வேலை? அதனால போராட்டக்காரங்க சொன்னது எல்லாம் அவங்க காதுக்குள்ள கூட போகல”
“போராட்டக்காரங்க என்னதான் செஞ்சாங்கம்மா?”
“அதே இடத்திலே சத்தியாகிரகம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க”
“புரியலம்மா?”
“அதாவது பட்டினிப் போராட்டத்தை ஆரம்பிச்சிட்டாங்க. எங்க கோரிக்கை நிறைவேறும் வரை தண்ணீர் கூட குடிக்க மாட்டோம்னு உறுதியான போராட்டத்தை முன்னெடுத்தாங்க”
“அப்பறம் என்னாச்சு?”
“எதையும் முறைப்படி செய்யணும் என்பதுதான் போராட்டக்காரங்களோட முடிவா இருந்துச்சு. அதனால அரசாங்கம் அவங்கள கைது செய்யல்ல, அதனால பட்டினிப் போராட்டத்தை நடத்தப்போறோம்னு காந்தியடிகளுக்குத் தந்தி கொடுத்தாங்க”
“ம்ம்”
“அந்த மாவட்ட நிருவாகத்துக்கும் போராட்ட முறை மாறுவதையும் தங்களோட நிலைபாட்டையும் முறைப்படி தெரிவிக்கிறாரு ஜார்ஜ் ஜோசப். அதில தெற்குக் கோபுர வாசல்லேயும் மேற்கு கோபுர வாசல்லேயும் சத்தியாகிரகம் செய்ய ஆட்கள் அனுப்பப்படுவாங்க என்றும், 16 ஆம் தேதிக்குள்ள கைது செய்யப்படலேன்னா, கோவிலோட எல்லா வாசல்களேயும் சத்தியாகிரகப் போராட்டம் நடக்கும்னு கடுமையான அறிக்கை விடுறாரு”
“அரசாங்கம் ஏன் இப்படி எல்லாம் செய்யுது… எல்லா மக்களும் அந்தத் தெருக்கள்ல நடந்து போறதுக்கு அனுமதி தந்துடலாம் இல்லையா?”
“அரசாங்கங்கிறது உயிர் இல்லாத கத்தி மாதிரிதான் செழியா… அதை யார் கையில வைச்சிருக்காங்க… அந்தக் கத்தியை யாருக்காகப் பயன்படுத்துறாங்கனு பொருத்துதான் எல்லாமே மாறும்”
“என்ன சொல்றீங்கம்மா, புரியலியே?”
“அரசாங்கம் என்பது மக்களை ஆட்சி செய்யற ஒரு நடைமுறை. ஆனா, ஆட்சி செய்யறவங்க ஆதிக்க ஜாதி இந்துக்கள் பேச்சைக் கேட்கிறதும், அவங்களுக்கு ஆதரவாக இருந்தா எல்லோரையும் எப்படி சமத்துவமா நடத்துவாங்க”
“ஆமாம்மா”
“போராட்டக்காரங்கள்ல ஒருத்தர் கடைத் தெருவுல போய் தண்டோரா போட்டாரு”
”எதுக்காக?”
“வைக்கம் போராட்டத்தோட நிலவரத்தை மக்கள்கிட்ட சொல்றதுக்காக ஒரு பொதுக்கூட்டம் நடக்குதுனு சொல்றதுக்காக… ஆனா, ஆதிக்க ஜாதிக்காரங்க, அவரோட தண்டோராவைக் கிழிச்சி அவரையும் அடிச்சிட்டாங்க. ஆனா, அவரோ இதுக்காக தன்னோட உயிரே போனாலும் பரவாயில்லன்னு துணிச்சலா இருந்தாரு”
“கடைத்தெருவுலதான் ஆதிக்க ஜாதிக்காரங்க அத்துமீறினாங்களா?”
“போராட்டம் நடக்கிற இடத்துலகூட சத்தியாகிரகம் செய்யற போராட்டக்காரங்களோட சண்டை இழுத்துக்கிட்டே இருந்தாங்க”
“அய்யோ…. அவங்களே சாப்பிடாம இருக்கிறாங்க… அவங்கக்கிட்ட போய் வம்பு இழுக்கலாமா?”
“ஆமா… மொத்தம் 18 பேர் பட்டினிப் போராட்டம் நடத்தினாங்க. அதில் ஒருத்தரு மயக்கம் அடையற நிலைக்குப் போயிட்டாரு. அப்பக்கூட அவரு, தன்னைக் கைது செய்யற வரைக்கும், இல்லன்னா தெருக்கள்ல எல்லோரையும் அனுமதிக்கிற வரைக்கும் எனக்கு சாப்பாடோ தண்ணியோ கொடுக்க வேணாம்னு உறுதியாச் சொல்லிட்டாரு”
“யப்பா… நினைச்சுப் பார்க்கிறப்பவே புல்லரிக்குதும்மா!!”
”வைக்கம் போராட்டம் பத்தி அந்த மாகாணம் முழுக்க பேச்சா இருந்துச்சு. இன்னும் சொல்லப்போனா நாடு முழுக்க அரசியல் தெரிஞ்சவங்க பலரும் வைக்கம் பத்தி விவாதிச்சாங்க. காந்தியடிகளும் என்ன நடக்குதுனு தெரிஞ்சுகிட்டே இருந்தாரு. அதனால, இந்தப் போராட்டத்த எப்படியாவது நிறுத்திடணும்னு அரசாங்கம் பல திட்டங்களப் போட்டுச்சு”
“ஆமா, முதல்ல போராட்டக்காரங்களக் கைது பண்ணுச்சு, அப்பறம் கைது பண்ணுறத நிறுத்துச்சு… வேற என்ன பண்ணிச்சும்மா?”
