விடுமுறைச் சுற்றுலாவில் விழிப்போடு இருங்கள்!
சிகரம்
மனித வாழ்வில் ஓய்வு என்பது எப்போதும் இல்லை. எல்லா நேரமும் நாம் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். நமக்கு ஓய்வு என்பது தொடர்ந்து செய்யும் வேலையிலிருந்து புதிய, பிடித்தமான ஒன்றைச் செய்வதுதான். ஓய்வு எடுக்கிறேன் என்பது யாரும் அசையாது கண்ணை மூடிக்கொண்டு கம்மென்று இருப்பது அல்ல.
புதிய ஒன்றுக்கு நாம் மாறும் போது நமக்கு ஒரு புத்துணர்ச்சி, இளைப்பாறல் ஏற்படுகிறது. மனம் மகிழ்ச்சியடைகிறது. பாடப் புத்தகம் படிப்பதிலிருந்து, கதைப் புத்தகம் படிப்பது; படிப்பிற்குப் பின் சிறிது நேரம் விளையாடுவது; பள்ளிக்குச் சென்று அதன் பின் நண்பர்களோடு மகிழ்வாக உரையாடுவது. இவையெல்லாம் மனதிற்கு ஒரு மடைமாற்றங்கள்!
அப்படித்தான் கோடை விடுமுறையில் சுற்றலா செல்வதும், மனதிற்கு ஒரு மடைமாற்றம். பள்ளி, பாடம், வகுப்பு, தேர்வு என்று கல்வி நிலையத்திலும், வீட்டிலும் சுழன்ற நிலையில் வெளியூர்களுக்கு, புதிய இடங்களுக்கு நண்பர்களுடன் அல்லது குடும்பத்தவருடன் சுற்றுலாச் செல்வது மாணவர்களுக்கு பிடித்தமானது, மகிழ்வானது, உற்சாகம் தருவது ஆகும். கோடை விடுமுறை நெருங்குவதால் இதைப் பற்றிச் சிலவற்றை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு வெளியூர்களுக்குச் சுற்றுலா செல்லும் போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை.
மருத்துவ ஆலோசனை: உடல் நலப் பிரச்சினை ஏதாவது இருப்பின் அவர்கள் மருத்துவரிடம் காட்டி, சுற்றுலா சென்றுவர உடல்நிலை தகுதியோடு இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நலக்குறைவு ஏதாவது இருப்பின் அதற்குரிய மருந்துகளை மருத்துவரிடம் பெற்றுக் கொண்டு, அதைச் சுற்றுலா செல்லும் போது கையுடன் கொண்டு செல்ல வேண்டும். மருத்துவருடைய தொலைப்பேசி எண்ணையும் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும் அல்லது செல்போனில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தீ மூட்டக்கூடாது. வெய்யில் காலங்களில் காட்டுத் தீ ஏற்படவும் விரைந்து பரவவும் வாய்ப்பு உண்டு.
பயணத்திற்குத் தேவையான பொருட்கள்: சுற்றுலா எத்தனை நாட்களுக்குச் செல்கிறோம் என்பதற்கு ஏற்ப தேவையான ஆடைகள், சோப்பு, எண்ணெய், பல் துலக்கும் பொருள்களைப் பெட்டியில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டும். வீட்டிலே செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகளைத் தேவையான அளவு எடுத்துக் கொண்டு செல்லலாம்.
உணவு: உணவு, குடிநீர் போன்றவை தூய்மையாகக் கிடைக்கும் உணவு விடுதிகளைத் தேர்வு செய்து, உடலுக்கு ஏற்ற உணவுகளை உண்ண வேண்டும். வாய் ருசிக்கு முன்னுரிமை தராமல், உடல் நலத்திற்கு முன்னுரிமை தந்து உண்ண வேண்டும். குறிப்பாக, வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் உணவுகளையும், சளிப் பிடிக்கும் உணவுகளையும் தவிர்த்தல் வேண்டும். இதில் சுற்றுலா அமைப்பாளர்களும், பெற்றோரும் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.
கட்டுப்பாடின்றிக் கண்டபடி வேறெங்கும் தனியே செல்லக்கூடாது: சுற்றுலா சென்று திரும்பும் வரை சுற்றுலாப் பொறுப்பாளர்களின் அறிவுரைப்படியும், வழிகாட்டலின்படியும் நடந்து கொள்ள வேண்டும். கட்டுப்பாடின்றி உங்கள் விருப்பப்படி புதிய இடங்களில் தனிமையில் செல்லக் கூடாது. பொறுப்பாளர்களின் கண்காணிப்பிலே தான் நீங்கள் இருக்க வேண்டும்.
விபத்துப் பகுதிகளில் விழிப்போடு இருக்கவேண்டும்: மலைச் சரிவுகள், நீர் நிலைகள், ஆறுகள், அருவிகள், காடுகள், மின் இணைப்புகள் போன்றவற்றில் விழிப்பும், எச்சரிக்கையும், கவனமும் கட்டாயம்.
