பறவைகள் அறிவோம் – 3 : தூக்கணாங்குருவி
நாம் வாழும் இயந்திர வாழ்க்கையில் இன்னமும் நம்மைச் சுற்றி சில பறவைகளின் ஒலியைக் கேட்க முடிகிறது நம்மால்! இயற்கையின் அழகிற்கு மேலும் அழகு கூட்டும் விதமாகவும், தனித்தன்மை வாய்ந்த உயிராகவே பறவை இனங்களை நாம் காண்கின்றோம். ஏன்? சில சமயங்களில் பறவைகளின் வண்ணங்களையும், வான்வெளியில் அவை வேகமாகப் பறந்து கொண்டும், மிதந்து கொண்டும், கடவுச்சீட்டு (Passport) இல்லாமல் கண்டங்களைத் தாண்டிச் செல்லும் போதும் நாமும் பறவைகளாகப் பிறந்து இருக்கலாம் என்ற எண்ணத்தை நம் மனதிற்குள் எழச் செய்கிறது.
பறவை இனங்கள் உருவங்களிலும், வண்ணங்களிலும் மட்டும் வேறுபடாமல் அவற்றின் பண்புகளிலும் கூட பறவைக்குப் பறவை வேறுபடுகின்றன.
தேனை மட்டும் உண்ணும் பறவைகளும், கொட்டைகள், பழங்களை மட்டும் உண்ணும் பறவை இனங்களும், அசைவ உணவை உண்ணும் பறவை இனங்களும், தானியங்களை மட்டும் உண்ணும் பறவைளும் உள்ளன. உணவு முறைகளில் மட்டும் அல்லாது வாழ்க்கை முறைகளில் வேறுபடும் பறவைகளும் உள்ளன.
சில பறவைகளுக்குக் கூடுகட்டவே தெரியாது, சில பறவைகளுக்கு நன்றாகக் கூடுகட்டத் தெரியும். சில பறவைகள் மரப் பொந்திலும், சில பறவைகள் மாடங்களிலும், சில பறவைகள் மரக்கிளைகளிலும் இன்னும் சில பறவைகள் தண்ணீரில் மிதக்கும் கூட்டைக் கட்டிக்கொண்டும் வாழ்கின்றன.
கூடு கட்டி வாழும் பறவைகளில் உள்ளுணர்வின் உந்துதலால் கலை நயத்தோடு நேர்த்தியாக அந்தரத்தில் தொங்கும் கூடு கட்டும் ஒரே பறவை தூக்கணாங்குருவி தான்.
‘மனிதன் வீடு கட்டி வாழ்கிறான்
பறவைகள் கூடுகட்டி வாழ்கின்றன.
தூக்கணாங்குருவிக்கு வேறு பெயர்களும் உள்ளன. கின்னகம், சிதகம், தூதுணம், மஞ்சட் குருவி என்பன. ஆங்கிலத்தில் பயா வீவர் என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றின் எடை 20 கிராம். இது ஊர்க் குருவி இனத்தைச் சேர்ந்தது. தலையின் மேல் பகுதியும் மார்பும் மஞ்சள் நிறமாக இருக்கும். பொதுவாக 15 செமீ நீளம் வரை வளரும். வால்பகுதி சிறியதாகவும் மேல் பகுதி தடித்தும் காணப்படும் சிறிய அலகும், புத்தி கூர்மையும் கொண்ட பறவை. இது தனக்குத் தேவையான உணவுகளான வயல்வெளியில் விளையும் நெல், கோதுமை, தினை, சோளம், வெட்டுக்கிளிகள், ஈக்கள், கரையான்கள், வண்டுகள், கம்பளிப் பூச்சிகள் என சைவம், அசைவம் இரண்டையும் விரும்பி உண்ணும்.
வளர்ந்த பறவைகள் தங்களுடைய இணைப் பறவையைத் தேர்ந்தெடுக்கச் சில வழி முறைகளைப் பின்பற்றுகின்றன. பாடுகின்ற பறவைகள் அழகான பாட்டுப் பாடி துணையைக் கவர்ந்து விடுகின்றன. சத்தமாகவும், நீளமாகவும் கூவும் ஆண் குருவியிடம் பெண் குருவி மயங்கி வந்து சேரும். சில பறவைகள் வண்ண இறக்கைகளை அசைத்தாடியும், வால் சிறகுகளை விரித்தாடியும் பெண் பறவைகளை மயக்குகின்றன.
ஆனால், ஆண் தூக்கணாங்குருவி மிக நேர்த்தியான, பாதுகாப்பான சொந்தக் கூட்டைக் காட்டித்தான் பெண் பறவையின் இசைவைப் பெறுகின்றது.
