இப்ப நான் என்ன சொல்றது? பூத கணங்களை விரட்ட…
அப்போது எனக்கு வயது 15…
ஊரில் மாரியம்மன் கோயில் திருவிழா… சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஊரே களை கட்டிவிடும். வீட்டில் வேப்பிலையுடன் பூளப்பூவையும் (சிறுபீளை) சேர்த்து காப்பு கட்டுவார்கள்! பச்சரிசி மாவு இடித்து பிடித்துப் பிடித்து வைப்பார்கள்! தாம்பாளத் தட்டில் வைத்து பெண்கள் குழுகுழுவாக எடுத்துச் சென்று மாரியம்மன் கோயிலில் வைத்துப் படைப்பார்கள்! அதிலெல்லாம் எங்கள் கவனம் இருக்காது. பச்சரிசி மாவு சாப்பிடும் தருணத்திற்காகக் காத்துக்கிடப்போம்!
அடடா! அதை எண்ணும் போதே இப்போதும் நா ஊறுகிறது. பிடித்து வைத்த பச்சரிசி மாவுடன் உரித்த வாழைப்பழத்தைப் போட்டு, அதில் கொஞ்சம் நெய் ஊற்றி (ஆண்டுக்கொரு முறைதான்), மூன்றையும் சேர்த்துப் பிசைய வேண்டும். அப்போது அதிலிருந்து கமகமவென ஒருவிதமான வாசனை கமழும். நாவில் எச்சில் ஊற, கையால் நெம்பி எடுத்து, விரல்களில் வழிய வழிய’ சாப்பிட்டால்… எப்படி இருக்கும் தெரியுமா?
இதற்காக நாங்கள் ஆண்டு முழுவதும் காத்திருப்போம். அன்றைய கால கட்டத்தில் அம்மாக்களுக்கு மவுசு எகிறும். சிறுவர்கள் அம்மாவைச் சுற்றிச்சுற்றி வருவார்கள். ‘மாரியம்மனுக்குப் பிறகுதான்’ என்று அம்மாக்களும் பவுசு காட்டுவார்கள்!
இதுவல்ல நான் சொல்ல வந்தது… மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு தேர் ஓட்டத்திற்கு முன்னதாக பூத கணங்களை ஓட்டுவார்கள். அதை நான் நேரில் பார்த்தேன்! அதைத்தான் இங்கே சொல்லப்போகிறேன்!
தேர் பத்திரமாக ஓடி நிலைக்குத் திரும்ப வேண்டி, பூத கணங்களை வேண்டிக் கொண்டு மூன்று நாட்களுக்கு முன்பு, நள்ளிரவில் இறைச்சிக் குழம்பு ஊற்றி பிசைந்த சோற்றை அள்ளி வீசுவார்கள்.
அன்றைய காலகட்டத்தில் எங்களைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருந்த அச்சம், மர்மம் கலந்த வியப்பு இது ஒன்றே ஒன்றுதான்! இதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் மண்டையே வெடித்துவிடும் போலாகிவிட்டது.
பெரியவர்கள் இதுகுறித்து ஆதிமுதல் அந்தம் வரை விவரித்துப் பேசிப் பேசி எங்களின் ஆவலை மேலும் கூட்டிவிடுவார்கள். இதை எப்படியாவது தெரிந்துகொள்ள வேண்டுமென்ற முரட்டு வைராக்கியம் உண்டாகிவிட்டது. அதற்காக நான் ஏற்படுத்திக் கொண்ட தொடர்புதான் என்னைவிட 10 வயது மூத்தவரும், பக்கத்து வீட்டுக்காரருமான முருகேசனின் நட்பு!
தேர் அடிக்கடி குடை சாய்ந்துவிடாமல் இருப்பதற்காகவும், பூத கணங்களைச் சாந்தப்படுத்துவதற்காகவும் தேர் செல்லும் பாதைகளில் இறைச்சிச்சோறும், சாராயமும் கலந்து வீசுவார்கள். அந்த சோறு மண்ணில் விழவே விழாதாம்! அப்படி வீசப்படுகிறவற்றை பூத கணங்கள் சிந்தாமல், சிதறாமல் சாப்பிட்டுவிடுமாம்! அதன்பிறகு தேர் நிலைக்கு பத்திரமாக வந்துவிடுமாம். குயவர் குடும்பத்தில் ஒருவர் பரம்பரையாக இதைச் செய்து வருகிறாராம்.
