உணவு : ப(ந)ஞ்சு மிட்டாய்
Pink என்னும் அடர் இளஞ்சிவப்பு நிறத்துக்குப் பஞ்சுமிட்டாய் நிறம் என்றே பெயர் வரும் அளவுக்கு பஞ்சுமிட்டாயின் அடையாளமாகி இருக்கிறது அந்த நிறம். ஆனால், அந்த நிறத்தைக் கொண்டுவருவதற்காகப் பயன் படுத்தப்படும் ரோடமைன் பி என்னும் வேதிப்பொருள் புற்றுநோயை உருவாக்கும் என்பதால், புதுச்சேரி அரசும், தமிழ்நாடு அரசும் இவ்வேதிப் பொருளைக் கொண்டு தயாரிக்கப்படும் பஞ்சுமிட்டாய்களுக்குத் தடை விதித்துள்ளன.
சர்க்கரைப் பாகை இயந்திரத்தின் மூலம் ஊதிப் பெரிதாக்கி, பஞ்சுபோல பெருக்க வைத்து, கண்ணைக் கவரும் வண்ணமேற்றி, கடற்கரை, திருவிழா, சந்தைகள், கண்காட்சி-பொருட்காட்சிகள், பெரு வணிகக் கூடங்களில் பார்த்ததும் வாங்கத்தூண்டும் வகையில் விற்பனை செய்வார்கள்.
மிட்டாய்க்குத் தேவையான சர்க்கரைப் பாகைத் தவிரவும், இந்த நிறமி தான் பேராபத்து தரக் கூடியது. எனவே, நிறமி சேர்க்கப்பட்ட பஞ்சு மிட்டாய்க்குத் தான் தடை. வெள்ளை பஞ்சு மிட்டாய்களுக்குத் தடையில்லை.
எந்த உணவுப் பொருளையும் அதன் நிறம், மணம், அதனுடன் தரப்படும் இலவசங்கள், அதற்கு தரப்படும் விளம்பரம் இவற்றைக் கொண்டு உண்ணக் கூடாது. அந்த உணவுப் பொருளின் தரம், அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருள்கள், அதனால் ஏற்படும் நன்மை தீமைகளைக் கணக்கில் கொண்டே உட்கொள்ள வேண்டும்.
கோடைக்காலம் வேறு வருகிறது – தின்பண்டங்களில், கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருள்களில் மிகுந்த எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும். சரியா?
– பிஞ்சண்ணா