சூனியமா? ஹார்மோனா?
வாழ்க்கையை மாற்றிய அனுபவம்!
படப்பைக்கு அருகில் உள்ள ஒரத்தூர் எனும் சிறிய கிராமத்தில், பெண்கள் சாமி ஆடுவது வழக்கம். கடந்த மாதம் ஒரு பெண் சாமியாடுவதைக் காண என்னுடைய ஆயா என்னை அழைத்துச் சென்றார். என்னைப் பார்த்துச் சாமியாடுகின்ற பெண், “உனக்கு யாரோ சூனியம் வைத்துவிட்டார்கள். நீ ஒரு இடத்தில் நிலையாக இருக்க மாட்டாய். உனது எண்ணங்கள் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும்” என்று கூறினார்.
“இது என்னடா இது!” – என்று நான் மனதினுள் நினைத்தேன். மறுநாள் எனக்கு உடல்நிலை சரியில்லை என்று பெரியப்பா என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அந்த மருத்துவர், “ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றம்தான், உன்னை இப்படி எண்ணத் தூண்டுகிறது. ஆகவே உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. நான் எழுதித் தரும் மாத்திரைகளைச் சாப்பிட்டால் சரியாகிவிடும். இது அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனை தான். பயப்படத் தேவையில்லை. சூனியம், செய்வினை அனைத்தும் பொய்” என்று கூறினார்.
கடந்த சில மாதங்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி பெரியப்பாக்கள் U, P, K, அத்தைகள் M, B மற்றும் அண்ணன்கள் M, S, K ஆகியோரின் பராமரிப்பில் இருந்து வருகிறேன். இவர்கள் யாரும் என் ரத்த சொந்தங்கள் இல்லை என்றாலும், என்னை இப்படி சரிப்படுத்த முயற்சிக்கும் இவர்கள் எல்லோரும் என் வாழ்வில் முக்கியமானவர்கள் அல்லவா? இவர்கள் மூலமாகக் கதை எழுதுவது உள்ளிட்ட புதுப்புது விசயங்களைக் கற்றுக் கொள்கிறேன். நானே சொந்தமாகக் கதையும் எழுதியிருக்கிறேன். எனக்கு இயல்பாக ஓவியம் வரைய வரும். ஆசிரியர் தாத்தாவின் படத்தைக் கூட வரைந்திருக்கின்றேன்.
மருத்துவரின் பேச்சைக் கேட்டதால் இப்போது நான் சரியானவர்களுடன் இருக்கிறேன். ஒருவேளை அந்தச் சாமியாடும் பெண்ணின் பேச்சைக் கேட்டு இருந்தால் எங்கே இருந்திருப்பேன் தெரியுமா?
நீங்களே சிந்தித்துப் பாருங்கள்…