பறவைகள் அறிவோம் : இருவாச்சி
நாம் குடியிருக்கும் இல்லங்களைச் சுற்றி எத்தனையோ வகையான பறவைகள் உலா வருகின்றன. ஆனால் அவற்றை எல்லாம் நாம் கண்டும் காணாமலும் அவசர அவசரமாகச் சென்று கொண்டு இருக்கிறோம். நம் தாத்தா, பாட்டியிடம் சென்று உங்களுக்கு தெரிந்த பறவையின் பெயர்களைக் கூறுங்கள் என்றால் குறைந்த பட்சம் 50 பெயர்களைச் சொல்வார்கள். ஆனால், இன்றைய தலைமுறையினர் அய்ந்து அல்லது ஆறு பெயர்களைத் தான் சொல்வர். பின்னர் எங்களுக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டுச் செல்வார்கள். பறவைகளைப் பற்றிய அறியாமையே காரணம்.
இந்நிலையை நாம் மாற்ற வேண்டும். குறைந்த பட்சம் நம்மைச் சுற்றி வாழும் பறவைகளைப் பற்றியாவது நாம் தெரிந்துகொண்டால்தான் அடுத்த தலைமுறைகளுக்கும் நாம் கொண்டு செல்ல முடியும்.
மனிதர்கள் உதவி இல்லாமலேயே பறவைகள் வாழும். ஆனால், பறவைகள் இல்லாமல் மனிதன் வாழ முடியாது. டோடோ என்ற பறவை இனம் அழிந்ததன் காரணமாக மொரிசியஸ் தீவில் கல்வாரிமேஜர் எனும் தாவரம் அனைத்தும் அழிந்துவிட்டது என்றால் அது மிகையாகாது.
* ஆங்கிலத்தில் கிரேட் ஹார்ன்பில் (Great hornbill) என அழைக்கப்படும் பறவைதான் இருவாய்ச்சி என்பதாகும். ஹார்ன்பில் என்பது ஒரு வகையான மரமாகும். இந்த மரத்தில்தான் இப்பறவைகள் கூடுகட்டி வாழும்.
* நீளமான வளைந்த அலகைக் கொண்டுள்ள பறவை. அலகுக்கு மேல் தொப்பி போன்ற அமைப்பு கொண்ட ஒரு பகுதி உள்ளது. இதுதான் அழகுக்கே அழகு சேர்ப்பதுபோல் இருக்கும். சற்று தொலைவில் இருந்து பார்க்கும்போது இரண்டுவாய்கள் இருப்பதுபோல் தோன்றுவதால் இப்பறவைக்கு இருவாய்ச்சிப் பறவை எனப் பெயர் வந்தது.
* இது பக்கவாட்டில் கிளைக்குக் கிளை தாவிச் சென்று பழங்களை உண்ணும். இதன் நாக்கு சிறியதாக இருப்பதால் பழங்களைத் தூக்கிப்போட்டு அலகால் கவ்வி வாய்க்குள் தள்ளி விழுங்கும். இவற்றின் இறகு மிக நீண்டு கருமை மற்றும் வெள்ளை நிறங்களைக் கொண்டிருக்கும்.
* இரண்டு, மூன்று தடவை இறக்கையை அடித்தால் சிறிய அளவு உயரத்தில் கழுகைப் போல் எந்த அசைவும் இன்றி வானில் மிதக்கும் தன்மையுடையது.
* இருவாய்ச்சிப் பறவை எழுப்பும் ஓசை அரை கிலோ மீட்டர் தொலைவு வரை சத்தம் கேட்கும்.
* ஆண் பறவையின் சராசரி எடை ஏழு கிலோ பெண் பறவையின் சராசரி எடை 5-6 கிலோ. ஆண் பறவையின் விழிப்படலம் இரத்தச் சிவப்பாக இருக்கும். பெண் பறவையின் விழிப்படலம் நீல வெள்ளையாக இருக்கும். இவற்றின் முகம், முதுகு, உடலின் கீழ்ப்பகுதி, இறக்கைகள் ஆகியன கருப்பு நிறமாக இருக்கும். ஆல், அத்திப் பழங்கள், கொட்டைகள் மற்றும் பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும் அசைவப் பிரியராகும்.
