சிறார் கதை : கல்லாங்குழி
பள்ளி விடுமுறை என்றாலே கவிக்குக் கொண்டாட்டம் தான். அதுவும் பள்ளியில் கோடை விடுமுறை விட்டாச்சுன்னா சொல்லவா வேண்டும்? விடுமுறை நாட்களை எல்லாம் விளையாடியே தீர்த்து விட வேண்டும் என்று நினைத்திருந்தான்.
மதிய நேரத்தில் கடைக்குப் போகச் சொன்னால் கூட ‘வெயிலில் போகமாட்டேன்’ என்று தப்பித்துக் கொள்பவன், ஆனால், விளையாட்டு என வந்துவிட்டால் வெயில் எல்லாம் அவனுக்குத் தெரிவதே இல்லை.
கவி பழையூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறான். அவனுக்குக் கிரிக்கெட் என்றால் உயிர். பள்ளியில் உள்ள கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளான்.
முன்பே திட்டமிட்டபடி நண்பர்களோடு காலையிலேயே ஊருக்கு வடக்கே உள்ள காட்டுப்பகுதிக்கு விளையாடச் சென்று விட்டான்.
ஒவ்வொரு ஆட்டம் முடிந்ததும் அங்குள்ள ஆலமரத்தடியில் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் விளையாடுவார்கள்.
இது இரண்டாவது ஆட்டம். கவியும் அவனது குழுவும் இம்முறை பந்து வீசுவதைத் தேர்வு செய்திருந்தார்கள். கவி மைதானத்தின் எல்லைக் கோட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்தான். கனி வேகமாகப் பந்தை அடிக்க கவியை நோக்கிப் பறந்து வந்தது. பந்து வர வர அதைப் பிடிக்க தனது இரண்டு கைகளையும் குவித்து பந்தின் திசை நோக்கிப் பின்புறமாக வந்து கொண்டிருந்தான். எட்டிப் பிடிக்க முயல்கையில் விரல் நுனியில் பட்டு பந்து தவறிவிட்டது.
கீழே விழுந்த பந்து வேகமாக பக்கத்தில் இருந்த புதருக்குள் விழுந்து விட்டது. பந்தைத் தேடி எடுத்துத் திரும்பிய போது கவியின் வலது காலின் பெருவிரல் அங்கிருந்த சிறு குழியில் பட்டு கீழே விழப் பார்த்தான்.
ஒரு வழியாக சமாளித்து நடக்க முற்பட்டான், அப்போது இதே போன்று இன்னும் சிறு சிறு குழிகள் நிறைய இருப்பதைக் கவனித்தான்.
அதற்குள் இன்னும் சிலர் பந்தைத் தேடி எடுக்க அங்கு வந்துவிட்டனர். கவியோடு சேர்ந்து அவர்களும் அங்கிருந்த செடிகொடிகளை அகற்ற அதனுள் இருந்த பெரிய பாறை முழுமையாகத் தென்பட்டது. இவர்கள் இங்கு கூட்டமாக இருப்பதைப் பார்த்த மற்றவர்களும் அங்கு விரைந்து வந்து கூடிவிட்டனர்.
அந்தப் பாறையின் மீது இருந்த செடிகொடிகளை முழுமையாக அகற்றிவிட்டுப் பார்த்தால், பாறை முழுக்க சிறு சிறு குழிகள் இருந்தன. அதைப் பார்த்த அவர்களுக்கு ஒரே வியப்பு! ‘இது என்ன குழியாக இருக்கும்; இதை யார் வெட்டி வைத்திருப்பார்கள்’ என ஒருவரை ஒருவர் மற்றி மற்றிக் கேட்டுக் கொண்டனர்.
இதற்கிடையில் பக்கத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு பாட்டி அங்கு வந்து சேர்ந்தார்.
“என்னாச்சு, எல்லோரும் கூட்டமாக இருக்கீங்க”
“இந்தப் பாறை மீது சிறு சிறு குழிகள் நிறைய இருக்குல்ல, அதுதான் என்னான்னு பார்த்துக் கொண்டிருக்கிறோம் பாட்டி” என்றான் கவி.
“இதுவா! நான் சின்ன வயசா இருக்கும் போது இந்தக் குழிகளில் தான் ஊர் மக்களெல்லாம் ஒன்று கூடி மாலை நேரம் விளக்கேற்றுவோம்” என்றார்.
“அப்படீன்னா இது விளக்கு ஏற்றும் குழியா?, அப்போ இந்தக் குழிகள் ரொம்பக் காலமா இருக்கா பாட்டி?” என்றான் கனி.
“எங்க அம்மா, பாட்டி காலத்துல இருந்து இருக்கு” என்றார் பாட்டி.
கல்வெட்டுகள், நடுகற்களைப் பற்றி ஆராய்வதில் ஆர்வமுடைய கவிக்குப் பாட்டியின் பதில்கள் வியப்பை ஏற்படுத்தின. இது விளக்கேற்றும் வெறும் குழிகள் மட்டும் அல்ல, இதன் பின்னால் பெரிய வரலாறு இருக்கக் கூடும் என யோசித்த கவி, தொல்லியல் ஆய்வாளரான மாணிக்கம் அவர்களிடம் இதுபற்றிக் கேட்கலாம் என முடிவெடுத்தான்.
