அக்பர்,சீதா மற்றும் சிலர்
விழியன்
அதோ அந்தச் சிங்கத்துக்கு என்னப்பா பேரு வெச்சிருக்கீங்க?”
”சீதா”
சிங்கம் சீதாவை சென்ற வாரம்தான் காட்டில் பிடித்தார்கள். சீதாவைப் பிடித்ததை மிகவும் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தனர். “வழக்கமாகச் சிங்கம் எல்லாம் எளிதில் பிடிபடாது. இது அபூர்வம்தான்”. வனவிலங்கு சரணாலயத்திற்கு சீதா அழைத்து வரப்பட்டது. காட்டில் வளர்ந்த சிங்கம் என்பதால் கொஞ்சம் உக்கிரமாக இருக்கும். ஆகவே அதனிடம் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருந்தார்கள். அதே சரணாலயத்தில் அக்பர் என்ற சிங்கமும் இருந்தது. அது பிறந்ததே சரணாலயத்தில்தான். காட்டையே பார்த்ததில்லை. அதனுடைய பெற்றோரிடம் இருந்து பிரித்துச் சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே அழைத்து வந்துவிட்டனர்.
சீதாவிற்கும் அக்பருக்கும் ஒரே வசிப்பிடம்தான். கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரே வயது. சீதாவிற்கு சரணாலய வாழ்க்கை பிடிபடச் சிரமமாய் இருந்தது. அதென்ன வேட்டையாடாமல் சாப்பிடுவது? அதென்ன நேரத்திற்குச் சாப்பாடு? அதென்ன குறிப்பிட்ட நேரத்திற்கு உறக்கம்? எனக் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தது.
அக்பருக்கும் காடு எப்படி இருக்கும் என்ற சந்தேகம். நாமே வேட்டையாடவேண்டுமா? நாமே உணவினை விருப்பமான நேரத்தில் சாப்பிடலாமா? காடு முழுக்க சுதந்திரமாகச் சுற்றலாமா? கேட்கவே ஆனந்தமாக இருக்கே என்றது அக்பர்.
காலை, மதியம், இரவு என ஓயாமல் இருவரும் அவர்கள் மொழியில் பேசிக்கொண்டே இருந்தனர். “இங்கிருந்து சீக்கிரம் தப்பிக்கணும்” என அடிக்கடி சீதா சிங்கம் சொல்லிக்கொண்டே இருக்கும். “அதெல்லாம் சாத்தியமில்லை’’ என அக்பர் சிங்கம் சொல்லும்.
இவர்களின் வசிப்பிடத்திற்குப் பக்கத்தில் ஒரு மனிதக்குரங்கு. ஆனால், ஒரே இடத்தில் இருந்தால் மட்டுமே இருவரும் சந்திக்க முடியும். தூரத்தில் குறிப்பிட்ட நேரத்தில் பார்வையாளர்களாக மனிதர்கள் வருவார்கள். சிங்கங்களின் வசிப்பிடத்திற்கு அருகே எந்தப் பறவையும் வரவில்லை. ஒரே ஒரு கழுகு மட்டுமே வந்தது. சீதா மட்டும் அதோடு பேசும்.
“இங்கிருந்து காடு எவ்வளவு தூரம்?”
“சரணாலயத்தில் இருந்து அது எவ்வளவு தூரம்?”
“இங்கிருந்து தப்பிக்க என்ன வழி?”
“யார் உதவுவார்கள்?”
இந்தக் கேள்விகளை எல்லாம் கேட்டு அக்பர் மிரண்டுவிட்டது. ”இங்கிருந்து தப்பித்துப் போக முடியாது” என்று சொல்லும். சில சமயம் தப்பித்துப் போகச் சம்மதிக்கும். “காட்டுக்குப் போனால் எனக்கு வேட்டையாடச் சொல்லித்தருவியா?” “எனக்கு வேகமாக ஓடச் சொல்லித்தருவியா?” என்று கேட்கும். சரணாலயத்தில் இருந்து தப்பிக்க என்ன வழி என்று கழுகு ஆலோசனை சொல்லும். இவர்கள் வசிப்பிடத்துக்கு 10 அடி தூரத்தில் ஒரு கிணறு உள்ளது. ஒரே ஒருவர் சாப்பாடு போட வருவார். மற்றவர்கள் வருவது சிரமம். கிணற்றைச் சுற்றிலும் மிக உயரமான சுவர். கிணற்றில் விழுந்துவிட்டாலும் ஏறிவருவது சிரமம். ஆனாலும் சீதா நம்பிக்கையைக் கைவிடவில்லை.
