நினைவில் நிறுத்துவோம் : தொழில்நுட்ப வளர்ச்சி கேடு தருவதா?
தொழில் நுட்ப வளர்ச்சி, உலகை, மக்களை, குறிப்பாக இளைஞர்களைச் சீரழித்துவிடுகின்றன. உலகம் அழிவை நோக்கிச் செல்கிறது என்றும், இயற்கை சீரழிகிறது என்றும், இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன என்றும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு எதிராய் வலுவான குரல் ஒலிக்கிறது என்பது உண்மை.
ஆனால் தொழில் நுட்பத்தை எப்படி சரியாகப் பயன்படுத்துவது என்று பாடம் எடுத்திருக்கிறார் உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தியைச் சேர்ந்த 13 வயது சிறுமி நிக்கிதா கடந்த ஏப்ரல் 2024 தொடக்கத்தில் ஒரு நாள் அவர்களது வீட்டுக்கு சில விருந்தினர்கள் வந்திருந்தனர். அவர்கள் வந்து விட்டுப் போன பிறகு கதவு சரியா சாத்தப்படாமல் இருந்துள்ளது. திறந்து கிடந்த வீட்டுக்குள் சில குரங்குகள் நுழைந்து விட்டன. வீட்டின் கீழ்ப் பகுதியில் கைக்கு கிடைத்ததை எல்லாம் எடுத்து அவை சிதறடித்தன.
சில குரங்குகள் மேல் மாடியில் ஏறி வர ஆரம்பித்தன. இதைப் பார்த்து நிக்கிதாவின் தங்கை அலறினாள். அதைப் பார்த்த நிக்கிதா அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும் டக்கென சுதாரித்த புத்திசாலித்தனமாக செயல்பட்டார். தனது வீட்டில் இருந்த அமேசான் அலெக்ஸாவிடம் நாய்கள் குரைக்கும் சப்தத்தை ஒலிக்கச் செய்யுமாறு கூறவே நாய் குரைக்கும் சத்தம் பலமாக கேட்க ஆரம்பித்தது. இதைப் பார்த்து மிரண்டு போன குரங்குகள் வேகம் வேகமாக வெளியேறத் தொடங்கின. சிறிது நேரத்தில் அத்தனை குரங்குகளும் வெளியேறி விட்டன. குழந்தையும் தப்பியது.
நிக்கிதாவின் இந்த புத்திசாலித்தனமான செயல் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
===
விலங்குகளைப் போலவே மனிதன் வாழ்ந்த காலத்திலிருந்து, மனித இனம் மாற்றமும், ஏற்றமும் பெற்றது தொழில்நுட்ப வளர்ச்சியால் தான். தொழில் நுட்பம் என்பது ஒரு தொழிலை எளிமையாய், விரைவாய், செம்மையாய், பெரும் அளவில் செய்வதுதான்.
மனிதன் தன் கருத்தை மற்றவர்க்குச் சொல்ல, தொடக்கக் காலத்தில் மிகவும் சிரமப்பட்டான். சைகைகள் காட்டினான், அதன் பின் உருவங்களை வரைந்து தன் கருத்தை வெளிப்படுத்தினான். பின் ஒலி எழுப்பி உணர்த்தினான். உருவம், எழுத்தானது, ஒலி மொழியானது, அதன்பின் தம் கருத்தைப் பேச்சாலும், மொழியாலும் பிறருக்கு உணர்த்தினான். இதுதான் மனித வரலாற்றில், வளர்ச்சியில் நடைமுறைக்கு வந்த முதல் தொழில்நுட்பம். மொழியும், எழுத்தும் நடைமுறைக்கு வந்தபின் மற்றவருக்குக் கருத்தைத் தெரிவிப்பது எளிதானது, விரைவானது, செம்மையானது.
ஒரு பொருளை வெட்ட, அறுக்க, துண்டுபோட கல்லை உளிபோல் கூராக்கிப் பயன்படுத்தினான். அவ்வாறு கூர் தீட்டியதுதான் கருவிகளின் முதல் தொழில்நுட்பம்.
அடுத்து கத்தி, அம்பு, வில், ஈட்டி, வாள், ரம்பம் என்று படிப்படியாகக் கருவிகளின் தொழில்நுட்பம் வளர்ந்து. உருளை, சக்கரம் இரண்டும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையை உருவாக்கின. அதன் வளர்ச்சியாய் வாகனங்கள் வந்தன.
மிதவைகள் மூலம் நீரில் பயணம் செய்ய முற்பட்டார்கள். அதன் வளர்ச்சியாய்ப் படகு, பாய் மரக் கப்பல், கப்பல் என்று தொழில்நுட்பம் வளர்ந்தது.
அடுப்படியில் அமர்ந்தவன் நீராவிக்குச் சக்தியுண்டு என்று அறிந்து, அதைப் பயன்படுத்தி வாகனங்களையும் எந்திரங்களையும் இயக்கினான்.
செம்புக் கம்பிக்கு நடுவே காந்தக் கட்டை சுழற்றப்பட்டால் மின்சாரம் உருவாகும் என்பதை அறிந்தான். அதன் வழி மின் மோட்டார், மின் கருவிகள், மின் ஒளி என்று தொழில்நுட்பம் உயர்ந்தது.
