துணுக்குச் சீட்டு – 14: துணி ஏன் வெளுத்துப் போகுது?
விக்ஷீ.சூரியனுக்கு நம்ம மேல் பாசம் அதிகமாகிடுச்சுப் போல, மே மாதத்தில் வரும் வெயில், இப்போவே வந்துடுச்சு. ஆனா, துவைச்ச துணிய எல்லாம், நல்லா வெயிலில் காயவைக்க முடியுது. சுடும் வெயிலில் துணி காயப்போடுவதால, அதுல நுண்ணுயிரிகள் வளர வாய்ப்பு இல்ல ஆனா, சீக்கிரம் வெளுத்துப்போய்டுது அல்லவா? ஏன், வெயிலில் துணி காயவைச்சா, வெளுக்குது?
சூரியனில் இருந்து பூமிக்குச் சூரிய ஒளி பல அலைவரிசையில் வரும். அதுல ஒரு குறிப்பிட்ட அலைவரிசை இருக்கும் ஒளியைத் தான் நம்ம கண்களால் பார்க்க முடியும். கண்ணுக்குப் புலப்படும் இந்த ஒளி, 7 வண்ணங்களால் ஆனது. ஒவ்வொரு வண்ணமும் குறிப்பிட்ட அலைவரிசையில் பயணம் செய்கிறது. ஒளியைத் தாண்டி, பொருள்களைப் பற்றிப் பார்த்தால், எல்லாப் பொருள்களிலும், Chromophore எனும் சேர்மம் (Compound) இருக்கு. சில Chromophore, புற ஊதாக் கதிர்களை உள்ளிழுத்துக் கொள்ளும் (Absorb the UV Rays). சில Choromophore, காணக்கூடிய ஒளியில் (Visible light) இருந்து சில அலைவரிசையில் இருக்கும் நிறத்தை உள்ளிழுத்து, குறிப்பிட்ட அலைவரிசையில் இருக்குற நிறத்தை வெளியேற்றும் (Reflect).
இப்போ, ஒரு பொருள் மஞ்சள் நிறத்துல இருக்குன்னு வச்சிப்போம். அந்தப் பொருளில் இருக்கும் Chromophore, மஞ்சள் நிறத்தோட அலைவரிசை தவிர மற்ற அலைவரிசைகளையும் உள்ளிழுத்துக்கொள்ளும். மஞ்சள் நிறத்தின் அலைவரிசை மட்டும் வெளியேற்றப்படுவதால் அந்தப் பொருள் மஞ்சள் நிறத்தில் நம்ம கண்ணுக்குத் தெரியுது. காணக்கூடிய ஒளியில் (Visible Spectrum) சில அலைவரிசைகளில் இருக்கும் நிறத்தை Chromophore-கள் உள்ளிழுத்துக் கொள்ளுது இல்லையா? அப்படி உள்ளிழுத்துக் கொள்ளும் Chromophore – களை சூரிய ஒளியில் இருக்கும் புற ஊதாக் கதிர்கள் உடைத்துவிடும். அப்படி உடைந்த Chromophore களால் தான் துணி வெளுத்துப்போகுது. விக்ஷீ. சூரியன், தயவுசெஞ்சு, கொஞ்சம் கம்மியா பாசம் காட்டுங்க, முடியல எங்களால, நாங்க பாவம்ல…