வளர்ப்பு : இடக் கைப் பழக்கம் தவறா?
நம் நாட்டில், மக்களை வேறுபடுத்துவதற்கும், தனிமைப்படுத்துதற்கும், பிரித்துப் பார்ப்பதற்கும் இது தான் காரணம் என்று இல்லை. பிற நாடுகளில் ஒன்றுமே இல்லை என்று எண்ணும் சிறு சிறு இயற்கையான பழக்க வழக்கங்களை நம் நாட்டில் பெரும் பிரச்சனையாக்கி விடுகிறார்கள். மனிதர்களில் பெரும்பான்மையான சதவிகிதம் வலக் கைப் பழக்கம் உடையவராக இருக்கிறார்கள். இடக் கைப் பழக்கமுள்ளவர்கள் பிற நாடுகளைக் காட்டிலும் நமது நாட்டில் குறைவாகக் காணப் படுகின்றனர். இயற்கையாகவே இந்த விகிதம் இந்தியாவில் குறைவாகத்தான் இருக்குமா? இல்லை. அப்படி இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. நமது நாட்டிலும் அதிக அளவில் இடக்கைப் பழக்கமுள்ள குழந்தைகள் பிறக்கிறார்கள். ஆனால், அந்தக் குழந்தை அதன் இயல்பிலேயே வளர்க்கப்படுவதில்லை. மாறாக, அக்குழந்தையின் இயல்புத் தன்மையை வலுக்கட்டாயமாக மாற்றி வலக் கைப் பழக்கமுடையவர்களாக வளர்க்கிறோம். இதுவே உண்மை.
ஒரு பொருளையோ, உணவையோ, பணத்தையோ, பரிசுகளையோ வலக் கையினால் வழங்கினால் நாம் வாங்கிக் கொள்கிறோம். அதுவே இடக் கையினால் ஒருவர் நமக்கு கொடுத்தால். ‘அந்தக் கையில் (வலக் கையைக் காட்டி) கொடு’ என்கிறோம். ஏன் இடக் கையின் மேல் ஒரு வெறுப்பு? தவிர்க்கும் அளவிற்கு இடக் கைதான் என்ன செய்தது? இடக் கையை கழிப்பறையில் பயன்படுத்துகிறோம் என்பதற்காகவும், அதன் பயன்பாட்டை இழிவாகக் கருதியதாலும் அதனை பல இடங்களில் தவிர்க்கிறோம் என்பது சரியா? இடக் கையின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்தவொரு வேலையையும் செய்யக்கூடுமா என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இடக் கை இல்லாது இருந்தால் என்ன செய்வீர்கள்? உண்பதையும், இடக் கையால் செய்ய வேண்டிய அதே வேலையையும் உங்கள் வலக் கையால் தானே செய்துகொள்வீர்கள்? வயதில் நம்மை விட முதியவர்களுக்கு இடக் கையால் ஒரு பொருளைக் கொடுப்பதும் வாங்குவதும் மரியாதைக் குறைவாகக் கருதப்படுவதற்கு இங்கு ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை. இடக் கைப் பழக்கமுள்ளவர்கள் வலக் கையால் சுத்தம் செய்துகொள்வார்கள், இடக் கையால் உண்பார்கள் மற்ற பணிகளையும் செய்து கொள்கிறார்கள் அவ்வளவு தான் மாற்றம்.
சொல்லப்போனால், அவர்கள் சரியாகக் கொடுக்க வருவதை மாற்றி நீங்கள் தான் அவர்களை ‘வலது’ கையால் கொடுக்க வைக்கிறீர்கள்.
இடக் கைப் பழக்கமுடையவர்களின் எண்ணிக்கை நாட்டுக்கு நாடு மற்றும் ஒரு நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்குள்ளும் வேறுபடுகிறது. இந்த விகித மாற்றங்கள் இடக் கைப் பயன்பாட்டிற்கு எதிரான நேரடி மற்றும் கலாச்சார, மத நம்பிக்கையினாலான அழுத்தங்களாலும், மரபணுக்களில் உள்ள வேறுபாடுகளாலும் வேறுபடுகின்றன.
அறிவியல் கோட்பாடுகளின் வழியில் பார்க்கும் பொழுது இரண்டு இடக் கைப் பழக்கமுடைய பெற்றோரைக் கொண்ட குடும்பங்களிலும், பரம்பரையாக இடக் கைப்பழக்கமுடையவர்களின் விகிதங்களைப் பொருத்தும் இந்த விகிதங்கள் மாறுபடும்.
