தூக்கான்
ஒரு காலத்தில் பறவைகளுடன் மிகவும் இணக்கமாக இருந்த மனிதன் தற்பொழுது பறவைகளை ஒரு நுகர்வுப் பொருளாகவோ அல்லது மனிதனுக்குத் தொடர்பில்லாத உயிரினமாகவோ பார்க்கத் தொடங்கி விட்டான்.
அதே சமயம் அரசர்கள் காலத்தில் உளவு பார்க்கவும், அரசுச் செய்திகளை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குக் கொண்டு செல்லவும் அன்னம், புறா, சேவல், பருந்து, கிளி போன்ற பறவைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
“அன்னச் சேவல்! அன்னச் சேவல் ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்” எனும் புறநானூற்றுப் பாடல், சோழ மன்னன் கிள்ளிவளவனுக்கு, பிசிராந்தையார் அன்னச் சேவலைத் தூதாக அனுப்பியதைத் தெளிவுபடுத்துகிறது. இவ்வாறு பறவைகளுக்கும், மனிதனுக்குமான உறவென்பது குறிப்பிடத்தக்கதாகவே இருந்து வந்துள்ளது.
பறவைகள் இருப்பதால் மட்டுமே இன்றும் பல அரிய வகைக் காட்டுத் தாவரங்கள் அழியாமல் காக்கப்படுகின்றன.
சில பறவைகள் அவை வாழும் நிலத்திற்கு ஏற்றவாறு நிறத்திலும், வடிவிலும், பண்பு நலன்களிலும் வேறுபடுகின்றன. அந்த வகையில் மத்திய அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு அமெரிக்காவில் வாழும் பறவை இனம் தான் தூக்கான். இதற்கு பேரலகுப் பறவை என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்தப் பறவையின் அலகு நீளமாகவும் அதில் வண்ண, வண்ண நிறங்களைக் கொண்டிருப்பதாலும் இதற்கு இப்பெயர் வழங்கப்படுகிறது.
இதன் அலகு பார்ப்பதற்கு மிகப் பெரியதாக இருந்தாலும் அதிக எடைகொண்டதல்ல. அதில் நிறைய காற்றறைகள் உள்ளது. வியர்வை வழியாக வெப்பத்தை வெளியேற்றும் செயல்பாடு இப்பறவைக்கு இல்லை. ஆதலால் காற்றறைகளின் வழியாக வெப்பத்தை வெளியேற்றுவதற்கு உகந்த வகையில் அலகுகளின் உட்பகுதியில் உள்ள குருதிக் குழாய்கள் செயல்படுகின்றன. ஏதேனும் சில காரணங்களால் அலகு உடைந்துவிட்டால் சில நாள்களில் அப் பறவை இறந்துவிடும்.
இப் பறவையின் கழுத்து குட்டையாகவும் மிகப்பெரிய அலகுக்கு ஏற்றாற் போல் தலையின் அலகுப்புறம் பெரியதாகவும், கழுத்துப் பகுதியில் வெள்ளையாகவும், மார்பில் கருப்பு நிறத்திலும், கண்களைச் சுற்றியுள்ள வளையம் ஆரஞ்சு மற்றும் பச்சை நிறத்திலும் காணப்படும். அதன் உடலமைப்பு 18 முதல் 63 செ.மீ. வரை நீளம் கொண்டதாகவும், கால்கள் குட்டையாகவும், வலிமை உடையதாகவும், அதிக இரைச்சல் எழுப்பும் பறவையாக இது உள்ளது. தூங்கும்போது தலையை முதுகுப்புறம் திருப்பி அதன்மேல் தன் பெரிய அலகை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு தூங்கும். பழந்தின்னிப் பறவைகள் இனமாக இருந்தாலும் கூட சிறு பல்லி, ஊர்வனவற்றையும் விரும்பி உண்ணும்.
தூக்கானின் சிறப்புப்பண்பு என்னவென்றால் இப்பறவை ஒரு முறை இணைப்பறவையோடு காதல் கொண்டால் அது இறக்கும் வரை தன் இணையை விட்டுப் பிரியாது. ஆண்டிற்கு ஒருமுறை தான் இணை சேர்கின்றன. மரப் பொந்தினுள் சுமார் இரண்டு முதல் நான்கு முட்டைகள் வரை இட்டு 15 நாட்கள் தொடர்ந்து அடைகாத்துக் குஞ்சு பொரிக்கின்றன. குஞ்சு வளர்ப்பில் ஆண் மற்றும் பெண் பறவைகள் இணைந்து செயலாற்றும். மேலும் குஞ்சுப் பறவைக்கு இறகுகள் முளைப்பதற்கு சுமார் மூன்று மாத காலங்கள் ஆகின்றது. இந்த மூன்று மாத காலமும் தாய்க்கும், சேய்க்கும் தேவையான உணவுகளைச் சேகரித்துக் கொடுப்பது ஆண் பறவை மட்டுமே!
இப்பறவைகள் பெரும்பாலும் சிறு, சிறு கூட்டமாக, பிறந்த நிலப்பகுதியிலேயே வாழ்கின்றன. வலசைக்காக நெடுந்தொலைவு போவதில்லை. பொதுவாகப் பறவைகள் தங்கள் நேரத்தின் பெரும்பகுதியை இரை தேடவும், உணவு உண்ணவுமே செலவு செய்கின்றன. மேலும் 85% கேடு விளைக்கும் பூச்சிகளைப் பறவைகள் அழித்து, விவசாயத்தைக் காத்து, விவசாயிகளுக்கு நண்பர்களாகத் திகழ்கின்றன.
“பறவைகளைக் காப்போம்! பாரினைக் காப்ஙபோம்!<