இதெல்லாம் புதிய நண்பர் முருகேசன் எனக்குச் சொன்னது! ஆனால், 25 வயது முருகேசனும் அதை நேரில் பார்த்ததில்லையாம்! பிறகென்ன? ஒரு திட்டம் உருவானது!
என்ன திட்டம்?
வழக்கமாக இரவு படுத்ததும் மூச்சா போவதற்கு ஓரிரு முறை எழுந்து வெளியில் செல்வேன். அம்மாவும் தவறாமல் சிம்னி விளக்கோடு பின்னால் வருவார். அடுத்த நாளிலிருந்து இதன் எண்ணிக்கையை அதிகரித்தேன். அம்மா குழம்பிப்போய், ”நீர்க்கடுப்பு புடிச்சுகிச்சா சாமி?” என்றதோடு, அடுத்த நாள் தலைக்கு எண்ணெய்யும் வைத்துவிட்டார். ஆனாலும், என் திட்டம் தொடர்ந்தது. இதனால் தூக்கம் கெட்ட அம்மா, “எதுக்கும் ஒரு தடவை மருத்துவமனைக்குப் போயிட்டு வந்துடணும்” என்று முணுமுணுத்துக் கொண்டார். அதன்பிறகும் இது தொடரவே, ஒன்றும் புரிபடாமல் “நீயே போயிட்டு வந்து படுத்துக்க சாமி” என்று அலுப்புடன் சொல்லிவிட்டார்.
இதுதான் அந்தத் திட்டம்!
எதிர்பார்த்திருந்த அந்த நாளும் வந்தது…
மூச்சா கழிக்க வெளியில் வந்த நான், வீட்டினுள் செல்லாமல், காத்திருந்த முருகேசனுடன் சுமார் 3 கி.மீ தூரமிருக்கும் தேர் முட்டிக்கே வந்து, வெளிச்சம் இல்லாத, கொஞ்சம் உயரமான, தெளிவாகப் பார்க்கும் இடமாகப் பார்த்து நின்று கொண்டோம்.
12 மணிக்கு இன்னமும் 1 மணி நேரம் இருந்தது. அப்போதே அங்கே ஏராளமானோர் கூடியிருந்தனர். சிலர் தீப்பந்தங்களைப் பற்ற வைத்துக் கொண்டிருந்தனர். பூசாரிகள் சிலர் தென்பட்டனர்.
காத்திருந்தோம்…
நேரம் இரவு 11:55…
இதயம் திக்திக்கென்று வேக வேகமாக அடித்துக்கொண்டது. நான் முருகேசனின் கையை அனிச்சையாக இறுகப் பற்றியிருந்தேன். எனது கை இலேசாக நடுங்கிக் கொண்டிருந்தது.
திடீரென்று ஒருவர் வெறிபிடித்தவர் போல ஆ… ஊ… என்று அலறிக்கொண்டு ஓடிவந்தார். இருவருக்கும் தூக்கிவாரிப்போட்டுவிட்டது. அவருக்கு ஈடுகொடுத்தபடியே இரண்டு பக்கமும் அவரைப் பிடித்துக்கொண்டு சிலர் வந்தனர். திடீரென்று பம்பை மேளம் அதிரடியாக அடிக்கப்பட்டது. அந்த இடமே அச்சம் தருவதாக மாறிவிட்டது.
தேவையில்லாமல் வந்து விட்டோமோ என்று கூட தோன்றிவிட்டது. ’இங்கேயெல்லாம் சிறுவர்கள் வரக்கூடாது’ என்று பெரியவர்கள் சொன்னதும் நினைவில் மின்னல் போல் வந்துபோனது.
ஆடிக் கொண்டிருந்தவரிடம் ஒருவர் ஒரு பாட்டிலைக் கொடுத்தார். அவர் வாங்கி ஒரே மூச்சில் குடித்துவிட்டார். மற்றொருவர் ஒரு சட்டியைக் கையில் வைத்தபடி அவருக்கருகில் வந்தார்.
திடீரென்று வேட்டுச் சத்தம் கேட்டது.
அவ்வளவுதான்…
சாராயம் குடித்தவர் தன்னைப் பிடித்துக் கொண்டிருந்தவர்களையும் மீறித் திமிறிக்கொண்டு நடக்கத் தொடங்கினார். அனைவரும் ஒரே நேரத்தில் குலவையிட்டுக்கொண்டு அவரைத் தொடர்ந்தனர்.