மேலும் பல இடங்களில், குறிப்பாக நமது நாட்டில் இடக் கைப் பயன்பாட்டிற்கு எதிரான கலாச்சார அழுத்தங்கள் இடக் கைப் பழக்கத்தின் வெளிப்படையான தன்மையைக் குறைக்கின்றன. இடக் கைப் பழக்கங்கள் காட்சி வெளிப்படையாக இல்லை என்றாலும், இடக் கைப் பழக்கம் தொடர்பான அல்லீல்கள் (Alleles) மக்களின் மரபணுக்களில் இருக்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 1980-லிருந்து இது தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இடக்கை மற்றும் வலக் கைகளின் பயன்பாடு ஒரு குழந்தை தன் தாயின் கருவறையில் வளரும் பொழுதே தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. இந்தப் பழக்கம் தாயின் வயிற்றினுள் இருக்கும் பொழுது குழந்தை தனது வாயினுள் பெருவிரல் வைக்கும் பொழுதிலிருந்து தொடங்குகிறது.
மனித மூளை பல கோடி நியூரான்களை உள்ளடக்கியது. அத்தனை நியூரான்களும் ஒன்றோடு ஒன்று தொட்டுப் பிணைத்து இணைப்பை ஏற்படுத்துவதன் மூலமாக உடலின் பிற இயக்கங்களைத் தீர்மானிக்கின்றன. நம் உடலின் வலப் புறச் செயல்பாடுகளை இடப் பக்க மூளையும், உடலின் இடப் பக்கச் செயல்பாட்டை வலப் பக்க மூளையும் கட்டுப்படுத்துகின்றன. என்பது அறிவியல் உண்மை. மேலை நாடுகளில் சர்வ சாதாரணமாக இடக் கைப் பழக்கமுள்ளவர்களைப் பார்க்க முடிகிறது. இடக் கையால் பொருள்களை வாங்குகின்றனர், இடக் கையால் உணவு உண்கின்றனர். அவர்களுக்கெல்லாம் எந்தப் பிரச்சனையும் வந்தது போல் தெரியவில்லை.
எனவே, இங்கு குழந்தைகள் இடக் கைப் பழக்கம் கொண்டு வளருவதை இங்குள்ள பெற்றோர்கள் விரும்புவதில்லை, அப்பழக்கத்தை மாற்றியமைக்க முயல்கின்றனர். மனிதனின் பேசும் மற்றும் எழுதும் திறன்களை இடது பக்க மூளையின் அரைக்கோளமும் (Left Hemisphere), உடலின் இடப் பக்கம் முழுவதும் கற்பனை மற்றும் படைப்பாற்றலை மூளையின் வலது அரைக்கோளமும் (Right Hemisphere) கட்டுப்படுத்துகின்றன.
ஒரு வலக் கைப் பழக்கம் உள்ளவரின் மொழிகள் தொடர்பான செயல்முறைகள் மூளையின் இடப் பக்கம் செயல்படுத்தப்படுகின்றது. மாறாக ஒரு இடக் கைப் பழக்கம் இருப்பவரின் மொழிகள் தொடர்பான திறன்கள் மூளையின் ஒரு பகுதி என்று மட்டுமில்லாது மூளை முழுவதும் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்படுகின்றன.
எனவே, ஒரு இடக் கைப் பழக்கமுள்ளவருக்கு இடது பக்கப் மூளையில் பக்கவாதம் போன்றவை ஏற்படுமாயின், அவர்கள் மிக விரைவில் தனது பேசும் திறனை திரும்பப் பெற்றுவிடுவார்கள். கடந்த 2017-இல் நடந்த ஓர் ஆய்வின்படி… இந்த வலக்கை, இடக்கைப் பழக்கங்கள் நம் உடலின் தண்டுவடத்தில் (Spinal Cord) தீர்மானிக்கப் படுகிறது என்பது தெரியவருகிறது.
மேற்படி ஆய்வுகள் சொல்வது யாதெனில். கருவில் உள்ள குழந்தையின் தண்டுவடத்திலிருக்கும் இது சம்பந்தமான மரபணுக்களின் செயல்பாடுகள் சமச்சீரற்றவை. எனவே ஒரு குழந்தை பிறந்த பின் அக்குழந்தை எந்தக் கைப் பழக்கமுடைய குழந்தையாக வேண்டுமானாலும் இருக்கலாம். குழந்தைகளின் வலம் மற்றும் இடக் கைப் பழக்கங்களை அவர்களின் தண்டுவடம் மற்றும் மூளை தீர்மானித்து வைக்கிறது. உங்கள் எண்ண ஓட்டங்களின்படி அதனை வற்புறுத்தி மாற்ற இயலாதீர்கள். ஒன்று, மாற்றம் நிகழாமல் போகும்…இல்லையேல் நீங்கள் வற்புறுத்தித் திணிக்கும் இந்த இயற்கைக்கு மாறான மாற்றம் அக்குழந்தையின் உளத்தையும், உடலையும் பாதித்துச் சலிப்படையச் செய்யும்.<