அடைக்கப்பட்ட எரிபொருள் தீப்பற்றினால் விரைந்து வெளியேறும். அப்போது அடைக்கப் பட்ட குடுவை அதன் எதிர்த் திசையில் விரைந்து செல்லும் என்பதை அறிந்து வாகனங்களை விட்டான். அந்தத் திரவத்தைப் பயன்படுத்தி ராக்கெட் கண்டுபிடித்தான்.
காற்றழுத்தம் குறைவான இடம் நோக்கி காற்று விரைந்து வரும் என்ற தத்துவத்தைப் பயன்படுத்தி விமானங்கள் அமைத்தான்.
முதலில் கம்பி வழி பேசினான்; பிறகு கம்பியில்லாமல் பேசினான்? அதன் பின் உருவம் காட்டிப் பேசினான். தொலைக்காட்சியும் செல்பேசியும் தொழில்நுட்ப உச்சம் தொட்டன.
மருத்துவத் துறையிலும், அணுத் துறையிலும், வேதியியல் துறையிலும், வேளாண் துறையிலும் தொழில்நுட்பங்கள் பல்கிப் பெருகின. அதன் விளைவாய் ஏராளமாக அவை சார்ந்த துறைகள் உருவாக்கப்பட்டன.
இன்றைக்குச் செயற்கை நுண்ணறிவுச் செயலிகள், மனிதனுக்கு இணையாக வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டன.
மனிதன் வளர்ந்தான், உலகம் வளர்ந்தது, அதன் பக்க விளைவுகளாய் கேடுகள், அழிவுகள், தப்பாகப் பயன்படுத்துதல் (Misuse) போன்ற சீர்கேடுகள் வளர்ந்தன. எந்தவொரு தொழில்நுட்பம் புதிதாய் வளர்ந்தாலும், அதை முறைகேடாய்ப் பயன்படுத்துவதும், கேடான வகையில் பயன்படுத்துவதும் நடக்கத் தொடங்கி விடுகின்றன.
தொழில்நுட்பங்கள் மனித வளர்ச்சிக்கும் உலக உயர்வுக்கும், பாதுகாப்புக்கும் உருவாக்கப்பட்டவை. அவற்றைத் தப்பாகப் பயன்படுத்துவதால் கேடுகள், அழிவுகள் உருவாகின்றனவே தவிர, தொழில் நுட்பங்களால் அல்ல என்பதை ஆழமாக மனதில் கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டாக ‘செல்பேசி’ என்பது உலகின் ஓர் உன்னத தொழில் நுட்பம். அதை ஆக்கத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும், பல்துறைப் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி எண்ணற்ற பயன்களை, வளர்ச்சிகளைப் பெறலாம், பெற முடியும்.
ஆனால், அப்படிப்பட்ட செல்பேசியைச் சூதாடவும், ஜோதிடம் பார்க்கவும், ஆபாசக் காட்சிகளைப் பார்க்கவும் பயன்படுத்திச் சீரழிவது யார் குற்றம்? சீரழிக்கப்படுகின்றவர்கள் குற்றமா? தொழில் நுட்பத்தின் (செல்பேசி) குற்றமா?
தொழில் நுட்பம் கூரிய கத்தி போன்றது. கத்தி கழுத்தையும் அறுக்கும்; பழத்தையும் அறுக்கும்; நோய் தீர்க்கும் அறுவை சிகிச்சைக்கும் பயன்படும். இங்கு பயன்படுத்துகின்றவர்களின் தவற்றைக் கத்தியின் மேல் சுமத்துவது சரியா? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
உலக வளர்ச்சிக்கும், உற்பத்திப் பெருக்கத்திற்கும் வேலை வாய்ப்பிற்கும் தொழில் நுட்பங்கள், தொழில் வளர்ச்சிகள் கட்டாயத் தேவையாகும். ஆனால், தொழில் வளர்ச்சி என்கிற பெயரில் உலகை மாசடையச் செய்வது யாருடைய குற்றம்? தொழில் வளர்ச்சியை, மாசு ஏற்படாமல் செய்ய வழிகள் உண்டு; விதிமுறைகள் உண்டு. அந்த விதிமுறைகள் மீறப்படும்போது தான் நீர் மாசுபடுகிறது, காற்று மாசுபடுகிறது. சுற்றுச்சூழலும், உடல் நலமும் பாதிக்கப்படுகிறது.
அதே போல் தான் இளைஞர்கள் இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளை, ஆக்கத்திற்கும், வளர்ச்சிக்கும், தங்களின் ஆற்றல், அறிவு, பல்திறன் மேம்பாட்டிற்கும் பயன்படுத்த வேண்டும். மாறாக, கேடான வழிகளில், அழிவு தரும் வகையில், தப்பான முறையில் கட்டாயம் பயன்படுத்தக் கூடாது. காரணம், அறிவியல் தொழில்நுட்பம் ஆக்கத்திற்கானது; மாறாக அழிவுக்கானது அல்ல. ஒரு பிஞ்சுக் குழந்தை நடத்திய பாடத்தை அனைவரும் படிப்போம்..