மாணவர்களின் மன இறுக்கம் – சிகரம்
ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன், தனக்குப் பொறுப்புடன் பாடம் கற்பித்த, கடமை தவறாத ஒரு ஆசிரியரைத் திட்டமிட்டு வகுப்பறையிலே கொலை செய்த கொடூரம் சென்னையில், உயர் நீதிமன்றத்திற்கு எதிரே நிகழ்ந்திருப்பது மாணவர்களின் பொதுவான மன உளைச்சலின் விளைவு என்று கூறப்படுவது சரியல்ல.
அந்த நிகழ்வு கொழுப்பேறித் திமிர்ப் பிடித்த, செல்வச் செழிப்பில் திளைத்த, தரிகெட்ட, தறுதலை மாணவனின் செயல்!
ஆசிரியர் தந்த மனவுளைச்சலின் விளைவு இந்நிகழ்வு என்று சொல்வது, இந்த நிகழ்வைக் கூர்ந்து ஆழ்ந்து நோக்காத குறைபாட்டின் வெளிப்பாடாகும்.
கொலை என்பதை ஒரு சாதாரண நிகழ்வாகக் காட்டும் வன்முறைத் திரைப்படங்கள் வரிசையில் வருவதும், அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் வெளிவந்த கொலைவெறி பாடலும், அந்த மாணவனின் தனிப்பட்ட குடும்பச் சூழலும், அவனது கட்டுப்பாடற்ற வாழ்வும், தனக்குப் பெரிதாகத் தண்டனை எதுவும் கிடைத்து விடாது என்ற தெளிவும், துணிவும் அவன் இக்கொலையைச் செய்யக் காரணங்கள் ஆகும்.
வாக்குரிமையை 21 வயதிலிருந்து 18 வயதாகக் கால வளர்ச்சிக்கு ஏற்ப குறைத்ததைப்போல், இளைஞர்களுக்கு இன்றைக்கு ஏராளமான விழிப்பு, விவரம், புரிதல் வந்துவிட்டபின் 12 வயதுக்கு மேல் வந்தாலே, பெரியவர்களுக்கு வழங்கப்படக் கூடிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று சட்ட திருத்தம் செய்ய வேண்டிய கட்டாயத்தை இந்த மாணவனின் திட்டமிட்ட வெறிச்செயல் வெளிக்காட்டி விட்டது. இல்லையெனில், 18 வயதுக்குக் குறைவானவர்கள் யாரை வேண்டுமானாலும் கொலை செய்துவிட்டு, சீர்திருத்தப் பள்ளியில் சில காலம் கழித்துவிட்டு வெளியில் வந்துவிடுவார்கள்.
இந்த மாணவனின் கொடுஞ்செயலுக்கு சட்டமும், அரசும், சமூகமும் ஒரு சரியான தண்டனையை வழங்கவில்லையென்றால், இளைஞர்கள் மத்தியில் அச்சமின்மையை உருவாக்கி, கொலைச் செயலை எளிமையாக்கிவிடும், ஏராளமாக்கிவிடும் என்பதை எச்சரிக்கையாகக் கூறிக் கொள்கிறோம்.
மாணவர்களை அடிக்கக் கூடாது, திட்டக் கூடாது. சட்டம் வந்துவிட்டது. அப்படிப்பட்ட சூழலில் மாணவன் பற்றிய செய்தியைப் பெற்றோருக்கு நாட்குறிப்பில் தெரிவித்துத் திருத்துவது ஒன்றே வழி -_ பெற்றோர் கண்டிப்பது ஒன்றே வழி -_ என்று வந்துவிட்டபின், நாட்குறிப்பில் எழுதித் தெரிவித்தமைக்கு, ஒரு மாணவன் ஆசிரியரைத் திட்டமிட்டுக் கொலை செய்கிறான் என்றால், இது மன இறுக்கத்தின் விளைவா? திமிர்த்தனத்தின் உச்சக்கட்டச் செயலா? சிந்திக்க வேண்டும்.
