நடந்த கதை – 7: புத்துயிர் தந்த பெரியார்
”அம்மா, பெரியார் தாத்தா எப்போ வைக்கம் போராட்டத்துக்கு வந்தாரு?” என்று ஆவலோடு கேட்டான் செழியன்.
“சொல்றேன் செழியா” என்ற அம்மா, செழியன் சாப்பிட, பழங்களை நறுக்கி ஒரு தட்டில் வைத்தார்.
“இதெல்லாம் இருக்கட்டும்மா… சீக்கிரம் சொல்லு” என்று அவசரம் காட்டினான் செழியன்.
”வைக்கம் போராட்டத்தை முன்னெடுத்த முக்கியமான தலைவர்கள் கைது செய்யப்படுறாங்க. ஆனா, தொண்டர்கள் எல்லாம் உணர்வுப்பூர்வமா இந்தப் போராட்டத்தில் கலந்துகிட்டு இருக்காங்க. அதனால போராட்டத்தைத் தலைமை தாங்க சரியான தலைவர் வேணும்னு ஜார்ஜ் ஜோசப் உள்ளிட்ட பலரும் நினைச்சாங்க”
“ஓ!”
“அதனாலதான் காந்திக்கும் பெரியாருக்கும் இன்னும் சில தலைவர்களுக்கும் இதைச் சொல்லி கடிதங்கள் எழுதறதும் தந்தி அடிக்கிறதும்னு செய்திட்டே இருந்தாங்க”
”ம்ம்ம்”
“1924 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதியன்னிக்கு வந்த தந்திதான் பெரியாரை உடனே வைக்கத்துக்குப் புறப்பட வைச்சிடுச்சு”
“அப்படியென்ன என்ன எழுதி யிருந்துச்சு அந்தத் தந்தியில?”
”வைக்கத்தில நிலைமை மோசமாகி விட்டது என்றும், தலைவர்கள் கைது செய்யப்பட்டுட்டாங்கன்னும் கடைசி நேரப் பரபரப்பைச் சொல்ற மாதிரி இருந்துச்சு அந்தத் தந்தி”
“அதற்கு அப்பறம் என்னாச்சு?”
“பெரியார் அப்போ தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவரா இருந்தாரு. அதனால, தான் வைக்கம் போறதைத் தெளிவாக அறிவிச்சிட்டு திரும்ப வர்ற வரைக்கும் ராஜாஜியை அந்தப் பொறுப்பைப் பார்த்துக்கச் சொல்லிக் கடிதம் எழுதினாரு”
”அப்பறம்”
“தமிழ்நாட்டிலேயே செய்ய வேண்டிய வேலைகள் இருக்கிறப்ப, அங்கே வேற போகணுமான்னு சிலர் பெரியாரை தடுக்கப் பார்த்தாங்க. ஆனா, ஜாதியைக் காரணம் காட்டி ஒதுக்கிவைக்கிற தீண்டாமைக்கு எதிராக பெரியார் ரொம்ப தீவிரமாகக் களத்துல நிற்பாரு இல்லையா… அதனால வைக்கம் போறதுல பெரியார் உறுதியாய் இருந்தாரு. தான் போறது மட்டுமில்ல… தமிழ்நாட்டுலேயிருந்து பலரை வைக்கம் போராட்டத்துக்கு அழைச்சாரு… ஒருவேளை நேர்ல வரமுடியாதவங்க பணம் காசு கொடுத்து போராட்டத்துக்கு உதவி பண்ணுங்கன்னு கோரிக்கை வைச்சாரு”
“பெரியார் தாத்தா அங்கே போனா அரசாங்கம் சும்மா விட்டுடுமா?”
“அங்கேதான் காமெடியான ஒரு சம்பவம் நடந்துச்சு?”
“காமெடியாவா?”
