உலகு சூழ் ஆழி – 10
– மு.நீ.சிவராசன்
இந்தியப் பெருங்கடல் – 3
சேஷெல்ஸ் தீவுகள் :
இவை விடுதலைப் பெற்ற ஓர் ஆப்பிரிக்க நாடு ஆகும். மடகாஸ்கருக்கு வடகிழக்கே அமைந்துள்ள தீவுகள் இவை. 115 தீவுகளில் 32 தீவுகளில் பெரும்பாலான மக்கள் வாழ்கின்றனர். அவை கிரேனைட் பாறைகளால் ஆனது. மற்றவை பவளப் பாறைகளாலான தாழ்ந்த நிலப்பகுதியாகும்.
தலைநகரம் : விக்டோரியா
பரப்பு : 455 ச.கி.மீ.
மக்கள் தொகை : 79,300
மொழிகள் : கிரியோல், ஆங்கிலம், பிரெஞ்சு
மதம் : கிறித்துவம்
நாணயம் : சேஷெல்ஸ் ரூபாய்
காடுவாழ் விலங்குகள்:
இத்தீவுகள் பிற நிலப்பகுதியினின்று தனித்து இருப்பதால், இங்கு தனித்த (Unique) விலங்குகளும், தாவர வகைகளும் உள்ளன. இங்கு வளரும் கோ–கோ மரத்தில் உலகிலேயே நிறைமிகுந்த தோடுகொண்ட விதைகள் காய்க்கின்றன. பல வண்ண மலர்ச்செடிகளும் இங்கு வளருகின்றன (Orchid). உருவில் பெரிய ஆமைகளும், பல்லிகளும், பச்சோந்திகளும், பழம்தின்னி வவ்வால்களும் இங்கு காணப்படுகின்றன. இவைகளைப் பாதுகாக்க பல்வேறு வனப்பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மக்கள்: இங்கு ஆப்பிரிக்க – அய்ரோப்பிய கலப்பின மக்கள் வாழ்கின்றனர். 90 விழுக்காடு மக்கள் மாஹே தீவில் (Mahe) வாழ்கின்றனர். ஆப்பிரிக்காவிலேயே இவர்கள் செல்வம் மிகுந்தவர்களாக இருக்கின்றனர். இங்கிருந்து தேயிலை, தென்னைக் கொப்பரை, மீன்கள் ஏற்றுமதியாகின்றன. ஆயினும். சுற்றுலாத்துறை மூலமே இங்கு பெருத்த வருமானம் ஈட்டப்படுகிறது.
பிற தீவுகள்:
பிற தீவுகள் பெரும்பாலும் மிகச் சிறியவையே. அல்டாப்ரா (Aldabra) தீவுகளில் இப்பொழுதும் பேருரு உள்ள ஆமைகள் வலம் வருகின்றன.
ஜாவா அருகிலுள்ள கிறிஸ்மஸ் தீவு 1643இல் கிறிஸ்மஸ் நாளில் பிரிட்டனின் கடல் பயணி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. ரீ-யூனியன் தீவு ஃபிரான்சின் ஆளுகைக்குட்பட்டது. 2,510 ச.கிலோமீட்டர் கொண்ட இத்தீவில் வாழும் 7,28,400 மக்களுள் பெரும்பாலானவர்கள் பிரெஞ்சு இனத்தவரே.
மீன்பிடித் தொழில்:
இப்பெருங்கடலின் கரையோரங் களிலேயே மீன்கள் அதிகமாகக் கிடைப்பதால் இத்தீவுகளைச் சுற்றியுள்ள ஆழம் குறைவான கடல்பகுதியில் அதிகமான மீன்கள் கிடைப்பதில்லை. தற்பொழுது சில பகுதிகளில் மீன்கள் வளர்க்கப்பட்டு, மீன்பிடித்தொழில் நடைபெறுகிறது.