இது உணர்ச்சிவசப்பட்டு ஒரு நொடியில் செய்யப்பட்ட செயல் அல்ல. தீரச் சிந்தித்து, விளைவுகள்பற்றி நன்கு அறிந்து, இடம் நேரம் எல்லாம் திட்டமிடப்பட்டுச் செய்யப்பட்டது. எனவே, இந்த மாணவனின் வெறிச் செயல் (கொலைச் செயல்) மாணவர்களுக்குப் பொதுவாகவுள்ள மன இறுக்கத்தின் விளைவு அல்ல என்பதை மீண்டும் தெளிவுபடுத்திவிட்டு, மாணவர்களுக்குப் பொதுவாக இன்றுள்ள இறுக்கங்கள் எவை? காரணிகள் யாவை? யார் யார்? தீர்வுகள் எவை? என்பனவற்றை இனிச் சுருக்கமாகப் பார்ப்போம்.
பெற்றோரின் நிர்ப்பந்தம்:
ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து நடக்க ஆரம்பித்தபின் நன்றாக ஓடியாடி விளையாட வேண்டும். அய்ந்து வயது வரை தாய்மொழியைத் தவிர வேறு எந்த மொழியையும் அதற்குக் கற்பிக்கக் கூடாது. மூன்று முதல் அய்ந்து வயது வரை வகுப்பறையில் அடைக்காமல், வீடுகளிலோ அல்லது கல்வி நிறுவனங்களிலோ (வாய்ப்பு, வசதிக்கு ஏற்ப) விளையாடிக் கொண்டே சுமையின்றி, இறுக்கமின்றி விருப்பத்தோடு சில அடிப்படைக் கல்வியறிவைப் பெறுதல்; அய்ந்து வயதுக்கு மேல் வகுப்பறைக் கல்வி என்பதே நலமான, வளமான உள்ளம் உறுதியான கல்விக்கு வழி வகுக்கும்.
உண்மை இப்படியிருக்க, மூன்று வயது முதலே வகுப்பறையில் அடைப்பதும்; அதுவும் காலை 7 மணியிலிருந்து மாலை 7 மணி வரை அவர்களைக் கசக்குவது; சூடான உணவின்றி சுகமான தாயின் அணைப்பின்றி அவர்களைத் தவிக்க விடுவதும்; மருத்துவப் படிப்பை மனதிற் கொண்டு, படி படி யென்று பாடாய்ப்படுத்தி, அவர்களை மன நோயாளியாக்குவதும் பெற்றோர் செய்யும் பெருந்தவறாகும்.
அடுத்து, மதிப்பெண் அதிகம் பெறவேண்டும், அதிலும் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்று பிள்ளைகளை நெருக்குவது மிகப்பெருங் கொடுமையாகும். எல்லோரும் முதல் மதிப்பெண் எவ்வாறு பெறமுடியும்? சிந்திக்க வேண்டாமா?
அடுத்த பிள்ளையை ஒப்பிட்டுக் காட்டி, நீயேன் ஒரு மார்க் குறைவாய் வாங்கினாய் என்று கேட்கும் மடமை, 95% மதிப்பெண் பெற்ற மாணவரை ஏன் 100 வாங்கவில்லை என்று திட்டும் அவலம்.
இப்படிப்பட்ட பெற்றோரின் தொல்லையால்தானே 96% மதிப்பெண் பெற்ற மாணவி தற்கொலை செய்து கொண்டாள். 95% மதிப்பெண் சும்மாவா கிடைக்கும். எவ்வளவு உழைப்பு உழைத்திருக்க வேண்டும். அப்படி உழைக்கும் பிள்ளையை ஊக்குவிப்பதற்குப் பதில் உளைச்சலைக் கொடுத்தால் அது எந்த வகையில் அறிவுடைமை?
சூரிய ஒளிகூட உடலில்பட வாய்ப்பில்லாமல், காலை முதல் மாலை வரை புத்தகமே கதியென்ற சூழலை மாணவர்களுக்கு உருவாக்கி, விளையாடுவதற்கு, ஆடி, ஓடி மகிழ்வதற்கு வாய்ப்பில்லாமல், மாணவர்களை வதக்கி யெடுக்கும் கொடுமைதானே மெட்ரிக் பள்ளிகளில் இன்று நூறு விழுக்காடு நடக்கிறது!
