ஊருக்குப் போய் வந்த கரடி – 9
எனக்கு அவரு பேசுனதைக் கேட்டதும் பயம் அதிகமாயிடுச்சு. நம்ம உயிருக்கு ஆபத்துன்னு புரிஞ்சு போச்சு. எப்படி அங்கிருந்து தப்பிக்கிறதுன்னு சுத்திச் சுத்தி வந்தேன்.
நான் இருந்த இடத்திலே இருந்து அடுத்த கட்டடத்துக்குப் போறதுக்கு சின்னதா ஒரு வழி தெரிஞ்சுது. அதுவழியாப் போனேன். அது அடுத்ததா இருந்த பொம்மைக் கம்பெனிக்குள்ள போயிடுச்சு.
அங்கே போனா… நம்மளை மாதிரி கரடி, முயலு, குரங்குன்னு விதவிதமா துணியிலே வடிவமிச்சுத் தச்சு… அதுக்குள்ள பஞ்சு வச்சு அடைச்சு பொம்மைகள் செய்யிறாங்க. பத்து இருபது பெண்கள் வேலை செய்துக்கிட்டிருந்தாங்க. ஒரு சில ஆண்கள் அந்தப் பஞ்சு அடைச்ச பொம்மைகளுக்குள்ளே ஏதோ ஒரு சின்ன பிளாஸ்டிக் பொட்டலத்தை வச்சு மூடிக்கிட்டிருந்தாங்க.
அந்த ஆளுங்க எல்லாம் வாயில ஒரு துணியைக் கட்டி மூடியிருந்தாங்க. கையில உறை மாட்டி இருந்தாங்க. அது எதோ ஆபத்தான பொருள்னு மட்டும் அப்ப தெரிஞ்சுது.
‘டேய்! கம்னிபெனிக்குள்ள கரடி வந்துடுச்சு; இந்தப் பாக்கெட்டல்லாம் பத்திரமா அந்தப் பீரோக்குள்ள வைங்கடா’ன்னு ஒரு ஆளு சொன்னான்.
அதுக்குள்ள நான் அந்த இடத்துக்குப் போனதுனால அதையெல்லாம் அப்படி அப்படியே போட்டுட்டு எல்லாரும் ஓடிப் போயிட்டாங்க.ஓடும் போதே எல்லாரும் வெளியே வந்துடுங்க… வெளியே வந்துடுங்கன்னு கத்திக்கிட்டே போயி கதவையெல்லாம் மூடிட்டான் ஒரு ஆளு.
அந்த இடமே இருட்டாய்ப் போச்சு. அந்த இருட்டுல நான் எங்கே ஓடுறது ஒளியிறதுன்னு தெரியாமெ தட்டுத் தடுமாறி நடந்தேன்.
அவங்க வச்சிருந்த சின்னச் சின்ன பிளாஸ்டிக் பொட்டலம் இருந்த அட்டைப் பெட்டி என் காலுல பட்டு கீழே விழுந்துடுச்சு. பொட்டலமெல்லாம் தரையில கொட்டிப் போச்சு.
“நான் தப்பிச்சு வெளியே வந்தா போதும்னு அதை கண்டுக்காம மெதுவா கொஞ்ச தூரத்தில சுவத்தில இருந்த ஓட்டைக்குள்ளே நுழைஞ்சு வெளியே வந்துட்டேன்.
மதில் சுவரைத் தாவிக் குதிச்சுத் தாண்டி வந்து பாத்தா பெரிய கரும்புத் தோட்டம் தெரிஞ்சுது.. அதுக்குள்ள போயி ஒளிஞ்சுக்கிட்டேன்.”
“நல்லவேளை… நீ அங்கே யாருகிட்டேயும் மாட்டலே. சாமர்த்தியமா தப்பிச்சிட்டே” என்றது காட்டெருமை.
“ஆமாமா! நான் தப்பிச்சுட்டேன். ஆனா அந்த வீட்டுல இருந்த பணக்காரன் மாட்டிக்கிட்டான்.”
“என்னது மாட்டிக்கிட்டானா! அது எப்படி…?” என வியப்போடு கேட்டது குரங்கு.
“விடிஞ்ச பிறகுதான் எனக்கு விவரம் தெரிஞ்சுது. அது கூட கரும்புத் தோட்டத்துக்குத் தண்ணி பாய்ச்ச வந்த ரெண்டு பேரு பேசிக்கிட்டாங்க.”
“என்ன பேசிக்கிட்டாங்க?” என ஆவலாய்க் கேட்டது முயல்.
“டேய் முத்து! நேத்து ஊருக்குள்ள சுத்திக்கிட்டிருந்த கரடி… பொம்மைக் கம்பெனி முதலாளி வீட்டுக்குள்ள போச்சு. அங்கே இருந்து அப்படியே கம்பெனிக்கு உள்ள போயிடுச்சாம்.”
“அப்பறம் என்ன ஆச்சு?”
“அங்கே பொம்மைக்குள்ளே பஞ்சு திணிக்கிற இடத்துல போதைப் பொருளை பாக்கெட் பண்ணி அதையும் அந்த பொம்மைக்குள்ள மறைச்சு வச்சுக்கிட்டு இருந்தாங்களாம்.
அதை எல்லாம் அடுத்த மாநிலத்துக்கும் வெளிநாடுகளுக்கெல்லாம் ரகசியமா அனுப்பிக்கிட்டு இருந்துக்கிறாங்கடா…
திடீர்னு கம்பெனிக்குள்ள கரடி போனதும் இந்தத் திருட்டு வேலை செய்த ஆளுங்க பயந்துபோயி போதைப் பொருளையெல்லாம் போட்டுப்புட்டு வெளியே ஓடிட்டாங்களாம்.”
கரடியைப் புடிக்க வந்த வனத்துறை ஆளுங்க. பொம்மைக் கம்பெனியில போதைப் பொருள் கடத்துறதைப் பாத்துட்டு, காவல்துறைக்குச் சொல்ல, பொம்மை வழியா போதைப் பொருள் கடத்துன அந்த முதலாளியையும் அவரோட ஆளுங்களையும் கையும் களவுமா புடிச்சுட்டாங்க.”
ஊருக்குள்ள வந்த கரடியைப் புடிக்க முடியலெ, ரொம்ப நாளா சட்டத்தை ஏமாத்தி போதைப் பொருள் கடத்துன ஆளுகளைப் புடிச்சுட்டாங்கப்பா.
ஆமா முத்து… காட்டுக்குள்ள இருந்த கரடி ஊருக்குள்ள வந்ததால மக்களுக்குப் பயம் இருந்துது. கரடியால மனிதர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோன்னு எல்லாரும் நினைச்சோம்.
ஆனா… இந்த மாதிரி பொம்மைக் கம்பெனி பேருல… போதைப் பொருளைக் கடத்தி சின்னவங்க முதல் பெரியவங்க வரைக்கும் எல்லாரையும் போதைக்கு அடிமையாக்கி, தான் மட்டும் பணம் சம்பாதிச்ச மோசமான ஆளு மாட்டிக்கிட்டதால இந்த ஊருக்கே நல்லது நடந்திருக்கே.” என்று இரண்டு பேரும் பேசிக்கிட்டதை கேட்டதாலெ எனக்கு விவரம் தெரிஞ்சுது.
“போதைப் பொருள் கடத்துறதுக்கு நம்மளை மாதிரி பொம்மைகளைப் பயன்படுத்துனவனைப் புடிச்சுக் குடுத்த உன்னை எவ்வளவு பாராட்டுனாலும் தகும்.” என்றது முள்ளம்பன்றி.
(பயணம் தொடரும்)