அந்த ஊரில் கடுமையான புயல் எச்சரிக்கை. சரணாலயத்திற்கு விடுமுறை. பார்வையாளர்கள் யாரும் வரவில்லை. கூண்டுக்குள் இருந்து இருவரும் வெளியே வரவில்லை. வெளியே வந்தால் வெட்டவெளி மட்டுமே. விடாமல் மழையும் பெய்தது. திடீரெனக் கழுகு நண்பன் கூண்டுக்கு அருகே வந்தது. கூண்டு திறந்துதான் இருந்தது.
“என்ன இப்படி மழையில் நனைந்துகொண்டு?” என்று வினவியது சீதா சிங்கம்.
“நீங்க தப்பிச்சிப் போக ஒரு வாய்ப்புக் கிடைச்சிருக்கு. புயலால் ஒரு பெரிய மரம் மிகச்சரியாகச் கிணற்றுக்குக் குறுக்கே விழுந்து இருந்தது. அது ஒரு பாலம் போல அமைஞ்சிருக்கு. மரத்தின் ஒரு முனையில் ஏறி மெதுவாகச் சென்றால் வெளியே சென்றுவிடலாம். அங்கிருந்து இன்னும் கொஞ்ச தூரத்தில் சரணாலயத்தை விட்டு வெளியே போய்விடலாம். சில கிலோ மீட்டர் தூரத்தில் மலையும் அதன் மீது ஏறி இறங்கினால் அந்தப் பக்கம் பெரிய காடும் உள்ளது என்றது கழுகு.
“வா..கிளம்பு” என்றது சீதா சிங்கம். கொஞ்சம் தயக்கத்துடனே கிளம்பியது அக்பர் சிங்கம். மரத்தின் மீது கவனமாக ஏறி மறுமுனையில் இறங்கியது சீதா. அக்பர் பயந்தது. அதன் முதுகில் கழுகு அமர்ந்து “ஓர் அடி எடுத்து வை; இன்னோர் அடி வைக்கிறப்ப நேராகப் பார்” என உற்சாகப்படுத்தி வழிநடத்தியது. அவ்வளவுதான் இருவரும் கடந்துவிட்டனர். மனிதக்குரங்கு வெளியே வந்து இருவரையும் பார்த்து தூரத்தில் இருந்து ‘டாடா’ காட்டி கை அசைத்தது.
சரணாலயத்திற்கு வெளியே வந்துவிட்டனர். நல்ல இருட்டு. தூரத்து இடி முழக்கம், ‘சோ’வென மழைச் சத்தம்.
“ஓடு!”
“எனக்கு ஓட வருமா?”
“அட… வா” என சீதா வேகமாக ஓட அக்பரும் பின் தொடர்ந்து ஓடியது. வேகம்… வேகம்… வேகம்.. அக்பருக்கு இந்தச் சுதந்திரம் புதிதாக இருந்தது. கண்களில் கண்ணீரும் வந்துவிட்டது. ஓடி ஓடி ஒரு வழியாக மலையை அடைந்தன. வழிகாட்டிய கழுகுக்கும் தான் வெற்றி பெற்றது போன்ற உணர்வு.
கடைசிவரை அக்பர் சிங்கத்திற்கும் அதன் பெயர் அக்பர் என்று தெரியாது. சீதா சிங்கத்திற்கும் அதன் பெயர் சீதா என்று தெரியாது. ஆனால் அவற்றுக்குப் பிறந்த சிங்கக்குட்டிகளின் பெயர்கள் சீசா, பூசா, காசா என்று அவற்றுக்குத் தெரியும்..<