புதிய இடங்களில் நீர்நிலைகள் எவ்வளவு ஆழம் இருக்கும்? நீரின் விசை, இழுப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை நன்கு அறியாமல் நீரில் இறங்குவது ஆபத்தானது.
நீச்சல் தெரிந்தவர்கள் கூட புதிய இடங்களில் இவற்றில் விழிப்புடன் இருக்க வேண்டும். கடல் பகுதியாயின் அனைவரும் கணுக்கால் அளவு நீரில் தான் விளையாட வேண்டும். முழங்கால் அளவு நீருக்கு மேல் கடலில் இறங்குவது உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் என்பதை ஆழமாக மனதிற்கொண்டு எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். படகுப் பயணம் செய்யும் போது, உரிய எண்ணிக்கையில் மட்டுமே படகில் ஏறவேண்டும். அளவிற்கு அதிகமாகப் படகில் ஏறுவது உயிருக்கு இழப்பாய் முடியும். படகு செலுத்துவோர் வழங்கும் பாதுகாப்பு ஆடைகளை அவசியம் அணிந்து கொள்ள வேண்டும்.
மலைச் சரிவுகள்: சுற்றுலா செல்வோர் மலைச்சரிவு, பள்ளத்தாக்குப் பகுதிகளில் மிகவும் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். பள்ளத்தாக்கில், மலைச்சரிவில், விளிம்புப் பகுதிக்குச் செல்லக்கூடாது. சற்று சறுக்கினாலும் ஆயிரம் அடிக்குமேல் உள்ள பள்ளத்தில் விழுந்து அல்லது பாறைகளில் மோதிச் சிதறி இறக்க நேரிடும் என்ற உண்மையைப் புரிந்து நடக்க வேண்டும்.
மலைக்குகை, பள்ளத்தாக்கு: ‘குணா குகை’ என்று அண்மையில் பரபரப்பாகப் பேசப்படும் மலைப்-பகுதிகள் போன்றவற்றில் மிகவும் எச்சரிக்கையுடன் செல்லவேண்டும். ‘செல்லக்கூடாது’ என்று தடை செய்யப்பட்ட பகுதிகளில் கண்டிப்பாகச் செல்லக்கூடாது. இளம் வயதில், செல்லக் கூடாத இடங்களுக்குச் செல்வதில் ஒரு நாட்டம் வரும். அது தப்பான விருப்பம் என்பதைப் புரிந்து, அது போன்ற செயல்களைச் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
காடுகள்: காட்டுப் பகுதிகளுக்குச் செல்லும்போது, கொடிய விலங்குகளின் எதிர்பாராத தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புண்டு. எனவே, அதுபோன்ற பகுதிகளுக்குச் செல்லும்போது, உரிய பாதுகாப்புடன் செல்ல வேண்டும். வாகனங்களை விட்டு இறங்கக் கூடாத பகுதிகளில் இறங்கி நடத்தல் கூடாது. அது போன்ற இடங்களில் வாகனத்தில் இருந்தபடியே பார்க்க வேண்டும்.
அருவிகள்: அருவிகளில் குளிக்கச்செல்லும் போது, போதிய தடுப்புகள் இருக்கின்றனவா என்பதை நன்கு அறிந்து செல்ல வேண்டும். அருவிப் பகுதிகளில் உள்ள பாறைகளில் பாசி அதிக அளவில் படிந்திருக்கும் என்பதால், மிகக் கவனமுடன் சென்று குளிக்க வேண்டும். தடுப்புகளைத் தாண்டிச் செல்ல ஒருபோதும் முற்படக் கூடாது.
அருங்காட்சியகங்கள்: அரிய பொருட்கள் சேர்த்து காட்சிப்படுத்தப்பட்டுள்ள இடங்களுக்குச் செல்லும்போது, கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். ‘தொடக்கூடாது’ என்று கூறப்பட்டுள்ள பொருட்களைத் தொடாமல் பார்க்க வேண்டும். அரிய பொருள்கள் சேதம் அடைந்தால் மீண்டும் கிடைக்காது. எனவே, சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
மின் இணைப்புகள்: புதிய இடங்களில் மின் இணைப்புகளைச் சரியாகக் கையாள வேண்டும். போதிய அனுபவம், புரிதல் இன்றி அவற்றைப் பயன்படுத்தக்கூடாது. மின் கம்பிகள் செல்லக்கூடிய இடங்களுக்கு அருகில் செல்லக் கூடாது.
பொதுச்சொத்துகளைச் சேதம் செய்தல் கூடாது:
சுற்றுலா செல்லும் இடங்களில் நினைத்தபடி கிறுக்குதல், எழுதுதல், படம் வரைதல் கூடாது. பொருட்களைச் சேதப்படுத்தவும் கூடாது. தெரியாமல் எடுத்துவர முயற்சிக்கக் கூடாது.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு சுற்றுலாவைக் கழித்தால் அது இனிய சுற்றுலாவாக இருக்கும். பாதுகாப்பாகவும் இருக்கும்! சென்று வருக!!