கதை கேளு… கதை கேளு… மெல்லிய தீடர் திருப்பம்
நிறைவன் வகுப்பின் கடைசி வரிசைக்குச் சென்று அமர்ந்தான். வழக்கமாக முதல் வரிசையில் அமர்பவன். பள்ளிக்கு நுழைந்ததிலிருந்து யாரிடமும் பேசவே இல்லை. அவன் உயிர்த்தோழி சனத் அவனிடம் வந்து பேசிய போதும் பேச்சுக் கொடுக்கவில்லை. “என்னடா உடம்புக்குச் சரியில்லையா? சண்டே வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குப் போறேன்னு சொன்னியே போனியா? வீட்டுப்பாடம் எல்லாம் முடிச்சியா?” பதில் எதுவும் சொல்லாமல் தலையைத் தலையை ஆட்டினான். “போடா” எனத் திட்டிவிட்டு தன் இருக்கைக்குச் சென்றுவிட்டாள்.
மகேஷின் இடத்தில்தான் நிறைவன் அமர்ந்து இருந்தான். “தம்பி, உன் இடத்துக்குப் போறியா” என்றான். நிறைவன் அசையவே இல்லை. குண்டுக்கட்டாக அதே இடத்தில் அமர்ந்தான். “என்னடா பல்லு உடைஞ்சிடுச்சா?” என்றான் மகேஷ்.
மகேஷ் பார்க்கத்தான் பலசாலி; ஆனால் பிரச்சினை எதுவும் செய்யமாட்டான். நிறைவன் அமரும் முதல் வரிசையில் போய் அமர்ந்துவிட்டான்.
முதல் பாடவேளை தமிழ். தமிழ் ஆசிரியருக்குப் பிடித்தமான மாணவன் நிறைவன். அன்று பாடப்புத்தகம் இல்லாமல் கவிதைப் புத்தகம் ஒன்றினை வாசிக்கலாம் என்றார் ஆசிரியர். “இது உங்க வயது சிறுவர்களுக்கான கவிதை நூல். நாம வாசித்து என்ன புரிந்தது, என்ன புதிதாக இருக்கின்றது என்றும் சொல்லலாம். இறுதியில் நீங்களும் விருப்பம் இருப்பவர்கள் கவிதை எழுதி வகுப்பில் வாசிக்கலாம்” என்றார். சிலர் உற்சாகமடைந்தனர். சிலர் கவிதையா என முகம் சுளித்தனர். கவிதையை எழுதியவர் பெயர் நீதிமணி.
“நிறைவன் இன்னைக்கு வரவில்லையா? என்னாச்சு?” என ஆசிரியர் தேடினார்.
“அம்மா, அவன் கடைசி வரிசையில் அமர்ந்திருக்கான்” எனக் கை நீட்டிக் காட்டினாள் சனத்.
அட என்ன ஆச்சரியமா இருக்கே! “நிறைவன், இங்க வந்து இந்தக் கவிதையைச் சத்தமாய்ப் படி பார்க்கலாம்” என்றார்.
நிறைவன் எழுந்து நின்றானே தவிர நகரவில்லை. நிறைவன், இங்க வா என அழைத்தும் வராததால் ஆசிரியர் கடுப்பானார்.
“அம்மா, நான் படிக்கின்றேன்” எனப் புத்தகத்தை வாங்கிப் படித்தான் மகேஷ். மகேஷிற்கு இப்படி வகுப்பு மாணவர்கள் முன்னாடி படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் அவனுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்ததே இல்லை. தமிழ் ஆசிரியர் சென்றதும் எல்லோர் பார்வையும் நிறைவன் மீது. மிகவும் விசித்திரமாகவே இருந்தது. இப்படி அவன் இருந்ததேயில்லை. உடம்பு சரியில்லை, சளி, இருமல் என்றாலும் வகுப்பில் பேசிடுவான். பேசிக்கிட்டே இருப்பான் என்பதுதான் சரி.
அடுத்த பாடவேளை கணிதம். இயற்கணிதப் பாடம்.
பெரிய கணக்குப் போட்டுவிட்டு, “எங்க நிறைவன் எக்ஸ்(ஜ்)ன் மதிப்பு என்ன சொல்லு?” என்றான். அவன் வாயே திறக்கவில்லை. கேட்டுக் கேட்டுப் பார்த்தார் ஆசிரியரும் கடுப்பாகிவிட்டார். ஆசிரியர்கள் அறையில் வந்து என்னைப் பார் எனச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். இடைவேளை. எல்லோருமே அவனைச் சூழ்ந்தனர். “என்னடா ஆச்சு? வாயில அடிபட்டுடுச்சா? வீட்ல பிரச்சனையா?” ஒன்றுக்கும் பதில் சொல்லவே இல்லை. “சரி போ உன்னை மேத்ஸ் சார் அறைக்கு வரச்சொல்லி இருக்கார், அவர்கிட்டயாச்சும் சொல்லு” என சனத் போகச்சொன்னாள்.
நேராகக் கழிவறையை நோக்கி எல்லா நண்பர்களும் சென்றனர். நிறைவனும் பின் தொடர்ந்தான். அருகில் தண்ணீர்த் தொட்டியில் ஒவ்வொருவராகத் தண்ணீர் குடித்துக்கொண்டு இருந்தனர். டம்ப்ளரில் தண்ணீர் குடித்தான். ஏப்பம் வந்தது. அந்தப் பகுதியிலிருந்த குழந்தைகள் எல்லோரும் மிரண்டுவிட்டனர்.
அது ஒரு சிங்கத்தின் கர்ஜனை.