“ஆமா, பெரியார் கேரளாவுக்குப் போனதுமே மகாராஜா ஆட்களும் போலீஸ் கமிஷனரும் அவரை வரவேற்க தடபுடலான ஏற்பாட்டோட காத்திருந்தாங்க”
“அது எப்படிம்மா… ராஜாவை எதிர்த்துப் போராடத்தானே பெரியார் தாத்தா கேரளாவுக்குப் போறாரு?”
“ஆமா… ஆனா, அந்த மகாராஜாவும் சரி… ராஜாவுக்கு வேண்டியவங்களா இருந்தாலும் சரி… அவங்க எல்லாம் டில்லிக்கு ஈரோடு வழியா தான் ரயில்ல போக முடியும். அப்படிப் போனா பெரியாருடைய வீட்டுப் பங்களாவுலதான் தங்குவாங்க… அவங்களுக்குத் தேவையான உதவிகளை இவர்தான் செய்வாரு”
“ஓ! பதில் மரியாதை செய்யற மாதிரியா?”
”ஆனா பெரியார், தான் எதுக்கு வந்திருக்கேன்னு தெளிவாகச் சொல்லிட்டாரு”
“ஓ.கே. நேரடியாக வைக்கத்துக்குப் போய்ட்டாரா பெரியார் தாத்தா?”
“இல்ல… ஏப்ரல் 13ஆ-ம் தேதி இரவு கொச்சியில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களோட ஆலோசனைக் கூட்டம் நடத்தினாரு”
“எதுக்கு அந்தக் கூட்டம்… என்ன ஆலோசனை?”
“எதையுமே எடுத்தோம் கவிழ்த்தோம்னு செய்யற வழக்கம் பெரியாருக்குக் கிடையாது. அதனால வைக்கத்துல என்ன நிலவரம்… போராட்டம் எப்படி போய்கிட்டு இருக்கு… அதை அரசாங்கம் எப்படி எதிர்கொள்ளும்னு விரிவாக விவாதிச்சாங்க. அடுத்து என்ன செய்யறதுனு திட்டம் போடுறதுக்குதான் அந்தக் கூட்டம்”
“ஓ! சரிதான்”
”கிட்டத்தட்ட தோல்வியை நெருங்கிட்டு இருந்த வைக்கம் போராட்டத்துக்குப் பெரியார் உயிர்கொடுக்க வந்துட்டார்!. பெரியார் வந்துவிட்டார் என்ற செய்தியே பலருக்குப் பெரும் ஊக்கத்தைக் கொடுத்துச்சு”
“அப்படியா?”
திரு.வி.க. நடத்திய “நவசக்தி” என்ற பத்திரிகையில ’சத்தியாகிரகப் போர்க்களத்தின் பாசறையில் சேனாதிபதிகளோடு யோசித்து வருகிறார் பெரியார்’னு எழுதியிருந்தாங்க”
“புரியலையேம்மா?”
“அதாவது… அந்த வைக்கம் அகிம்சை வழிப் போராட்டத்தை ஒரு பெரிய போர் நடப்பது போலச் சொல்லி, அதை எதிர்கொள்ளப் போரில் முன்னாடி நிற்பவர்களோட பெரியார் ஆலோசனை செய்றாருனு எழுதியிருந்தாங்க”
“ஓ!”
”ஆமா… ஏப்ரல் 14 ஆம் தேதி வைக்கம் கோவிலோட வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள்ல நடந்த போராட்டத்துக்குத் தலைமை ஏற்று நடத்தினார் பெரியார்.”
”உடனே களத்தில இறங்கிட்டாரா?”
”ஆமாம். அதுமட்டுமில்ல, பெரியார் வைக்கத்தைச் சுற்றி இருக்கிற ஊர்கள்ல நடந்துட்டு இருக்கிற பிரச்சினையைப் பற்றியும் அதுல தங்களோட நியாயத்தை எடுத்துச் சொல்லியும் தீவிரமா பிரச்சாரம் செய்தாரு”
“பெரியார் தாத்தாவுக்கு மலையாளம் தெரியுமா?”