”அடுத்த நாளே அதிரடியா ஒண்ணு செய்துச்சு அரசாங்கம்”
“என்னம்மா பண்ணினாங்க?”
”ஏப்ரல் 11ஆம் தேதி மத்தியான நேரம். காங்கிரஸ் கட்சி ஆபிஸ்ல முக்கியமான தலைவர்கள் தீவிரமா விவாதிச்சிட்டு இருந்தாங்க. போராட்டத்தை அடுத்த கட்டமாக எப்படி கொண்டு போறதுன்னும், அக்கம் பக்கத்துல இருக்கிற மாகாணங்கள்ல இருந்து எப்படி ஆதரவைப் பெறுவதுன்னும் பேசிட்டு இருந்தாங்க. அப்ப அங்க வந்த போலீஸ்காரங்க அங்க இருந்த தலைவர்கள் ஜார்ஜ் ஜோசப், செபாஸ்டியன், கோ.ஜி.ராய் ஆகிய மூன்று பேரையும் கைது செய்திடுறாங்க”
“ஏன்மா…. அவங்கதான் போராட்ட இடத்துக்கே போகலையே?”
”காரணம் இருக்கு செழியா… வைக்கம் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு இருந்தாலும் தலைவர்கள் தெளிவாகத் திட்டமிட்டே வழிநடத்திட்டு இருந்தாங்க. அதனால தலைவர்களைக் கைது செய்திட்டால் போராட்டம் பிசுபிசுத்துப் போயிடும். பெயரளவில சில நாள்கள் நடக்கும். அப்பறம் யாரும் வரமாட்டாங்கனு அரசாங்கம் நினைச்சுது”
“ஓ! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க இல்ல”
“ஆமா… இதெல்லாம் தலைவர்களுக்கும் தெரியும். அதனாலதான் பெரியாரைப் போராட்டக் களத்துக்கு வரச் சொல்லி தந்தி அனுப்பிகிட்டே இருந்தாங்க. ஏன்னா, பெரியார் ஆரம்பத்திலேருந்து ஜாதியை ஒழிக்கறதுக்குக் குரல் கொடுக்கிறதோட, விடாப்பிடியா போராடக்கூடியவர்னு அவங்களுக்கு நல்லாத் தெரியும்”
“ஆமா… ஆமா..”
“வழிநடத்தத் தலைமை வேணும்ங்கிற விஷயத்தை காந்தியடிகளுக்கும் அப்பப்ப சொல்லிகிட்டே இருந்தாங்க”
”காந்தியடிகள் என்ன சொன்னாங்க?”
“அகில இந்திய அளவிலான இயக்கமா வைக்கம் போராட்டத்தைக் காந்தியடிகள் மாத்த விரும்பலையோ என்னவோ, தலைவர்கள் இல்லாம இயக்கம் இறந்துவிடாமல் பாதுகாக்கிற வேலையை சென்னை மாகாணத் தலைவர்கள் பார்த்துக்கொள்வாங்க’னு சொல்லிட்டாரு”
“சென்னை மாகாணத்திலே யாரு இருந்தா?”
“நம்ம பெரியார்தான்! அவருக்குத் தான் ஏற்கனவே கடிதம் அனுப்பிட்டாங்களே! அவர்தான் அப்ப தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரா இருந்தாரு. காந்தி இன்னொரு விஷயத்தையும் சொன்னாரு”
“என்ன?”
“நடத்திக்கிட்டு இருக்கிற பட்டினிப் போராட்டத்தைக்கூட நிறுத்திடலாம்னு சொன்னாரு”
“அய்யயோ! ஏன்?”
“நம்ம கிட்ட அன்பு இருக்கிறவங்க கிட்டதான் பட்டினி கிடந்து உரிமையைப் பெற முடியும். ஆனா, அங்கே நிலைமை அப்படி இல்லேன்னு சொன்னாரு”
“ஓ!… ஜார்ஜ் ஜோசப்பைச் சேர்த்து தலைவர்கள அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அடுத்தது என்ன… தமிழ்நாட்டுலேருந்து பெரியார் தாத்தா வைக்கத்துக்கு போகப் போறாரா?”
”ஆமா.. பல்லாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை போராட்டம்… அதை மீட்டெடுக்க ஒவ்வொரு விஷயமாப் பார்த்துப் பார்த்து போராட்டத்தை வடிவமைச்சாங்க… அதனால பெரியளவில் மக்கள் ஆதரவு இருந்த போராட்டம்… இப்ப தலைவர்கள் இல்லாட்டி அரசாங்கம் நினைச்ச மாதிரி தோல்வியில முடிஞ்சுடும்”
“அப்படி முடியக் கூடாதும்மா…”
“அதுக்காகத்தான் பொருத்தமான தலைவரை எதிர்பார்த்தாங்க. இப்படி எல்லாம் ஆகும்னு கணிச்சுதான் 4ஆம் தேதியில இருந்தே பெரியாரை அழைச்சுகிட்டு இருந்தாங்க… காந்தியடிகளும் சென்னை மாகாணத் தலைவர்கள் பார்த்துப்பாங்கனு பச்சைக் கொடி காட்டிட்டாரு”
“பெரியார் வந்தாராம்மா?”
“ஆமா… எப்ப வந்தாரு… என்னென்ன செஞ்சார்ன்னா…”
(தொடரும்)