சிறார் கதை : கதை சொல்லப் போறேன்
ஆதவ் தூங்கற நேரம் ஆச்சு, தூங்கலாமா?” ஆறு வயது ஆதவிடம் அப்பா கேட்டார்.
“எனக்கு இன்னும் தூக்கம் வரலப்பா. கொஞ்ச நேரம் கழிச்சுத் தூங்கறேன்”
பொம்மையோடு விளையாடிக் கொண்டிருந்த ஆதவ் தலையை நிமிர்த்தாமல் சொன்னான்.
“சீக்கிரம் தூங்கினா தான் காலைல சீக்கிரம் எந்திரிச்சு, ஸ்கூலுக்கு நேரத்துக்கு போக முடியும். பொம்மையை அது எடத்துல எடுத்து வச்சிட்டு ரூமுக்குள்ள வா” என்று சொல்லிவிட்டு அப்பா ஆதவுக்கு படுக்கையைத் தயார் செய்தார்.
“கண்ணை மூடி சமர்த்தா சீக்கிரம் தூங்கு” அப்பா ஆதவுக்கு தட்டிக் கொடுத்தார்.
ஆதவ் ஒன்றரைக் கண்ணில் பார்ப்பதும், கையையும் காலையும் ஆட்டிக்கொண்டு இப்படியும் அப்படியும் நெளிவதுமாக இருந்தான்.
“ஏன் ஆதவ் இப்படி ஒட்டகச் சிவிங்கி மாதிரி ஒரு கண்ணை மூடிக்கிட்டுத் தூங்கற?” அப்பா கேட்டார்.
“நான் தான் எனக்கு தூக்கம் வரலேன்னு சொன்னேனேப்பா. நீங்க எனக்கு ஒரு கதை சொல்லுங்க, கேட்டுக்கிட்டே நான் தூங்கறேன்” ஆதவ் அய்டியா சொன்னான்.
“சீக்கிரம் தூங்கிடணும், சரியா?”
அப்பா கதை சொல்ல ஆரம்பித்தார்…
“ஒரு ராத்திரி, காட்டுக்குள்ள இருந்த ஒட்டகச் சிவிங்கிக்குத் தூக்கம் வந்துச்சாம். எப்பவும் போல, நின்னுக்கிட்டே, ஒரு கண்ணை மட்டும் மூடி, காதை ஆட்டிக்கிட்டே தூங்க ஆரம்பிச்சதாம்”
“அந்த ஒட்டகச் சிவிங்கி மட்டும் காதை ஆட்டிக்கிட்டே தூங்கினா ஒன்னும் சொல்ல மாட்டேங்கறீங்க, என்னை மட்டும் ஆடாம தூங்கச் சொல்றீங்க. ஏம்ப்பா?” ஆதவுக்குச் சந்தேகம் வந்தது.
“அது ஆபத்து வராம இருக்கறதுக்காக அப்படி செய்யுது. உனக்கு வீட்டுக்குள்ள எந்த ஒரு ஆபத்தும் இல்ல, நானும் அம்மாவும் உன்னை பத்திரமா பாத்துக்குவோம்ல” அப்பா விளக்கினார்.
“ஆமா, யாருப்பா நடு ராத்திரில ஒட்டகச் சிவிங்கியைச் சாப்பிடுவா?”
“சிங்கம், புலி இதுல எது வேணும்னாலும் சாப்பிடாமலா இருக்கும்” நல்ல வேளை சமாளிச்சாச்சு. விடை தெரியலேன்னா, “இது கூட உங்களுக்குத் தெரிலயான்னு கேப்பான்” அப்பா தனக்குளேயே நினைத்துக் கொண்டார்.
“நடு ராத்திரியிலெல்லாம் சாப்பிடக் கூடாதுன்னு சொல்லுவீங்களே. சிங்கம், புலிக்கு அவங்க அப்பா அம்மா சொல்லித் தரலயா?”
“டேய், விலங்குகள் எல்லாம் அப்படித் தான் சாப்பிடும், நம்மள மாதிரி மூணு வேளையும் அதுக்கு சாப்பாடு கிடைக்குமா? எப்போ உணவு கிடைக்கிதோ அப்போ சாப்பிட்டுக்கும்.” அப்பா விளக்கினார்.
