கடல் குதிரை
கடலில் வாழும் ஆயிரக்கணக்கான மீன்வகைகளுள் கடல் குதிரையும் ஒன்று. இது, நிமிர்ந்து நின்று நீந்துவதால் பார்ப்பதற்கு மீனைப்போல இருக்காது. இதன் முகம் குதிரையின் முகம் போல இருப்பதால் இந்த மீன் கடல் குதிரை என்ற பெயரினைப் பெற்றது.
கடல் குதிரையின் உடல் முழுவதும் தடிமனான செதில்களால் மூடப்பட்டிருக்கும். முதுகின்மேல் ஒரு சிறிய தோல் போன்ற துடுப்பு வளர்ந்திருக்கும். இந்தத் துடுப்புதான் கடல் குதிரை நீந்துவதற்கு உதவுகிறது. இதன் வால் பகுதி நீண்டு சுருண்டு இருக்கும். வாலின் உதவியால் நீர்த் தாவரங்களைப் பற்றிக்கொண்டு நிற்கும்.
ஆண் கடல் குதிரையின் உடலில் ஒரு சிறிய தோல் பை வளர்ந்திருக்கும். பெண் கடல் குதிரை அந்தப் பைக்குள் முட்டையிடும். முட்டையிலிருந்து குஞ்சுகள் பிறந்து பைக்குள்ளேயே வளரும். பிறகு, இரை தேட வெளியே வரும்.
கடல் குதிரைகளில் 50 வகைகள் உள்ளன. இவற்றுள் சில 30 செ.மீ. நீளம் வரை வளரும். புழு, பூச்சி, மீன், முட்டை ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன. வெப்ப மண்டலக் கடல்களில் கடல் குதிரைகள் காணப்படுகின்றன. கு.மீனா, விளாத்திகுளம்