நள்ளிரவு இருள்… தீப்பந்தங்களின் வெளிச்சம்… பூசாரியின் அலறல்… நடுநடுங்க வைக்கும் குலவைச் சத்தம்… வெடியோசை… எலும்புகளைத் துளைக்கும் மேளச்சத்தம்… அந்த சூழலில் யாராக இருந்தாலும் அச்சத்திலேயே மூச்சா போய்விடுவார்கள். நானும் போய்விட்டேன்.
அச்சமும், பீதியும் என்னை ஆட்டிப் படைத்தாலும் முருகேசனின் முதுகுக்கும் பின்னாலிருந்து விலகி நின்று, ஆவலில் நடப்பதைப் பார்க்கத் தவறவில்லை!
சட்டி நீட்டப்பட்டது! பூசாரி கையை உள்ளே விட்டார்! கறிச்சோற்றை அள்ளினார்! மூன்று பக்கமும் வீசினார்! நாங்கள் இருக்கும் பக்கமும் வீசினார்! நான் அனிச்சையாக என்மீது பட்டுவிடப்போகிறதோ என்று அஞ்சி விலகிக்கொண்டேன். அப்புறம்தான், சோறு தரையிலேயே விழாதே என்று மற்றவர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது.
ஆனால்… நான் நினைத்ததற்கு மாறாக என் மீதும் விழுந்தது! நிமிர்ந்து முருகேசனைப் பார்த்தேன். அவர் மீதும் விழுந்திருந்தது! அவரும் திகைத்துப் போய் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்! சில மணித்துளிகள் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தோம்!
சட்டென்று இருவருமே வெடித்துச் சிரித்துவிட்டோம்!
இதையெதையும் அறியாத, கறிச்சோறு வீசும் அந்தச் சடங்கு தொடர்ந்து முன்னேறிச் சென்று கொண்டிருந்தது.
வந்தது போலவே வீட்டுக்குத் திரும்பிச் சென்று படுத்துக் கொண்டேன்.
சந்தடி கேட்ட அம்மா, நான் மறுபடியும் மூச்சா கழிக்கச் சென்று வீட்டினுள் திரும்பி வருகிறேன் என்று எண்ணிக்கொண்டு, “வந்துட்டியா சாமி…” என்று முணுகியபடி திரும்பிப் படுத்துக்கொண்டார்.
அம்மா உடனடியாகத் தூங்கிவிட்டார்.
என் மூளை தூங்க மறுத்தாலும் தூக்கத்திடம் நான் பிடிபட்டுக் கொண்டேன்.
அலுப்பின் காரணமாக கண்கள் மெல்…ல…ச் சொருகியது…
தூங்கிவிட்டேன்!
நான் நேரில் சென்று பார்த்ததை நன்றாகச் சிந்தித்துப் பார்த்தபோது… எதற்காக இப்படிப் பொய் சொல்லி மக்களை மிரளச் செய்து ஏமாத்தணும்? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இது தலைமுறை தலைமுறையாக முன்னோர் சொன்னது, செய்தது என்று கூறிக் கொண்டு திரும்பத் திரும்பச் செய்து காப்பாற்றிக் கொண்டும் வருகிறார்களே என்று என் அப்பா உள்பட பெரியவர்கள் பலர் மீதும் எனக்குக் கோபமும் ஆத்திரமும் உண்டாயிற்று. அறிவு கொண்டு சிந்திக்கும்போது, எல்லாம் மூடநம்பிக்கை, முட்டாள்தனமான காரியங்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். புவியீர்ப்பு விசை என்று ஒன்றைப் பற்றி அறிவியல் பாடத்தில் படித்திருக்கிறோமே! பூமியிலிருந்து மேல் நோக்கி வீசினால் எதுவாயிருந்தாலும் கீழே வந்து தானே ஆகும். சாமியார் வீசுவதுமட்டும் எப்படி மேலேயே போய்க் கொண்டிருக்கும்? இரண்டு பக்கமும் இருட்டாக இருப்பதால் அந்தப் பக்கம் வீசப்பட்ட எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. அவ்வளவு தான்.
கறிச்சோறு மண்சோறு ஆனதுதான் மிச்சம்… பூத கணங்கள் சாப்பிடவில்லை என்று புரிந்துகொண்டேன். <