இவற்றின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால் ஒருமுறை காதல் வயப்பட்டால், தான் சாகும்வரை இணைப் பறவையை விட்டு விலகாது.
மலை வாழ் மக்கள் திருமண வாழ்த்து தெரிவிக்கும்போது மணமக்களை “இருவாய்ச்சிப் பறவையோல் இணைபிரியாமல் வாழ்க” என்று கூறி வாழ்த்தும் அளவிற்குப் பெருமை கொண்டது. இவற்றின் இனப்பெருக்க காலத்தில் பெண் பறவை முட்டையிடும் பருவத்தில் ஆண் பறவையுடன் சேர்ந்து நல்ல உயரமான கிட்டதட்ட அறுபது அடி உயரத்தில் இருக்கும் மரத்தில் பொந்துகள் இருக்கின்றனவா என்று தேடி பறந்து திரிந்து, மரத்தை முதலில் தேர்ந்தெடுக்கும். அங்கே பெண் பறவை தங்கியிருக்கும். பெரும்பாலும் இந்த மரம் ஆறு, ஏரி, குளங்களின் அருகில் இருப்பதால் ஆண் பறவை அங்கு கரை ஓரத்தில் இருக்கும் களிமண்ணைத் தன்னுடைய அலகினால் கொத்திக்கொண்டு பறந்து வரும் போது வாயில் ஊறும் எச்சிலோடு சேர்த்து அந்தப் பொந்தை பெண் பறவைக்கு மூச்சுவிடவும் உணவு கொடுக்கவும் சிறிய துளையிருக்குமாறு அமைத்து முழுவதுமாக மூடிவிடும்.
தன்னுடைய இறக்கை முழுவதையும் தன்னைத்தானே கொத்திக் கொத்தி உதிர்த்து ஒரு மெத்தை போன்ற தளத்தை அமைத்து அதன்மேல் மூன்று அல்லது நான்கு முட்டைகள் இட்டு, சுமார் அய்ந்து வாரங்கள் வரை அடைகாத்து முட்டைகளைப் பொரித்துவிடும்.
“உள்ளிருந்து உடைத்தால் ஜனனம் வெளியிலிருந்து உடைத்தால் மரணம்’’ என்பது போல உள்ளிருந்து உடைத்துக்கொண்டு குஞ்சுகள் வெளிவரும். பெண் பறவை கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வரும் நாள் வரை ஆண் பறவை பெண் பறவைக்கும், தனது குஞ்சுகளுக்கும் தேவையான உணவுகளைத் தேடித் தேடிச் சென்று அத்திப் பழங்களையும் பல்லி, பூச்சிகள் போன்ற அசைவ உணவையும் கொண்டு வந்து கொடுக்கும்.
அன்பின் வெளிப்பாடாய் கடைசியாக கொடுக்கும் அத்தி பழத்தில் ஒன்று அல்லது இரண்டு பழங்களை கர்ப்ப காலத்தில் தனக்காகவும், குஞ்சுகளுக்காகவும் ஓடி, ஓடி இரை தேடிய கணவனுக்கு கொடுத்து மகிழும். இத்தகைய சிறப்பு மிக்கது இருவாய்ச்சிப் பறவை.
இன்றைய பறவையியல் ஆய்வாளர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் டாக்டர் சலீம் அலி.
அவர்தம் வாழ்நாள் முழுவதும் பறவைகளைப் பற்றிய ஆராய்ச்சி செய்வதிலும், அவற்றைப் படம் பிடித்து மகிழ்வதிலுமே தன் வாழ்நாளைச் செலவழித்தார். அதனால் அவர்
‘இந்தியாவின் பறவை மனிதர்’
என்று அழைக்கப்பட்டார்.