நினைவில் நிறுத்துவோம் : பள்ளி பிள்ளைகள் மூலம் அரசியல் பிரச்சாரம்! எச்சரிக்கை
அண்மையில் ஒரு செய்தி! “பள்ளி மாணவர்களிடம் பி.ஜே.பி. கட்சியைச் சேர்ந்த ஒருவர் தப்பான வழியில் பிரச்சாரம் செய்துள்ளார். தனது பிரச்சாரத்திற்கு மாணவர்களைக் கருவியாக்கி, பெற்றோரை அச்சுறுத்தி வாக்குகளைப் பெற முயற்சி மேற்கொண்டுள்ளார்.
வீட்டிற்குச் சென்ற பிள்ளைகள் சாப்பிடாமல் கண்கலங்கியுள்ளனர். பெற்றோர்கள் பிள்ளை களைச் சாப்பிட அழைத்தபோது, அவர்கள் கண் கலங்கியவாறு சாப்பிட வர மறுத்துள்ளனர். பெற்றோர் ஏன் என்று கேட்டபோது, ‘நீங்கள் பி.ஜே.பி.க்கு ஓட்டுப் போடுவதாய் உறுதி கொடுத்தால்தான் சாப்பிடுவோம்’ என்று கூறியுள்ளனர்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் விசாரித்த போது, அப்பகுதி பி.ஜே.பி. பிரமுகர் தன் கட்சிக்காரர்களைப் பயன்படுத்தி, மாணவர்களை மூளைச்சலவை செய்து, இவ்வாறு பெற்றோரை வற்புறுத்தச் செய்துள்ளனர்.’’ என்பதே அச்செய்தி. அரசு உடனடியாக இச்செய்தியில் உண்மைத் தன்மையை புலன் விசாரணை நடத்திக் கண்டறிந்து, குற்றம் உறுதியானால் கடும் தண்டனை வழங்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிவருகின்றனர்.
தேர்தலில் வெற்றி பெற பி.ஜே.பி. கட்சியினர் எதையும் செய்வர், எந்த எல்லைக்கும் செல்வர் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. தாங்கள் வெற்றிபெற, வாக்குகள் பெற பள்ளிப் பிள்ளைகளைக் கருவியாகப் பயன்படுத்துவது உண்மையென்றால் கயமைச் செயல் அல்லவா? அப்படிப்பட்டவர்களை அரசு கடுமையாகத் தண்டிக்கவேண்டும். மாணவர்களை இத்தகையோர் அணுகாமல் கண்காணிக்க வேண்டும்.
பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று வந்ததும் பள்ளியில் அல்லது மற்ற இடங்களில் யார் யார் பிள்ளைகளிடம் எப்படிப் பழகினார்கள். என்ன பேசினார்கள் என்று விசாரித்து அறியவேண்டும். பாலியல் சீண்டல்கள் அதிகம் நடக்கும் இக் காலத்தில் இப்படியெல்லாம் விசாரிக்க வேண்டியது கட்டாயமாகும். பிள்ளைகளிடம் விசாரிக்கும் போது அவர்களை மிரட்டாமல், அன்போடு அணுகி பயப்படாமல், மறைக்காமல் நடந்தவற்றை அவர்கள் கூறும்படிச் செய்யவேண்டும்.
பள்ளி மாணவர்களைக் குறிவைத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் உடற்பயிற்சி, தேசபக்தி, நீதிபோதனை வகுப்பு நடத்துவதாகக் கூறி அவர்களுக்கு மதவெறியை ஊட்டுகின்ற செயல்களும் அதிகம் நடைபெறுவதால், மாணவர்கள் மதவெறி, ஜாதி வெறி கொள்ளாமல் அவர்களைக் கண்காணிக்கவேண்டும்.
தங்களிடம் ஜாதி, மத உணர்வுகளை, வெறியைப் பிறர் ஊட்டினால், மாணவர்கள் அவர்களிடம் எதிர்த்துக் கேள்வி கேட்கவேண்டும். அண்மையில் வடமாநிலச் சிறுவன் தன்னிடம் மதவெறியை ஊட்ட முற்பட்டவர்களிடம் அறிவுநுட்பத்தோடு பேசியதையும், வாதிட்டதையும் நீங்கள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.
“எங்களுக்கு மதமும், ஜாதியும், மூடநம்பிக்கைக்கும் கேடு தருமே தவிர நாங்கள் வாழ்க்கையில் உயர உதவாது; நாங்கள் நன்றாகப் படித்து அதிக மதிப்பெண் பெற்றால்தான் வாழ்க்கையில் உயரமுடியும். கடவுளை, மதத்தை, ஜாதியை அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள். மாணவர்கள் அதற்குப் பலியாகக் கூடாது’’ என்று அச்சிறுவன் பேசியதை ஒவ்வொரு மாணவரும் உள்ளத்தில் கொண்டு, விழிப்போடு இருக்க வேண்டும்.