நண்பர்களோடு விரைந்து சென்று மாணிக்கம் அவர்களைக் கூட்டி வந்தான். பாறைகளையும் அதன் மீது இருந்த வட்ட வடிவிலான சிறு சிறு குழிகளையும் பார்த்த அவர் வியந்து போனார். சிறிது நேர ஆய்வுக்குப் பின் “இவைதான் கல்லாங்குழிகள்” என்றார்.
“அது என்ன கல்லாங்குழி? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் அய்யா!” என்றான் கனி.
“இவை எல்லாம் ஹோமோ எரக்ட்ஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்ட குழிகள்” என்றார்.
“அவங்க யார் சார் அந்த ஹோமோ எரக்ட்ஸ் மனிதர்கள்?” என்று கேட்டான் பாலு.
“தற்போது வாழும் மனிதர்களை ஹோமோ சேப்பியன்ஸ் என்றும், நமக்கு முன்பு முதன் முதலில் நிமிர்ந்து நடக்கத் தொடங்கிய மனித இனத்தை ஹோமோ எரக்ட்ஸ் என்றும் கூறுவார்கள்” என விளக்கினார்.
“அவர்களுக்கும், இந்தக் குழிகளுக்கும் என்ன தொடர்பு அய்யா” என்றான் பாலு.
“கல்லாங்குழிகளை தகவல் பரிமாற்றத்துக்காக ஹோமோ எரக்ட்ஸ் மனிதர்கள் உருவாக்கி இருக்கக் கூடும், மேலும் இதன்மூலம் தாங்கள் வாழ்ந்ததை அடுத்த தலைமுறைக்குச் சொல்ல முயற்சி செய்திருப்பார்கள்” என்றார்.
இந்தத் தகவல்கள் அங்கிருந்தவர்களுக்குப் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இந்தச் சிறு குழிகளில் இத்தனைச் செய்திகள் அடங்கியிருப்-பதை எண்ணித் திகைத்துப் போனார்கள்.
இதற்கிடையில் பாறையின் மீதிருந்த குழிகளை கவி எண்ணிவிட்டான். மொத்தம் 191 குழிகள் இருந்தன. இதில் என்ன வியப்பென்றால், பெரிய குழி ஒன்றும் அதைச்சுற்றிலும் எட்டு முதல் பத்து சிறு சிறு குழிகளும் இருந்தன.
அவ்விடத்தை விட்டுச் செல்ல யாருக்கும் மனம் வரவில்லை, தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருந்தனர்.
“இந்தக் கல்லாங்குழிகளுக்கு எத்தனை வயசிருக்கும அய்யா” என்றான் மோகன்.
“இவற்றுக்கு குறைந்தது இரண்டு முதல் மூன்று லட்சம் வயதிருக்கும்” என்றார்.
‘என்னது!, இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதா!’ எனத் திகைத்து நின்றனர். இதைக் கேட்ட ஆடு மேய்க்கும் பாட்டி இன்னும் திகைத்துப் போனார்.
“இதற்கு முன்பு இதுபோல் கல்லாங்குழிகள் எங்காவது கிடைத்திருக்கின்றனவா” என்றான் அய்யாசாமி.
“உலகின் பல இடங்களில் இது போன்ற கல்லாங்குழிகள் கிடைத்திருக்கின்றன. தென்னாப்பிரிக்காவில் கிடைத்த கல்லாங்குழிகள் 4 லட்சம் ஆண்டுகளும், மத்திய பிரதேசத்தில் கிடைத்த கல்லாங்குழிகள் 7 லட்சம் ஆண்டுகளும் பழமையானவை” என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், “திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, தருமபுரி, கிருட்டிணகிரி, பழனி போன்ற இடங்களிலும் கல்லாங்குழிகள் கண்டுபிடிக்கப்-பட்டிருக்கின்றன” என்று விளக்கினார்.
“அப்படியென்றால் நம் ஊரிலும் ஹோமோ எரக்ட்ஸ் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்” என்று பெருமையாகச் சொன்னான் பாலு.
இந்தச் செய்திகளை எல்லாம் முறையாக அரசுக்குத் தெரிவித்து, இந்த இடத்தைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க ஆவண செய்வதாகக் கூறி விடைபெற்றார் தொல்லியல் ஆய்வாளர் மாணிக்கம்.
மாலை நேரமாகிவிட்டதால் எல்லோரும் வீட்டுக்குச் செல்லத் தயாரானார்கள். கிரிக்கெட் மட்டையை மைதானத்திலேயே விட்டு விட்டு வந்துவிட்டதை நினைவூட்டினான் கவி!
“டேய் பாலு, அப்படியே போய் அந்தப் பந்தடிக்கும் மட்டையை எடுத்துட்டு வாடா” என்றான் கவி.
“என் நினைவாக அது இங்கேயே இருக்கட்டும்” என்றான் பாலு.
இதைக் கேட்ட எல்லாரும் பலமாகச் சிரித்தனர்.<