பகல் முழுவதும் பாடாய்ப்பட்டுவரும் பிள்ளையை இரவு 12 மணிவரை படிக்கச் சொல்வதும், காலையில் 4 மணிக்கே அலாரம் வைத்து எழச் செய்து, நிம்மதியான உறக்கம் இல்லாத உளைச்சல். இப்படி எத்தனையோ… இதிலே இடையிலே டியூஷன் வேறு! இலட்சக்கணக்கில் கட்டணம் செலுத்திப் படிக்க வைக்கும்போது, டியூஷன் எதற்கு? டியூஷன் கட்டாயம் என்றால் தரமான பள்ளி எதற்கு?
பள்ளியில் நெருக்கடி:
பள்ளியின் நிர்வாகம் தன் பள்ளி 100% தேர்ச்சி பெற வேண்டும்; முதல் மதிப்பெண் பெறவேண்டும்; மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்று ஆசிரியர்களை வற்புறுத்த, அவர்கள் அதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் மாணவர்களை நெருக்க, வீட்டிலும் பள்ளியிலும் மாறி மாறி மாணவர்கள் சாறுபிழியப்படுகிறார்கள்.
தீர்வுதான் என்ன?
அரசின் நடவடிக்கை: மாணவர்களின் மன இறுக்கத்தைப் போக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. ஒரு தேர்விற்கும் இன்னொரு தேர்விற்கும் இடையே இரண்டு மூன்று நாள்கள் இடைவெளி; வினாத்தாள் படித்துப் பார்க்க கூடுதல் நேரம்; விடைத்தாள் சரியாகத் திருத்தப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க நகல் (Xerox) பெறும் வாய்ப்பு; மதிப்பெண் குறைந்தால் மீண்டும் எழுதி அதிக மதிப்பெண் (Improvement) பெற வாய்ப்பு; மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது, மன உளைச்சல் அடையச் செய்யக் கூடாது என்ற சட்டம் போன்றவற்றால் மாணவர்கள் பெருமளவிற்கு மன இறுக்கம் குறைக்கப்பட்டு, பெருமூச்சு விட்டுக்கொள்ள வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது. இப்படியே இன்னும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதோடு, பெற்றோர்களும் பிள்ளைகளைப் பணம் ஈட்டும் கருவியாக ஆக்காமல் உணர்வுள்ள மனிதப் பிறவியாக எண்ணிச் செயல்பட வேண்டும்.
மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:
(1) 5 வயதிற்கு முன் பள்ளியில் சேர்ப்பதைக் கட்டாயம் தடுக்க வேண்டும்.
(2) அப்படிச் சேர்க்கப்பட்டால் அக்கல்வி நிறுவனங்கள் வகுப்பறையில் மாணவர்களை அடைத்துப் பாடம் நடத்தாமல், அவர்களை நன்றாக விளையாடி மகிழச் செய்து, அதன்வழி சில சுமையற்ற அடிப்படைக் கல்வியைப் புகட்ட வேண்டும். அதாவது, பிள்ளைகள் ஆர்வத்தோடு அங்கு (பள்ளிக்கு) செல்லும் சூழல் மட்டுமே இருக்க வேண்டும். பள்ளிக்குச் செல்ல குழந்தைகள் முரண்டு பிடித்தால் அவர்களுக்கேற்ற சூழல் அங்கில்லை என்பதே பொருள்.
(3) மனப்பாடத்திற்கு மதிப்பெண் அதிகம் தராமல் செயல்முறையில் அறிவை வளர்க்க, அறிவைச் சோதிக்க கல்வித் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
(4) படைப்பாற்றல் வளர்க்கும் கல்வியாகவும், படைப்பாற்றலை வெளிப்படுத்தும் கல்வியாகவும் பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். மாணவனின் எதிர்கால வாழ்வில் (அவன் ஆற்றும் பணிக்கு) அது பயன்பட வேண்டும்.
