பகுத்தறிவுடையோர் பகுத்தறிவாளரா?
– சிகரம்
பகுத்தறிவாளர் என்று சிலரைச் சொன்னதும் மற்றவர்களுக்கு பகுத்தறிவு இல்லையா? என்று கேட்கின்றனர்.
பகுத்தறிவாளர் என்றால் பகுத்தறிவு உடையவர் என்று பொருள் அல்ல. பகுத்தறிவைப் பயன்படுத்துகின்றவர் என்று பொருள். எழுத்தை ஆளுகின்றவர் எழுத்தாளர், உழைப்பை ஆளுகின்றவர் உழைப்பாளர் என்பதுபோல் பகுத்தறிவை ஆளுகின்றவர் பகுத்தறிவாளர்.
உழைக்கும் ஆற்றல், தகுதி உடையவர் எல்லாம் உழைப்பாளர் அல்ல. உழைப்பைக் கொடுக்கின்றவர் மட்டுமே உழைப்பாளர். அதேபோல் பகுத்தறிவு உடையவர் எல்லாம் பகுத்தறிவாளர் அல்ல. அதைப் பயன்படுத்துகின்றவர் மட்டுமே பகுத்தறிவாளர். அதாவது பகுத்தறிவின் இயல்புப்படி எதையும் பகுத்தாய்ந்து உண்மை காண வேண்டும், சரியானதைக் காணவேண்டும். பகுத்தறிவு அதன் இயல்புப்படி எதையும் பகுத்தாயும். ஆனால், அப்படி பகுத்தாய்வு செய்வதற்கு மடை போடுவோர், சிந்திக்க மறுப்போர் மடையர் ஆவர்; பகுத்தறிவாளர் ஆகார்.
சிலர் எதையும் பகுத்துப்பகுத்து நுணுகிச் சிந்திப்பர். ஆனால், கடவுள் என்று வந்தால் அதைப் பற்றிச் சிந்திக்காது அப்படியே ஏற்பர்; சடங்குகள் என்று வந்தால் சிந்திக்காது அப்படியே செய்வர். இதை ஏன் செய்யவேண்டும்? அது சரியா? அவசியமா? அதனால் பயன் என்ன என்று சிந்திக்க மாட்டார்கள். மற்ற செயல்களில் அவற்றை நுணுகி ஆராய்ந்து செயல்படக் கூடியவர்கள், இவற்றை ஆய்வுக்கு உட்படுத்தாமல் அப்படியே ஏற்பர். இவற்றையும் பகுத்து ஆய்வு செய்ய அவர்களுக்குப் பகுத்தறிவு உண்டு, அதற்கான திறனும் உண்டு என்றாலும் அவ்வாறு பகுத்தாய்வு செய்யாது, பகுத்தாயத் துடிக்கும் சிந்தனை ஓட்டத்திற்கு மடைபோட்டு தடுக்கின்றனர்; தெளிவுக்கு முயலாது திரைபோட்டுக் கொள்கின்றனர். எனவே, அவர்கள் மடையர். ஒருவர் மடையராக இருப்பதற்கு அவர்தான் காரணமாக இருக்க முடியுமே தவிர மற்றவர்கள், மற்றவை காரணங்களாக இருப்பதில்லை. காரணம், இவர்கள் பகுத்துச் சிந்திப்பதை யாரும் தடுக்க முடியாது; இவர்களாக மட்டுமே மடை போட்டுக்கொள்ள முடியும். எனவே, மடைமை தன்னால் உருவாக்கிக் கொள்ளப்படுவதாகும்.
அறியாமை : அறியாமையைத்தான் பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. ஒருவர் தானே முயன்று அறியாமல் இருப்பதாலும்; மற்றவர்கள் தெளிவுபடுத்தாததாலும்; தெளிவுபெற வாய்ப்பு, சூழல் இல்லாததாலும்அறியாமை ஏற்படுகிறது. எனவே, அறியாமை என்பது எல்லோரும் சேர்ந்து அகற்ற வேண்டியது. மடைமை என்பது அவர்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டியது.
மூடநம்பிக்கை : நம்பிக்கை என்பது காரணங்களுடன் கூடியதாக இருக்க வேண்டும். காரணங்கள் தெளிவாகவும், மறைவின்றியும் இருக்க வேண்டும். அப்படியில்லாமல் காணாத ஒன்றை, உணராத ஒன்றை இருக்கும் என்று எண்ணுவது கண்மூடி நம்பிக்கை அல்லது மூடநம்பிக்கையாகும்.
சொர்க்கம், நரகம் நம்பிக்கை அப்படிப்பட்டது. அவர்கள் நம்பிக்கைப்படி, இறந்தவர்கள் மட்டுமே காணக்கூடியது சொர்க்கமும் நரகமும்; இறந்தவர்கள் மீண்டும் நமக்குச் சொல்ல முடியாது. அப்படியிருக்க, உயிருடன் உலகிலுள்ளவர்களுக்கு சொர்க்கம், நரகம் எப்படியிருக்கும் என்று தெரிய வாய்ப்பே இல்லை. எனவே, சொர்க்கம் இப்படியிருக்கும் நரகம் இப்படியிருக்கும் என்று நம்புவது மூடநம்பிக்கையாகும் _ காணாத, உணராத நம்பிக்கையாகும்.
முட்டாள்தனம் : முட்டுக்கொடுக்கப்படும் எதுவும் கொடுக்கப்பட்ட இடத்திலிருந்து தாங்கி நிற்கும். அதைத்தவிர வேறு எதையும் அது செய்யாது. மனிதர்களில் சிலர் அப்படித்தான் முட்டுக் கழியை (கட்டையைப்) போன்று வாழ்ந்து முடிப்பர். அவர்கள் அறிவைப் பயன்படுத்தவே மாட்டார்கள். சொன்னதை மட்டுமே செய்வர். சூழலுக்கு ஏற்ப அவர்களால் சிந்தித்து வாழத் தெரியாது. எனவே, முட்டுப்போன்ற ஆள் அவர் என்பதால் முட்டாள் என்றனர்.
காட்டுமிராண்டித்தனம் : பலரும் இவ்வாறு சொல்லி கேட்டிருக்கிறோம். நாமும் சொல்லியிருக்கிறோம். இதன் உண்மைப் பொருள் என்ன? காட்டு மர + அண்டி = என்பதே பிற்காலத்தில் காட்டுமிராண்டியானது. மனிதன் விலங்கோடு விலங்காக ஆடையின்றி காடுகளில் திரிந்தபோது குடிசைகூடப் போடத் தெரியாது வாழ்ந்தான். அப்போது காட்டு மரங்களை அண்டி, அதன் நிழலில் வாழ்ந்தான். ஆகையால் அவன் காட்டு மர அண்டி எனப்பட்டான். அவன் வாழ்ந்ததுபோல, விழிப்பின்றி, அறிவு வளர்ச்சியின்றி, பகுத்தறியும் முயற்சியின்றி இன்றும் வாழ்வோர் உள்ளனர். எனவே, அவர்கள் காட்டு மர அண்டி என்னும் பொருள்பட காட்டுமிராண்டி எனப்படுகின்றனர்.