கூடு கட்டத் தெரியாத எந்த ஆண் தூக்கணாங்குருவியையும் பெண் குருவி இணை சேரவிடுவதில்லை.
கோடி கோடியாய்க் கொட்டிக் கொடுத்தாலும் தூக்கணாங்குருவியைப் போல் நாம் வீடுகட்ட முடியாது. கிராமப் புறங்களில் உள்ள வயல்வெளிகளில் வளர்ந்து நிற்கும் நெடு மரங்களிலும், ஈச்சமரம், கருவேலமரம், இலந்தைமரம், பனைமரம் போன்ற மரங்களின் கிளைகளின் நுனிப் பகுதியில் தென்னைநார் அல்லது பனைநாரைக் கொண்டு அழுத்தமான முதல் முடிச்சைப் போடும். இந்த முடிச்சு சூறாவளிக் காற்று வந்து கூட்டைத் தாக்கினாலும் கீழே அறுந்து விழாத அளவிற்கு வலிமையானது. பின்னர் தேங்காய் நார், வைக்கோல், உறுதியான தர்ப்பைப்புல் ஆகியவற்றைப் பயன்படுத்தி தன் சிறிய அலகால் 600க்கும் மேற்பட்ட தடவைகள் பறந்து சென்று மூலப் பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக தூக்கிக் கொண்டு வந்து மெது, மெதுவாய் வளைவு நெளிவுகளோடு கூட்டை நேராக ஒரு பின்னல், அதிலிருந்து சுரைக்காய் வடிவிலான வளைவான அமைப்பும், அவற்றின் உட்புறத்தில் ஆண், பெண் குருவிகள் தனியாக இருக்க படுக்கை அறையும், முட்டையிட்டுக் குஞ்சுகளை வளர்க்கத் தனி அறையும், தானியங்களைச் சேமித்துவைக்க தனி அறையும் அமைத்து கூட்டைக் கட்டுகின்றது.
இவ்வமைப்பு வேலைகள் முடிந்த பின்னர் ஆண் குருவி தான் கட்டிய சகல வசதியுடன் கூடிய வீட்டைக் காண வருமாறு பெண் தூக்கணாங் குருவிக்கு அழைப்பு விடுக்கும். பெண் குருவி வந்து பார்த்து, வீடு (கூடு) பிடித்திருந்தால் மட்டுமே சம்மதம் தெரிவிக்கும். இவ்வாறு சம்மதம் கிடைத்த பின்னர் சுரைக்காய் வடிவிலான அமைப்பிற்கு கீழே நீளமான குழாய் போல் தொங்கும் ஒரு வளைவுப் பகுதியைக் கட்டத் தொடங்கும் அதனைத் தொடர்ந்து பருவ மழையின் காலத்திற்கு ஏற்ப வாசலை வடக்கு நோக்கியோ அல்லது தெற்கு நோக்கியோ வாசல் வைத்து சுமார் 18 நாட்களில் காற்றோட்ட வசதியுடன் கூடிய கூட்டைக் கட்டி முடிக்கும்.
வாசல் அமைத்துக் கூடுகட்டும் ஒரே ஒரு பறவை தூக்கணாங்குருவியே!
பின்னர் கூட்டின் உட்பகுதியில் களி மண்ணையும், மாட்டுச் சாணத்தையும் கொண்டு கூடு முழுவதும் தன் சிறிய அலகால் அப்பி வைத்து விடும். இது பார்ப்பதற்கு நம் வீடுகளில் காரை பூசுவது போல் இருக்கும். பின்னர் களிமண்ணின் மேல்பகுதியில் மின்மினிப் பூச்சிகளையும் மின்னும் பிற பூச்சிகளையும் ஓட்டி வைத்து விடும் இரவு நேரங்களில் மின்மினிப் பூச்சிகள் மின்னுவதால் கூட்டின் உட்புறத்தில் லிணிஞி பல்பு எரிவது போல் வெளிச்சம் கிடைக்கும். இந்த வெளிச்சத்தில் இரவுப் பொழுதை நிம்மதியாகக் கழிக்கின்றன. ஒரு பருவத்தில் தூக்கணாங்குருவி நான்கு முதல் அய்ந்து கூடுகள் வரை கட்டும்.
“மனிதன் வாழ பறவைகள் விதைகளை விதைக்கின்றன.
பறவைகள் வாழ மனிதர்கள் காடுகளைப் பாதுகாக்க வேண்டும்.”