(5) மாணவர்களுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு, மதச் சார்பற்ற நீதிநெறி ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் கற்பிக்கப்பட வேண்டும். பள்ளியின் காலைப் பேரவைக் கூட்டத்தில் 5 நிமிடம் அனைத்து மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் அறிவுரை வழங்க வேண்டும்.
(6) நன்னடத்தைக்கும், பொதுத் தொண்டாற்றியமைக்கும், விளையாட்டுப் போட்டியில் பெற்ற வெற்றிக்கும் மதிப்பெண் பொதுத் தேர்வில் சேர்க்கப்பட்டு, அம்மதிப்பெண், தொழிற்கல்வியில் சேர்வதற்கு இடம் அளிக்க, கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
மருத்துவம் பயில இடம் அளிக்கும்போது, மாணவர்களின் தேர்வு மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படுகிறதே தவிர, அம்மாணவருக்குப் பொதுத் தொண்டில் ஆர்வம் இருக்கிறதா? மனித நேய மனம் இருக்கிறதா? மக்களுக்குச் சேவை செய்யும் விருப்பம் இருக்கிறதா? என்பவை கருத்தில் கொள்ளப்படுவதில்லை. இவை இல்லாத மருத்துவராய் அவர் வந்து என்ன பயன்?
(7) பெற்றோர் ஆசிரியர் தொடர்பு:
மாணவர்களின் மன இறுக்கத்திற்கும், மாணவர்கள் தடம் புரண்டு செல்வதற்கும் பெற்றோரே பெருங்காரணம். பள்ளியில் சேர்த்து விட்டதோடு தங்கள் கடமை முடிந்தது எனக் கருதும் பொறுப்பில்லா நிலையாலே இவை நிகழ்கின்றன.
பெற்றோர் வாரம் ஒரு முறையாவது பள்ளிக்குச் சென்று, தங்கள் பிள்ளையினுடைய நிலை குறித்து ஆசிரியரிடம் அறிய வேண்டும். பெற்றோர்கள் வருவார்கள் என்று தெரிந்தாலே மாணவர்களின் செயல்பாடுகள் வரம்பிற்குள் வரும்.
(8) சான்றோர் கூட்டம்: மாதம் ஒருமுறை ஒரு சான்றோரை அழைத்து வந்து, மாணவர்களைக் கூட்டி, மதம் சாரா நன்னெறிக் கருத்துகளை மாணவர்களுக்குச் சொல்லச் செய்ய வேண்டும்.
அன்பால் திருத்த வேண்டும்: அடித்து, திட்டி, தண்டித்துத்தான் மாணவர்களை நெறிப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மாணவர்கள் மீது நமக்கு அன்பும், அவர்கள் முன்னேற்றத்தில் நமக்கு அக்கறையும் இருக்கிறது என்று மாணவர்கள் அறிந்தால், அந்த ஆசிரியர் சொற்படி கட்டாயம் நடப்பர்.
தங்கள் அதிகாரத்தை, மேன்மையைக் காட்டும் நோக்கத்துடன் ஆசிரியர்கள் நடந்து கொண்டால், அது மாணவர்களிடையே வெறுப்பை, எதிர்விளைவையே ஏற்படுத்தும்.
31 ஆண்டு காலம் ஆசிரியராகவும், தலைமையாசிரியராகவும் பணியாற்றி 3,000 மாணவர்களையும் 150 ஆசிரியர்களையும் கட்டுக்குள் வைத்து, கிராமப்புறத்தில் நகரத்துச் சாதனையை என்னால் சாதிக்க முடிந்தமைக்கு இவையே காரணம். அதுமட்டுமின்றி, நாம் முன்மாதிரியாக நடந்து காட்ட வேண்டும். மாணவர்களை அன்போடும், அக்கறை யோடும், இன்முகத்தோடும் அணுக வேண்டும். நம்மை அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்றால், நாம் சண்டைபோட்டால்கூட சிரித்துக் கொண்டே ஏற்பர். கட்டுப்பாட்டின் சூட்சமம் இதுதான்! மாணவர்களின் மன இறுக்கம் அகற்றும் வழிகளும் இவைதான்!