செ.நு. தொடர் – 10: இறுதி அல்ல தொடக்கம்…
செயற்கை நுண்ணறிவு என்பது நாளைய தொழில்நுட்பம் அல்ல; அது இன்றைய தொழில்நுட்பம். இன்று – இப்போது நம் வாழ்வின் மீது தாக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்கும் ஒரு தொழில்நுட்பம்.
அந்தத் தொழில்நுட்பத்தைப் பற்றி பிஞ்சுகளான உங்களுக்கு அறிமுகப்படுத்தியதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. இத்துடன் இந்தத் தொடர் முடிவடைகிறது.
ஆனால், உங்களைப் பொறுத்தவரை இப்போதுதான் அனைத்தும் தொடங்குகிறது. இந்தத் தொடரைப் படித்துக் கொண்டிருக்கும் யாரோ ஒருவர்தான் நாளை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் மிகப்பெரும் அறிஞராக வரப் போகிறார் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.
நீங்கள் நாளை செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிபுணராகி ஓட்டுநர் இல்லா கார் ஒன்றை வடிவமைக்கலாம், மிகவும் சிக்கலான நோய்களுக்குச் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் மருந்தைக் கண்டுபிடிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கூடிய ஒரு செயலியை உருவாக்கலாம். இப்படியாக நாளைய சமூகத்தில் மிகப்பெரிய புரட்சியின் ஒரு பகுதியாக நீங்கள் இருப்பீர்கள் என்பதில் எனக்குச் சிறிதும் அய்யம் இல்லை.
ஆனால், இந்தத் தொடரின் நோக்கமே அனைத்தையும் நாளை வரை தள்ளிப் போடத் தேவையில்லை என்பதுதான். இப்போது இணையத்தில் AI உதவியுடன் கூடிய பல்வேறு வலைதளங்கள் உள்ளன. குறிப்பாக https://chat.openai.com/
செயற்கை நுண்ணறிவு உதவியுடன் செயல்படும் இந்த வலைதளத்தில் உரையாடல் உதவியுடன் நீங்கள் பல அறிவியல் நுணுக்கங்களைக் கற்கலாம்.
இப்போதே இதனுள் சென்று செயற்கை நுண்ணறிவைப் பற்றிய அடிப்படைகளைக் கேள்விகளாகக் கேட்டு, அது கொடுக்கும் பதில்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த கட்டமாக நீங்கள் படிக்க இருக்கும் திட்டத்தைப் பற்றி இந்தச் செயற்கை நுண்ணறிவுச் செயலியுடன் உரையாடி மிகச் சிறப்பான ஒரு படிப்புத் திட்டத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். அதற்கு எந்த மாதிரியான புத்தகங்கள் வாங்க வேண்டும் என்ற பரிந்துரையையும் அதுவே கொடுக்கும்.
நீங்கள் செயற்கை நுண்ணறிவைப் பற்றித் தெரிந்து கொள்ள என்ன புத்தகம் படிக்கலாம் என்று உங்கள் சார்பாக நான் அதனிடம் கேட்டேன். அது கொடுத்த பட்டியல் கீழே,
Books
1. “Surviving AI: The promise and peril of artificial intelligence” by Calum Chace
2. “Hello World: How to be Human in the Age of the Machine” by Hannah Fry
Websites
1. Code.org
2. Khan Academy
3. Scratch – Developed by MIT
MOOCs (Massive Open Online Courses)
1. “AI For Everyone” by Andrew Ng on Coursera
2. “Elements of AI”
நாளை நீங்கள் எந்தத் துறையைத் தேர்ந் தெடுத்துப் படித்தாலும் செயற்கை நுண்ணறிவு என்பது தவிர்க்க முடியாதது ஆகிவிடும். செயற்கை நுண்ணறிவைப் பற்றி பயம் எதுவும் தேவையில்லை. குறைந்தபட்சம் இந்தத் தொடரின் நோக்கமே அந்தப் பயத்தை உங்களிடமிருந்து விலக்குவது தான். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் அடிப்படைகளைப் பயின்று நீங்கள் வருங்காலத்தில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் சாதிக்கும் தமிழராக வளர வேண்டும் என்பதே என் ஆசை. அதற்கு என் வாழ்த்துகள்!
(செ.நு. அறிமுகம் முற்றும்.
நாளய தொழில்நுட்பங்கள் பற்றிய
தொடர் விரைவில்!)