அந்த ஏப்பமே படு பயங்கரமாக இருந்தது. பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு திசையாக சிதறி ஓடினார்கள். நிறைவன் எல்லோரையும் ஓடவேண்டாம் பயப்பட வேண்டாம் எனச் சைகை மூலம் அமைதிப்படுத்த முயன்றான். ஆனால், யாரும் கேட்கவில்லை. சில நிமிடங்களில் நிறைவன் ஒரு பக்கம்; எதிர்ப் பக்கம் ஒட்டுமொத்தப் பள்ளியும். மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், உதவியாளர்கள், முதல்வர் என எல்லோரும். எதிரில் இருந்த எல்லோரும் பயந்து நடுங்கினார்கள்.
“நிறைவன் ஏதாச்சும் மிமிக்ரி செய்யறியா?”
“இல்லை” எனச் சைகை காட்டினான்.
“வாய் திறந்து இல்லைன்னு சொல்லு” என்றார் பள்ளி முதல்வர்.
“இல்லை” எனச் சைகை காட்டினான்.
“வாய் திறந்து இல்லைன்னு சொல்லு” என்று மீண்டும் சொன்னார் பள்ளி முதல்வர்.
வாய் திறந்தான். ஆனால், இம்முறை அந்த கர்ஜனை பள்ளியையே நடுங்க வைத்தது.
அவசர ஊர்தி, தீயணைப்புத் துறை, காவல்துறை, வனவிலங்குத் துறை என எல்லோரும் அடுத்த அரை மணி நேரத்தில் வந்துவிட்டனர். ஒரு பெரிய கரும்பலகையில் நிறைவன், “நான் நலமாக இருக்கின்றேன்” என்று எழுதிக் காட்டினான். ஆங்கிலத்திலும் “மி கிவி திமிழிணி” என்று எழுதினான். எல்லாத் துறையினருக்கும் குழப்பம். என்ன நடக்கின்றது என்றே புரியவில்லை. மருத்துவக் குழுவினரும் வந்துவிட்டனர்.
“நிறைவன் உன்னை ‘டெஸ்ட்’ செய்யணும். இந்த மாத்திரையை எடுத்துச் சாப்பிட்டா தூங்கிடுவ. பிறகு நாங்க பரிசோதனை செய்து என்னாச்சு என்று பார்க்கின்றோம்” என்றார் தலைமை மருத்துவர்.
சரி எனச் சொல்ல நினைத்ததும் மீண்டும் ஒரு கர்ஜனை.
நர்ஸ்கள் எல்லாம் பயந்து நடுங்கினர். மாத்திரையை உட்கொண்டான். ஒட்டுமொத்தப் பள்ளியும் பார்த்துக்கொண்டு இருந்தது. ஒரு வகுப்பறை மேஜைமீது தூங்கிவிட்டான். அதற்குள் குழந்தைகளின் பெற்றோர்கள், தொலைக்காட்சி நிருபர்கள் என எல்லோரும் குவிந்துவிட்டனர்.
மெல்ல மெல்லத் தலைமை மருத்துவர் நிறைவன் அருகே சென்றார். ஆமாம், மயங்கிவிட்டான். உடனே ஒரு மயக்க ஊசியையும் போட்டுவிட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எல்லாப் பரிசோதனையும் செய்தனர். எதிலுமே எந்த மாற்றமும் தெரியவில்லை.
பயந்திருந்த அவன் அம்மாவிடம் “இன்றைக்குத் தூங்கி எழுந்தா எல்லாம் சரியாகிடும்” என்றார் மருத்துவர். இரவு எழுந்து இட்லிகளைச் சாப்பிட்டு மீண்டும் உறங்கினான்.
காலை விடிந்தது. மருத்துவர், பெற்றோர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், நிறைவனின் தோழர்கள் எல்லோரும் நிறைவன் விழிக்கும் வரை காத்திருந்தனர். கண் விழித்தான். எல்லோரையும் பார்த்துப் புன்னகைத்தான்.
“நிறைவன் எங்க இங்க எனக்கு ஒரு வணக்கம் சொல்லுங்க” என்றார் மருத்துவர்.
“பயப்படாம சொல்லுங்க”
அவன் பெற்றோர்களைப் பார்த்து “நம்ம சிகிச்சை சிறப்பாக இருக்கும், பையன் இயல்பிற்கு வந்திட்டான். கவலை வேண்டாம்” எனச் சொல்லிவிட்டு மீண்டும் நிறைவனைப் பார்த்தார் மருத்துவர்.
நிறைவன் வாயைத் திறந்தான். நல்லவேளை சிங்கத்தின் கர்ஜனையோ உறுமலோ இல்லை. ஆனால்…
“கூ…கூ” குயிலின் கானக் குரல் மட்டும் அவன் வாயிலிருந்து வந்தது.
முன்னிரவு நிறைவன் தங்கிய அறை சன்னலில் அமர்ந்திருந்த அந்தக் குயில் மரத்தின் மீது அமர்ந்து கூவெனக் கூவ நினைத்தது, அதன் சிங்கக் கர்ஜனையைக் கேட்டு மரத்தில் இருந்த எல்லாப் பறவைகளும் பயந்து நடுங்கின.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்த சிங்கம் பிரதீப், நிறைவனின் குரலில், “எனக்கு பசிக்குது, கொஞ்சம் இறைச்சி தாங்க நண்பர்களே” என்று சொல்லிக்கொண்டு இருந்தது.
எப்போது அவரவர் குரல் அவரவருக்குக் கிடைக்கும்?