பாலங்கள் பலவிதம்!
இதுவரைக்கும் எத்தனை மேம்பாலங்களைக் கடந்து போயிருப்பீங்க. என்னைக்காவது நின்னு அது எப்படி கட்டப்பட்டிருக்குனு பாத்திருக்கீங்களா? இதுவரைக்கும் பார்த்ததில்லை. ஆனா இனிமேல் பார்க்க ஆசைப்படறீங்களா? அப்போ இந்தக் கட்டுரை உங்களுக்குத் தான். ஒரு பாலத்தின் முக்கியப் பகுதிகள், கட்டப்படுவதன் நோக்கம், பாலங்களின் வகைகள் இவையெல்லாம் பத்திதான் தெரிஞ்சுக்கப் போறோம். வாங்க, பாலத்துக்குள்ள போகலாம். இல்ல இல்ல பாலம் பத்தின கட்டுரைக்குள்ள போகலாம்.
பாலங்கள் பொதுவாக சாலை வழி, ரயில் வழி அல்லது நீர் வழியின் குறுக்கே கடக்க வேண்டியிருக்கும் போதுதான் கட்டப்படுகின்றன. அவை ஓர் ஓடையைக் கடக்கப் பயன்படும் மிகச்சிறிய பலகையாகவும் இருக்கலாம் அல்லது ஒரு பரந்த ஆற்றின் மீது போக்குவரத்துக்காகக் கட்டப்படும் பெரிய கட்டமைப்பாகவும் இருக்கலாம்.
ஒரு பாலத்தின் முக்கியக் கூறுகள் மூன்று. அவை,
1. அடித்தளம்
2. உட்கட்டமைப்பு
3. மேற்கட்டுமானம்
ஒரு பாலம் கட்டும்போது அடித்தளம் அமைப்பதன்மூலம் அதன் கட்டுமானம் தொடங்குகிறது. அதன் மேல் உள்ள கனமான மேற்கட்டுமானத்தைத் தாங்குவதற்கு துணை அமைப்பு அமைக்கப்படுகிறது. இதுவே சாலை அல்லது நடைபாதையாகப் பயன்படுகிறது.
பாலங்கள் அமைப்பதில் Piles, Caps, Bents, Abutments, Piers, Pier Caps, Bearings, Trusses, Decks, Barriers, Arches போன்ற பல அமைப்புகள் உள்ளடங்கியுள்ளன.
போக்குவரத்தில் பாலங்கள் முக்கியப் பங்கு வகிப்பதால், ஒரு பாலத்தை இறுதி வடிவமைப்புச் செய்வதறகு முன் பல சிக்கலான கணக்கீடுகளும் நுட்பமான ஆய்வுகளும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
மேலும், ஓரிடத்தில் ஒரு பாலத்தை அமைக்கத் திட்டமிடும்போது அப்பகுதியில் சுற்றுச்சூழல், தாங்கும் திறன், மண் வகை, பாதுகாப்பு, கட்டுமானப் பொருள்கள், கட்டுமான முறைகள் போன்ற அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியது அத்தியாவசியமாகிறது.
பாலங்களின் வகைகள்:
கட்டமைப்பின் அடிப்படையில் பாலங்கள் பொதுவாக ஏழு வகையாக வகைப்படுத்தப் படுகின்றன. அவை,
1. வளைவுப் பாலம் (Arch Bridge)
2. தூலக்கட்டுப் பாலம் (Truss Bridge)
3. தூண் பாலம் (Beam Bridge)
4. தொங்கு பாலம் (Suspension Bridge)
5. பிடிமானப் பாலம் (Cantilever Bridge)
6. கயிறு தங்கு பாலம் (Cable Stayed Bridge)
7. கட்டப்பட்ட வளைவுப் பாலம் (Tied Arch Bridge)
1. வளைவுப் பாலம்:
ஏறத்தாழ 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருக்கும் இந்த வகைப் பாலங்கள் பெரும்பான்மையாகப் பல இடங்களில் காணலாம். இந்த வகைப் பாலங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான கட்டுமான அமைப்பைக் கொண்டிருக்கும். அதாவது வளைவான அமைப்பை இரண்டு பக்கமும் தாங்கிப் பிடிப்பதற்கேற்ற அமைப்புகள் இருக்கும். அவை, பாதசாரிகள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்தும் ஒரு சேரப் பயணம் செய்யக்கூடிய அளவில் முழுச் சுமையையும் தாங்கும் வகையில். திடமானதாக அமைந்திருக்கும்.
2. தூலக்கட்டுப் பாலம்:
பல நூற்றாண்டுகளாகப் பழக்கத்தில் இருக்கும் இவை பொதுவாக, 50 முதல் 110m வரை நீளம் கொண்டவை. பெரிய சுமைகளை எடுத்துச் செல்ல -குறைவான பருமன் கொண்ட கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்துவதன் அடிப்படையில் இந்த வகைப் பாலங்கள் பிரபலமானவை. பலத்த காற்றடித்தாலும் பாதுகாப்பாய் உணர வைக்கும் இந்த வகைப் பாலங்களில் முக்கோண வடிவில் அமைந்திருக்கும் அந்த அமைப்புகளின் பங்கு முக்கியமானது.
