காஸ்கர் குகையில் ஓவியங்கள் எப்படி?
அறிவியல் யுகத்தில் புதுமையையும், அடுத்தடுத்த கண்டுபிடிப்புகளையும் தேடி ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருந்தாலும், எங்காவது ஓரிடத்தில் நின்று வரலாற்றின் தொன்மையையும், அந்தத் தொன்மையில் ஆச்சரியம் நிறைந்த பலவற்றையும் அவ்வப்போது திரும்பிப் பார்க்கவே செய்கிறோம். அதில் ஓர் அலாதி விருப்பம் நமக்கு உண்டு.
உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் செழுமையான கட்டமைப்புகள், பழைமையான கோட்டைகள், பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஓவியங்கள், பழங்காலத்துப் பொருள்கள் என எதையோ ஒன்றை மீட்டெடுத்துக் கொண்டே வருகின்றனர் வரலாற்று ஆய்வாளர்களும், தொல்லியல் நிபுணர்களும். அவ்வாறு மீட்டெடுக்கப்படும் தொன்மைச் சான்றுகள் யாவும் வீரம் நிறைந்த வாழ்க்கை முறைகளையும், கலை நுணுக்கம் வாய்ந்த கட்டடத் திறனையும், ஒப்பில்லா ஓவியக்கலையையும், நிகரற்ற காதல் கதைகளையும் நமக்கு உணர்த்தி வருகின்றன.
சில நேரங்களில் அவற்றின் நுணுக்கங்களைக் கண்டு நாம் வியக்கிறோம். அல்லது எப்படி இது செய்யப்பட்டது. என்பதை அறியாமலும் வியக்கிறோம். அவற்றுள் ஒரு சில இனி.!
காஸ்கர் குகை (Cosquer Cave):
பிரான்சின் மார்சேயில் (Marsille) உள்ள கேப் மோர்ஜியாவில் அமைந்துள்ள காஸ்கர் குகை, கடல் மட்டத்திலிருந்து சுமார் 37 மீ (121 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. அதன் நுழைவாயில் நீருக்கடியில் சுமார் 37 மீ (121 அடி) ஆழத்தில் அமைந்துள்ளது. நீருக்கடியில் உள்ள இந்த நுழைவாயில் வழியாகத் தான் நாம் இன்று குகைக்குள் செல்ல முடியும்.
ஆனால் அந்தக் குகையில் சுமார் 600 ஓவியங்களும் வேலைப்பாடுளும் உள்ளன. குதிரைகள், காட்டெருமை, அய்பெக்ஸ் முத்திரைகள் போன்ற விலங்குகள், அத்துடன் ஏராளமான கைரேகைப் பதிவுகள் இருக்கின்றன. இந்த கலைப் படைப்புகள் கற்காலத்தில் இப்பகுதியில் வசித்த மக்களால் உருவாக்கப்பட்டவை.
கடலுக்கு அடியில் இருந்துதான் நுழைய முடியும் என்றால் அந்தக் காலத்தில் எப்படி இதனுள் சென்று படம் வரைந்திருப்பார்கள்? தண்ணீருக்கு அடியில் இப்படி ஒரு குகை இருக்கிறது என்று ஆதி மனிதர்களுக்கு தெரியும்? என்று ஒரு கேள்வி எழலாம். வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் கடல் மட்டம் இந்தக் குகையின் நுழை வாயிலுக்கும் கீழே இருந்திருக்கும். இதனால் கீழிலிருந்து குகைக்குள் ஏறி இருப்பார்கள். அதற்கு டைவிங் நீச்சல் கருவிகள் தேவை இல்லை அல்லவா?. அப்போது இப் படங்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம். அதன் பின்னர் கடல் மட்டம் கூடியுள்ளது.
(இன்னும் ஏராளம் இருக்கு)