“இல்ல செழியா… அவர் தமிழ்லதான் பேசினாரு… ரளாவில் பல பேருக்குத் தமிழ்ல பேசினாலே புரியும். இருந்தாலும் அவர் பேசினதை மலையாளத்துலே மொழிபெயர்த்தும் சொன்னாங்க”
“அப்பதான் தெளிவாப் புரியும்ல”
“ஆமா… தீண்டாமை எந்த ரூபத்துல வந்தாலும் அதை விடவே கூடாதுனு அழுத்தம் திருத்தமாப் பேசினாரு. குறிப்பாகப் பெண்கள்கிட்ட பேசினாரு. ஏன்னா, அவங்களுக்குத் தான் இந்தப் போராட்டத்தோட நியாயம் தெரியணும்னும் அவங்களும் போராட்டத்துக்கு வரணும்னும் நினைச்சார். அதற்கு உடனடியா பலனும் கிடைச்சுது”
“என்ன பலன் அம்மா?”
”சேர்த்தலை என்ற ஊர்ல பெரியார் பேசி முடித்ததும் அங்கே இருந்த இளைஞர் சேவா சங்கத்துச் செயலாளரின் மனைவி போராட்டத்துக்குத் தான் தயார்னு முன்னாடி வந்தாங்க”
“சூப்பர்!”
“அவங்க மட்டுமில்ல… அவங்களோட சேர்த்து நூறு பேரும் கூடவே வர்றதா சொன்னாங்க… அதுதான் பெரியாரோட பேச்சில இருந்த நியாயத்துக்கும் உண்மைக்கும் கிடைத்த பலன்”
”தமிழ்நாட்டுல இருந்து யாரும் ஆதரவு கொடுக்கலையா?”
”கொடுக்காம இருப்பாங்களா… தமிழ்நாட்டுல இருந்து முக்கியத் தலைவர்கள்ல ஒருத்தரான வரதராஜுலு நாயுடு வைக்கத்துக்குத் தந்தி அடிச்சு போராட்ட நிலவரத்தைக் கேட்டுகிட்டே இருந்தாரு. போராட்டத்துல கலந்துக்கத் தொண்டர்களை அனுப்பிட்டும் இருந்தாரு”
“யார் யாரெல்லாம் வந்தாங்க?”
“கோவை அய்யாமுத்து அடுத்த நாளே சென்றார்… எஸ்.சீனிவாச அய்யங்கார் வந்து வைக்கத்தில் உள்ள தெருக்களை எல்லாம் நேரில் பார்த்தார். இன்னும் பல இளைஞர்களும் வைக்கத்தை நோக்கிப் போனாங்க”
”அப்பறம்”
“பெரியார் ஊர் ஊராகப் போய் தீண்டாமைக்கு எதிராப் பேசினாரு. இன்னொரு பக்கம் தெருக்கள்ல நடக்கக்கூடாதுனு சொல்றவங்களும் கூட்டம் போட்டுப் போராட்டக்காரங்கள எப்படி ஒடுக்குறதுன்னு யோசிச்சாங்க”
“முடிஞ்சிடும்னு நினைச்ச போராட்டம் பத்திக்கிட்டு எரிஞ்சா… அவங்களும் பதிலுக்குச் செய்வாங்க இல்ல”
”ஆமா… பெரியாரோட வேலைகள் அந்தத் தீயை மேலும் கொழுந்துவிட்டு எரிய வைச்சுது… அதனால அதை நிறுத்தறதுக்கு அரசாங்கம் ஒண்ணு செய்ய திட்டமிட்டுச்சு”
“மகாராஜாதான் பெரியார் தாத்தாவுக்குத் தெரிஞ்சவராச்சே… அவர் எப்படி பெரியாருக்கு எதிர்ப்பா செய்வாரு?”
“பெரியார்தான் ராஜ விருந்தாளியாக இருக்க முடியாதுன்னு போராட்டத்துல குதிச்சிட்டாரே… அதைத் தடுக்க என்ன செய்தாங்க தெரியுமா?”
“என்ன செஞ்சாங்கம்மா?”