விளையும் பயிர்
ஜெர்மன் நாட்டின் கணிதவியல் மேதையாகத் திகழ்ந்தவர் கார்ல் ஃபிரீட்ரிக் காஸ். (carl friedrich gauss) 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர், கணிதத்தில் மட்டுமன்றி வானவியலிலும் ஈடுபாடு கொண்டவர்.
பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது (7வயது) கணக்கு ஆசிரியர் வகுப்பு மாணவர்களிடம், 1 முதல் 100 வரையுள்ள எண்களைக் கூட்டி விடை சொல்லும்படிக் கூறினார். ஆசிரியர் கூறிய ஒரு சில நிமிடத்தில் 5050 என்று விடையினை எழுதிக் கொடுத்துவிட்டார் காஸ். வியப்படைந்த ஆசிரியர், இந்த விடையினை எப்படி விரைவில் கண்டுபிடித்தாய் என்று கேட்டார்.
உடனே காஸ், ஒவ்வொரு எண்ணாகக் கூட்டினால் நேரமாகுமே என யோசித்து, விரைவில் பதில் கூற முயற்சித்தேன். முதல் மற்றும் இறுதி எண்களின் கூட்டுத்தொகை 101 ஆகவும், அவற்றை நீக்கிய பின்பு மீதமுள்ள முதல் மற்றும் இறுதி எண்களின் கூட்டுத்தொகை 101 ஆகவும் இருப்பதைக் கண்டுபிடித்தேன்.
1+100 = 101; 2+99 = 101; 3+98 = 101. இதன் இறுதி இணை 50+51 = 101.
எனவே, இதில் 50 மடங்கு 101 என்றும் அல்லது 101 மடங்கு 50 என்றும் இருக்கிறது என்று முடிவு செய்தேன். இந்தத் தொடரின் கூட்டுத் தொகையை 50X101=5050 என்று கண்டறிந்தேன் என்று பதில் அளித்துள்ளார்.