3. தூண் பாலம்:
தூண் பாலங்கள் அதிக அளவில் நாம் பார்க்கக்கூடிய, எளிதில் வடிவமைக்கூடிய ஒரு பால அமைப்பு ஆகும். இவை நிலைக் கற்றைகள் திண்காரை(RCC), மரம், எஃகு மற்றும் பலவற்றைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள செங்குத்துத் தூண்களை உள்ளடக்கிய துணைப் பாலங்கள் ஆகும். இவை கர்டர் பாலம் என்றும் அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு முனைகளிலும், தூண்கள் அல்லது அபுட்மென்ட்களால் பாலம் தாங்கப்படுகிறது. தூண் பாலத்தின் நீளம் 80 மீட்டருக்கும் குறைவாகவே இருக்கும். இந்த வகையான பாலங்கள் அதன் மீது சுமைகளைப் போதுமான அளவு தாங்கக் கூடியவை.
4. தொங்கு பாலம்:
தொங்கு பாலங்களின் சமதளம் முழு பாலத்தின் சுமை தாங்கும் பகுதியாகும். இது கேபிள்களைத் தாங்கி நிற்கும் செங்குத்து சஸ்பெண்டர்களால் அமைக்கப்படுகின்றன. சஸ்பென்ஷன் கேபிள்கள் பாலத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் தாண்டி, நீண்டு தரையில் உறுதியாக நங்கூரமிடப்பட்டிருக்கும். பாலத்தின் அளவைப் பொறுத்து இந்த சஸ்பென்ஷன் கேபிள்களைப் பிடிக்க பல கோபுரங்கள் நிறுவப்படும். பாலத்தில் பயன்படுத்தப்படும் எந்த சுமையும் கட்டமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் சஸ்பென்ஷன் கேபிள்களால் முழுவதுமாக தாங்கிப் பிடிக்கும் அளவுக்கு இவ்வகை பாலங்கள் கட்டப்படுகின்றன. பொதுவாக, தொங்கு பாலங்கள் 150m – 200m இடையே இடைவெளியைக் கொண்டிருக்கும்.
5. பிடிமானப் பாலம்:
முதன் முதலில் Cantilever எனப்படும் பிடிமானப் பாலம் அமைக்கப்பட்ட போது அது ஒரு பெரிய பொறியியல் முன்னேற்றமாகப் பார்க்கப்பட்டது. போக்குவரத்து வசதிகளுக்காக, இந்த வகைப் பாலங்கள் தூண்கள் அல்லது தூலக்கட்டு போன்ற அமைப்புகளால் மய்யப்பகுதியில் நன்கு தாங்கும் அளவிற்கு வடிவமைக்கப்படுகின்றன. மிகவும் பாதுகாப்பான பிடிமானப் பாலங்களின் அமைப்பு பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பொதுவாக, கான்டிலீவர் பாலங்கள் 150m முதல் 500m வரை இடைவெளியைக் கொண்டிருக்கும்.
6. கயிறு தங்கு பாலம்:
இவை தொங்கும் பாலம் போன்றவை. மேம்பாலங்களின் மேலே பயணம் செய்யும் சுமையைத் தாங்குவதற்கு நேரான செங்குத்தான தூண்கள் போன்ற அமைப்புகள் அமைக்கப்படுகின்றன. இவை தவிர வேறு எந்தக் கேபிள் போன்ற அமைப்புகளும் இதில் இல்லை. பொதுவாக, கேபிள் – தங்கு பாலங்கள் 500 m முதல் 1000 m வரை இடைவெளியைக் கொண்டிருக்கும். தொங்கு பாலங்களோடு ஒப்பிடும்போது இவை கூடுதல் விவேகத்துடன் அமைக்கப்படுகின்றன.
7. கட்டப்பட்ட வளைவுப் பாலம்:
ஒரு கட்டப்பட்ட வளைவுப் பாலம் என்பது வளைவு பாலம் மற்றும் தொங்கு பாலத்தின் அமைப்புகள் ஒருங்கிணைந்ததாகும். பக்கவாட்டில் இருந்து ஒரு வில் போல இருப்பதால் இவை கூடுதலாக வில்ஸ்ட்ரிங் பிரிட்ஜ்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகையான பாலங்களில் இந்த வில் அதன் மேல்நோக்கிய கேபிள்களின் பிடிமானத்தையும், வளைவின் அமைப்பையும் பயன்படுத்தி சுமையைத் தாங்கி, பாலத்தை நிலையாக வைத்திருக்க உதவுகின்றன.
இத்தனை வகையான பாலங்களையும், அவற்றின் அமைப்பு முறைகளையும் பார்க்கும் போது நாம் பொறியியல் துறையில் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கண்டு வியப்பாக இருக்கின்றது அல்லவா? நவீன காலத்தில் பாலங்களின் அழகியல் அமைப்பாக நம்மில் பலர் கருதுவது அதன் வடிவமைப்பே ஆகும்.
பாலங்கள் போக்குவரத்து நெரிசலில் இருந்து நம்மைக் காப்பாற்றி நம் பதற்றத்தையும், மன உளைச்சலையும் பெருமளவு குறைக்கின்றன என்றால் மிகை ஆகாது.
இவ்வகையிலான பால வடிவமைப்புகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் சிறந்து விளங்கினர் என்பதை இன்றளவும் நிலைத்து நிற்கும் பல உதாரணங்களின் வழியே நாம் அறியலாம்.
இனிமேல் ஒவ்வொரு முறை பாலத்தைக் கடக்கும் போதும், அதன் வகையையும், அது அமைக்கப்பட்டிருக்கும் நுட்பத்தையும் கண்டு, பிறருக்கும் விளக்க மறக்காதீர்கள்.