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால் உங்கள் கவனம், படிப்பு பல வகையில் பாதிக்கப்படும். நமக்கு நன்மை தரக்கூடியவையும், கேடும் அழிவும் தரக்கூடியவையும் அதில் இருக்கும். எனவே, மாணவர்கள் மதம், ஜாதி, நம்ம கடவுள், பிறர் கடவுள் என்று வெறுப்பூட்டும் பிரச்சாரம் செய்வோரை வெறுத்து ஒதுக்க வேண்டும் பெற்றோர்களிடமும் அப்படிப்பட்டவர்களைப் புறக்கணிக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும். வீட்டில் விவரம் அறியாப் பெற்றோர்கள் இருப்பின் அவர்களுக்கு எது நல்லது, எது கெட்டது, யார் நமக்கு நன்மை செய்யக்கூடியவர்கள், யார் நமக்குப் பாதிப்பை உண்டாக்கக்கூடியவர்கள் என்பதை விளக்கிக் கூறவேண்டும்.
பிற மதத்தவரை வெறுக்கக் கூடியவர்கள், தாழ்ந்த ஜாதியினர், உயர்ந்த ஜாதியினர் என்று வேறுபாடு காட்டி, கீழ்ஜாதியினரை இழிவாக நடத்தக்கூடியவர்கள், சமத்துவத்திற்கு எதிரானவர்கள், கல்வி கற்க முடியாமல் தடைகளைப் போடுபவர்கள், பணக்காரர்கள் மட்டுமே படிக்க வழிசெய்து, ஏழைக் குடும்பத்து மாணவர்கள், ஒடுக்கப்பட்ட சமுதாயத்துப் பிள்ளைகள் படிக்க முடியாமல் நுழைவுத் தேர்வு போன்றவற்றைத் திணிப்பவர்கள், இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள், உயர்ஜாதியினர்க்கு மட்டுமே ஆதரவாகச் செயல்படக்கூடியவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்களைப் புறக்கணிக்கும்படி பெற்றோர்களிடம் சொல்ல வேண்டும்.
எல்லோரும் படிக்கவும், எல்லோரும் சமமாக ஒற்றுமையாக வாழவும், எல்லோருக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கவும், கல்வி உதவித் தொகை கிடைக்கவும், பெண்கள் படிக்கவும், உயரவும் உதவி செய்யக்கூடியவர்களை ஆதரிக்கும் படியும், அவர்கள் செய்த நன்மைகளை எல்லோருக்கும் எடுத்துக் கூறும்படியும் பெற்றோருக்குக் கூறி விளக்கவேண்டும்.
பணம், சாராயம், பாத்திரங்கள் தருகிறார்கள் என்று நாம் புறக்கணிக்க வேண்டியவர்களுக்கு வாக்களித்தால், தங்கள் எதிர்காலம் பாழாகிவிடும் என்பதை எடுத்துக் கூறி, அப்படியெல்லாம் ஓட்டுப் போட எதையும் பெறக் கூடாது என்றும் உணர்த்த கூற வேண்டும். பள்ளி மாணவர்கள் அரசியலில் நேரடியாக ஈடுபடக்கூடாது என்றாலும், எது நல்லது எது கெட்டது, யார் நல்லவர், யாரை ஆதரிக்க வேண்டும் என்ற விழிப்பைப் பெறுவதும் விழிப்பூட்டுவதும் கடமையாகும்.
இன்றைய மாணவர்கள்தான் எதிர்காலத் தலைவர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள், மக்களாட்சியின் பாதுகாவலர்கள். எனவே, அவர்களுக்கு அரசியல் விழிப்பு என்பது கட்டாயம் வேண்டும். பாடப்புத்கங்கள் படிப்பதோடு, நாட்டு நடப்புகள், மக்கள் விரோதச் செயல்கள், சதிகள் போன்றவற்றை நுட்பமாக புரிந்துகொள்ள வேண்டும்.
இன்றைய உலகில் விழிப்போடு இல்லையென்றால், மதவெறியர்களும், ஜாதி வெறியர்களும் தங்கள் சுயநலத்திற்காக மக்களைப் பிளவுப்படுத்தி ஒற்றுமையைச் சிதைத்து, ஆதிக்கவாதிகளுக்கு துணை நின்று, ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் வளர்ச்சியை அழித்துவிடுவர். அவர்களின் உரிமைகளைப் பறித்து அடிமையாக்கிவிடுவர்.
அண்மையில் இந்தியா முழுமையும் தொலைக்காட்சிகளில் பள்ளிச் சீருடை அணிந்து மாணவர்கள் மூலம் மோடி அரசுக்கு நேரடியாக பிரச்சாரம் செய்யும் விளம்பரங்கள் வருகின்றன. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற விளம்பரங்கள் மூலம் பிஞ்சு உள்ளங்களில் ஓர் அரசியல் கட்சி, ஓர் அரசியல் தலைவரை ஆழப்பதிவு செய்ய முற்படுகின்றனர். இதைப் பிள்ளைகள் முறியடிக்க வேண்டும்.
எனவே, மாணவர் சமுதாயம் மிக விழிப்பாக இருந்து நாட்டு நடப்புகளைப் புரிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். மீண்டும் குலக்கல்வியைக் கொண்டுவந்து,அப்பன் தொழிலையே பிள்ளைகளைச் செய்யச் செய்து, அவர்களின் கல்வி, வேலை வாய்ப்பை பறித்து அடிமைகளாக்கிவிட முயற்சிகள், திட்டங்கள் செயல்வடிவம் பெறுவதால் மாணவர்களும், இளைஞர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.