“அப்ப நம்ம வீட்டில பூனை, நாய் எல்லாம் வளர்த்தா அதுக்கு நடு ராத்திரில சாப்பாடு வைக்கணுமா? அப்ப அதுக்குன்னு நடு ராத்திரில சமைக்கணுமா?”.
“அப்படி இல்ல ஆதவ், வீட்ல வளர்க்கும் போது, நமக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் பழக்கத்தை மாத்திருவோம்” அதுக்கும் அப்பா விளக்கம் கொடுத்தார்.
ஆதவ் காதில் அது விழுந்த மாதிரி தெரியவில்லை. “எனக்கெல்லாம் ராத்திரி இருட்டைப் பார்த்தாலே பயமா இருக்கும். இந்த விலங்குகள் மட்டும் எப்படி இருட்டுல போகுது. அதுக்கெல்லாம் பயமாவே இருக்காதா?” அடுத்த கேள்வி வந்தது.
“பொதுவா நிறைய விலங்குகளுக்கு இருட்டுல கண் நல்லாவே தெரியும் ஆதவ். அதுனால அதுகளுக்குப் பயமா இருக்காது”
“கண்ணு சரியாத் தெரியலேன்னா அதுக்கும் கண்ணாடி போட்டு விட்ருவாங்களாப்பா? இது வரைக்கும் எந்த விலங்கும் கண்ணாடி போட்டு நான் பாத்தது இல்லையே?”
“டேய், நீ தூங்கறதுக்காக கதை சொல்றேன்னு சொன்னா, நீ என்ன இப்படி கேள்வி மேல கேள்வி கேட்டுட்டே இருக்க? பேசிகிட்டே இருந்தா எப்படித் தூங்க முடியும் ஆதவ்?”
“நீங்க தானப்பா எப்ப எந்த சந்தேகம் வந்தாலும் கேட்டுத் தெரிஞ்சிக்கணும்னு சொல்லீருக்கீங்க”
“அதுக்குன்னு நேரம் காலம் இருக்கு, இப்ப தூங்கு. கதை முடிஞ்சுது” அப்பா விட்டால் போதும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டார்.
“கதையே ஆரம்பிக்கலையே… அதெப்படி எந்த டைம்ல சந்தேகம் வரலாம் எப்ப வரக் கூடாதுன்னு தெரிஞ்சிக்கறது” ஆதவுக்கு அதிலும் சந்தேகம்.
“சரி நான் இப்ப ஒரு கதை சொல்வேன், கதையைக் கேட்டுட்டே ம்.. ம்ம் கொட்டிட்டே தூங்கணும். இதுக்கு நீ சரின்னு சொன்னா, நான் கதை சொல்வேன்” அப்பா கண்டிஷன் போட்டார்.
“ஓகேப்பா, நா அமைதியா கேட்டுட்டே தூங்கிடறேன்” ஆதவ் ‘நல்ல’ பையனாக பதில் சொன்னான்.
“ஒரு நாள் ஒரு குட்டிப் பையனுக்கு பட்டம் விடணும்னு ஆசை வந்துச்சாம். பட்டம் செஞ்சு நூலில் கட்டி அதைப் பறக்க விட்டானாம். அதுவும் மேல மேல உயரமா பறந்துச்சாம்” அப்பா கதையைத் தொடங்கி, தொடர்ந்தார்.
கதையைக் கேட்டுக் கொண்டிருந்த ஆதவுக்கு மறுபடி ஒரு சந்தேகம் வந்தது, “அந்தப் பட்டத்துக்கு மேல இருந்து கீழ பாக்கப் பயமா இருக்காதா?”
பக்கத்தில் அப்பாவிடம் இருந்து கொர்ர்… கொர்ர்…
கதை சொல்லிக்கொண்டே உறங்க ஆரம்பித்து குறட்டை விட ஆரம்பித்தார்.
“நாளைக்குக் காலைல எந்திரிச்சதும் மறக்காம இந்தச் சந்தேகத்தை அப்பாகிட்ட கேட்டுத் தெரிஞ்சிக்கணும்” நினைத்துக்கொண்டே ஆதவ் தூங்க முயன்றான்.
அப்பா சொன்ன பட்டம் எவ்வளவு உயரம் பறந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டே இருந்தவன் அப்படியே உறங்கிவிட்டான்.
காலையில் எந்திரிச்சு மறக்காமல் சந்தேகம் கேட்டிருப்பானோ?<